கல்லுாரி உதவி பேராசிரியர் பணி தேர்வுக்கான அறிவிப்பு லீக்? - ஆசிரியர் மலர்

Latest

 




 


20/03/2023

கல்லுாரி உதவி பேராசிரியர் பணி தேர்வுக்கான அறிவிப்பு லீக்?

 

Tamil_News_large_3271106.jpg?w=360&dpr=3

தமிழக பள்ளிக் கல்வித் துறையின் அங்கமாக செயல்படும், ஆசிரியர் தேர்வு வாரியத்தின் பெயரில், கல்லுாரி உதவி பேராசிரியர் பணி நியமனம் தொடர்பான அறிவிக்கை நேற்று சமூக வலைதளங்களில் வெளியானது. பின்னர், அது போலியானது என பள்ளிக் கல்வித் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.


பிளஸ் 2 தேர்வில், 50 ஆயிரம் மாணவர்கள், 'ஆப்சென்ட்' ஆன விவகாரத்தை தொடர்ந்து, பள்ளிக் கல்வித் துறைக்கு மற்றொரு தலைவலியாக நேற்று, உதவி பேராசிரியர் பணிக்கான நியமன அறிவிப்பு வெளியானது.


பள்ளிக் கல்வித் துறை கமிஷனர் நந்தகுமார் தலைமையில் இயங்கும் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் பெயரில், இந்த அறிவிக்கை சமூக வலைதளங்களில் நேற்று பரவியது.

லீக் ஆனதா?


மொத்தம், 47 பக்கங்கள் உள்ள இந்த அறிக்கையில், அரசு கலை அறிவியல் கல்லுாரிகளில், உதவி பேராசிரியர் பணிக்கு, 4,136 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாகவும், இதற்கான, 'ஆன்லைன்' விண்ணப்ப பதிவு, ஏப்., 15ல் துவங்கும் என்றும் கூறப்பட்டிருந்தது.


மேலும், தேர்வுக்கான விதிகள், இடஒதுக்கீட்டு அடிப்படையில் துறை வாரியாக காலியாக உள்ள இடங்கள் உள்ளிட்ட அனைத்தும், 47 பக்க அறிக்கையில் இடம் பெற்றிருந்தன.


இந்த அறிவிக்கை, ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை.


இதுகுறித்து விசாரித்த பின்னரே போலியானது என, பள்ளிக் கல்வித் துறை தரப்பில் வாய்மொழியாக கூறப்பட்டுள்ளது. உயர் கல்வித் துறை தரப்பில், அதிகாரப்பூர்வமாக போலி என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


பணி நியமன தேர்வுக்கான அறிவிக்கை போலியானதா அல்லது ஆசிரியர் தேர்வு வாரியத்தில் தயார் செய்யப்பட்டு, முன்கூட்டியே, 'லீக்' ஆகி விட்டதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.


தேர்வுகள் ரத்து


கடந்த காலங்களில், ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய சில தேர்வுகளில் புகார்கள் எழுந்து, உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, அந்த தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன.


இந்நிலையில், தற்போது பணி நியமன தேர்வு அறிவிக்கையும், 'லீக்' ஆகியது உண்மையானால், ஆசிரியர் தேர்வு வாரியம் வழியாக, போட்டி தேர்வுகளை நேர்மையாக நடத்த முடியுமா என, கல்வியாளர்களுக்கு சந்தேகம் எழுந்துள்ளது.


இதற்கிடையில், இது தொடர்பான விசாரணையில், பள்ளிக் கல்வித் துறை இறங்கி உள்ளது. போலியான அறிவிக்கை வெளியிட்டதாக போலீசிலும் புகார் தரப்பட்டுள்ளது.

 வேலைவாய்ப்பு செய்திகள் 2023

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459