டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் குறிப்பிட்ட சென்டர்களில் பயின்ற மாணவர்கள் அதிக அளவில் தேர்வாகியுள்ளதாகவும், அதில் முறைகேடு நடந்துள்ளதாகவும் எழுந்த புகார் தொடர்பாக நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விளக்கம் அளித்துள்ளார்.நில அளவர் மற்றும் குரூப்-4 தேர்வில் ஒரே பயிற்சி மையத்தில் படித்தவர்கள் அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளது சர்ச்சையாகியுள்ளது. நில அளவர்,வரைவாளர் உள்ளிட்ட பணிகளில் 1,089 காலியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு கடந்த நவம்பர் 6-ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்வின் முடிவுகள் பிப்ரவரி 15-ம் தேதி வெளியாகின..JoinTelegram
இதற்கிடையே, தேர்வில் வெற்றி பெற்றவர்களின் பதிவெண்கள் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. அதில், காரைக்குடியில் ஒரு தேர்வு மையத்தில் மட்டும் 600-க்கும் மேற்பட்டோர் தேர்ச்சி பெற்றுள்ளது சந்தேகத்தை எழுப்பியுள்ளது. அவர்கள் அனைவரும் ஒரு குறிப்பிட்ட தனியார் பயிற்சி மையத்தில் படித்தவர்கள் எனக் கூறப்படுகிறது.இதுதவிர, சமீபத்தில் வெளியான குரூப்-4 முடிவுகளிலும், தென்காசியை சேர்ந்த ஒரு தனியார் பயிற்சி மையத்தில் படித்த 2 ஆயிரம் பேர் வரை தேர்வில் வெற்றி பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
இந்த நிலையில் தமிழக சட்டப்பேரவை இன்று காலை கூடியதும், தேர்வு முறைகேடு தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார்.பின்னர் பேசிய எடப்பாடி பழனிசாமி,காரைக்குடியில் ஒரே மையத்தில் நில அளவர் தேர்வு எழுதிய 600 பேர் தேர்ச்சி பெற்றது எப்படி ?.ஒரே மையத்தில் இருந்து அடுத்தடுத்த பதிவெண் கொண்ட தேர்வர்கள் தேர்ச்சி பெற்றது பற்றி விசாரணை வேண்டும், என்றார்.
இதற்கு பதில் அளித்து பேசிய நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், காரைக்குடியில் ஒரே மையத்தில் தேர்வு எழுதிய 615 பேர் தேர்ச்சி பெற்றுள்ளது தெரியவந்துள்ளது; இதுகுறித்து சம்பந்தப்பட்ட மைய அதிகாரியிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது; முன்பு நடைபெற்ற தேர்வுகளில் இதுபோன்ற தேர்ச்சி உள்ளதா என ஒப்பிட்டு அறிக்கை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது; டி.என்.பி.எஸ்.சி தேர்வுகளில் சீர்திருத்தம் மேற்கொள்ள வேண்டியுள்ளது. தென்காசி மாவட்டத்தில் மொத்தமே 397 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். தென்காசியில் 2000 பேர் தேர்ச்சி பெற்றதாக விளம்பரம் செய்த நபர் தவறாக விளம்பரம் செய்துள்ளார், என்றார்.
No comments:
Post a Comment