பொறியியல் படிப்புக்கான முதலாமாண்டு வகுப்புகள் செப்டம்பர் 15-ம் தேதிமுதல் தொடங்கப்பட வேண்டும் என்று ஏஐசிடிஇ அறிவுறுத்தியுள்ளது.
ஒவ்வொரு கல்வியாண்டும் கல்லூரிகள் திறப்பு, பருவத்தேர்வு நடத்தப்படும் தேதிகள் உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய வருடாந்திர கால அட்டவணையை அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் குழுமம் (ஏஐசிடிஇ) வெளியிட்டு வருகிறது. அதன்படி வரும் கல்வியாண்டுக்கான(2023-24) கால அட்டவணை மற்றும் வழிகாட்டு நெறிமுறைகளை ஏஐசிடிஇ தற்போது வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:
தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களுக்கு ஏஐசிடிஇ சார்பில் அங்கீகார நீட்டிப்புக்கான அனுமதி வழங்கும் பணிகள் ஜூன் 30-ம் தேதியுடன் நிறைவு பெறும். தொடர்ந்து கல்லூரிகளுக்கு அங்கீகார நீட்டிப்பு வழங்குதலை ஜூலை 31-ம் தேதிக்குள் பல்கலைக்கழகங்கள் உறுதிசெய்ய வேண்டும். சேர்க்கை கலந்தாய்வை முடித்து முதலாமாண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் செப்டம்பர் 15-ம் தேதிமுதல் தொடங்கப்பட வேண்டும்.
தொலைதூர, திறந்தநிலை மற்றும் இணையவழிப் படிப்புகளைக் கற்றுத்தரும் நிறுவனங்கள் மாணவர் சேர்க்கை செயல்பாடுகளில் யுஜிசி வழிமுறைகளைப் பின்பற்றி செயல்பட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. பொறியியல் கலந்தாய்வை நடத்துவதற்கான தேதி விவரங்கள் குறிப்பிடப்படவில்லை.
No comments:
Post a Comment