தமிழ்நாடு அங்கீகாரம் பெற்ற தனியார் பள்ளிகளுக்கான ஒழுங்குமுறை சட்ட விதிகளை எதிர்த்து கன்னியாஸ்திரிகள் சபை சார்பில் தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசு இரண்டு வாரங்களில் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில், திருச்சி புனித அன்னாள் கன்னியாஸ்திரியர் திருச்சபை சார்பில் அதன் தலைவர் ரெஜினாள் தாக்கல் செய்த மனுவில், “எங்களது திருச்சபை சார்பில் கல்வி, சமூகம், ஆன்மிகம் ஆகியவற்றை முன்னெடுக்கும் வகையில் தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கேரளா, புதுச்சேரி, மத்திய பிரதேசம் உள்ளிட்ட 9 மாநிலங்களில் சிறுபான்மை கல்வி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. தமிழகத்தைப் பொறுத்தமட்டில் 48 உதவி பெறும் பள்ளிகளும், 12 பகுதி உதவி பெறும் பள்ளிகளும், 29 சுயநிதி பள்ளிகளும், கல்லூரிகளும் இயங்கி வருகின்றன. தமிழ்நாட்டில் அங்கீகாரம் பெற்ற தனியார் பள்ளிகளை முறைப்படுத்தி ஒழுங்குபடுத்தும் விதமாக கடந்த 2019-ம் ஆண்டு தமிழ்நாடு தனியார் பள்ளிகள் ஒழுங்குபடுத்துதல் சட்டம் மற்றும் தமிழ்நாடு தனியார் பள்ளிகள் ஒழுங்குபடுத்துதல் விதிகள் திருத்தப்பட்டு, அரசிதழில் வெளியிடப்பட்டது.
அதன்படி கடந்த ஜனவரி முதல் விதிகள் வகுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளன. ஆனால் இந்த விதிகள் சிறுபான்மை கல்வி நிறுவனங்களின் தனிப்பட்ட உரிமைகளில் தலையீடு செய்வது போல் உள்ளது. குறிப்பாக சிறுபான்மையின கல்வி நிறுவனங்கள் பள்ளிகள் தொடங்க அரசிடம் முன்அனுமதி பெற வேண்டும். சிறுபான்மை அந்தஸ்து கோரி புதிதாக விண்ணப்பிக்க வேண்டும். அந்த கல்வி நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட அங்கீகாரத்தை திரும்பப்பெறவோ அல்லது பள்ளிகளை நிர்வகிக்கும் அமைப்பின் செயலர் உள்ளிட்ட நிர்வாகிகளை நீக்கவோ அரசுக்கு அதிகாரம் உள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விதிகள், அரசியலமைப்பு சாசனம் வழங்கியுள்ள சிறுபான்மையினருக்கான உரிமைகளை பறிக்கும் வகையில் உள்ளது. மேலும் இவை உச்ச நீதிமன்ற தீர்ப்புகளுக்கு எதிரானது மட்டுமின்றி சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்கு பொருந்தாது. எனவே, இவற்றை செல்லாது என அறிவித்து ரத்து செய்ய வேண்டும். அதுவரை இந்த விதிகளை அமல்படுத்த தடை விதிக்க வேண்டும்” என கோரியிருந்தார்.
இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா மற்றும் நீதிபதி டி. பரத சக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஐசக் மோகன்லால் மற்றும் வழக்கறிஞர் காட்சன் ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர். அரசு தரப்பில் அரசு ப்ளீடர் பி.முத்துக்குமார் ஆஜராகி இதுதொடர்பாக பதிலளிக்க அவகாசம் அளிக்க வேண்டும் என்று கோரினார். இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், மனு தொடர்பாக தமிழக அரசு இரண்டு வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர்.
No comments:
Post a Comment