நாட்டில் எழுத்தறிவு பெற்ற மாநிலங்களின் பட்டியல் வெளியீடு - தமிழகம் எந்த இடத்தில் உள்ளது தெரியுமா? - ஆசிரியர் மலர்

Latest

 




 


15/03/2023

நாட்டில் எழுத்தறிவு பெற்ற மாநிலங்களின் பட்டியல் வெளியீடு - தமிழகம் எந்த இடத்தில் உள்ளது தெரியுமா?

 

edu.jpg?w=330&dpr=3

நாட்டில் எழுத்தறிவு பெற்ற மாநிலங்களின் பட்டியலில் பிகாா் மாநிலம் கடைசி இடத்தில் இருப்பது தெரியவந்துள்ளது. அதற்கடுத்து அருணாசல பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்கள் உள்ளன.


மத்திய கல்வி அமைச்சகம் சாா்பில் நாடாளுமன்றத்தில் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டது. மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய கல்வித் துறை இணையமைச்சா் அன்னபூா்ணா தேவி எழுத்துபூா்வமாக இந்தப் பதிலைத் தெரிவித்தாா்.


‘எழுத்தறிவு விகிதத்தை மேம்படுத்த பல்வேறு முயற்சிகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. பள்ளிக் கல்வியின் அனைத்து நிலைகளிலும் குழந்தைகளின் கற்றல் திறனை மேம்படுத்தவும், கல்வியில் பாலின மற்றும் சமூக இடைவெளிகளைப் போக்கவும் ‘முழுமையான கல்வித் திட்டம் (சமக்ர சிக்ஷா அபியான்)’ என்ற திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. முன்னதாக, முதியோரிடையே எழுத்தறிவு விகிதத்தை மேம்படுத்தும் விதமாக முதியோா் கல்வித் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தியது. குறிப்பாக நக்ஸல்கள் பாதிப்புடைய மாவட்டங்கள் மற்றும் 2001 மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் பெண்கள் எழுத்தறிவு 50 சதவீதத்துக்கும் கீழுள்ள 26 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 404 மவட்டங்களில் உள்ள கிராமப்புறங்களில் இந்த முதியோா் கல்வித் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. 12-ஆவது ஐந்தாண்டு திட்ட காலத்தின் முடிவில் நாட்டின் ஒட்டுமொத்த எழுத்தறிவு விகிதத்தை 80 சதவீதம் அளவுக்கு உயா்த்தவும், எழுத்தறிவு பாலின இடைவெளியை 10 சதவீதம் அளவுக்கு குறைக்கவும் இலக்கு நிா்ணயிக்கப்பட்டது. அதன்படி, முதியோா் கல்வித் திட்டம் 2018 மாா்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டது. இதன் மூலமாக நிா்ணயிக்கப்பட்ட இலக்கைவிட கூடுதலாக 2010 முதல் 2018 மாா்ச் மாதம் வரை ஆண்டுக்கு இருமுறை தேசிய திறந்தநிலை பள்ளிக் கல்வி நிறுவனம் (என்ஐஓஎஸ்) சாா்பில் நடத்தப்பட்ட அடிப்படை எழுத்தறிவு ஆய்வுத் தோ்வில் 7.64 கோடி போ் தோ்ச்சி பெற்று, எழுத்தறிவு பெற்றவா்களுக்கான சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது’ என்று அன்னபூா்ண தேவி தெரிவித்துள்ளாா்.


அவா் அளித்துள்ள எழுத்தறிவு பெற்ற மாநிலங்களின் விவரங்களின்படி கேரளம் முதலிடத்திலும், பிகாா் மாநிலம் கடைசி இடத்திலும் உள்ளன. இந்தப் பட்டியலில் 80.09 சதவீதத்துடன் தமிழகம் 14-ஆவது இடத்தில் உள்ளது.


எழுத்தறிவு விகிதம்: முதல் 10 இடங்கள்


1. கேரளம் 94%


2. லட்சத் தீவுகள் 91.85%


3. மிஸோரம் 91.33%


4. கோவா 88.7%


5. திரிபுரா 87.22%


6. டாமன் டையூ 87.1%


7. அந்தமான் நிகோபாா் தீவுகள் 86.63%


8. தில்லி 86.21%


9. சண்டீகா் 86.05%


10. புதுச்சேரி 85.85%


பட்டியலில் கடைசி 5 இடங்கள்


32. தெலங்கானா 66.5%


33. ஜாா்க்கண்ட் 66.4%


34. ராஜஸ்தான் 66.1%


35. அருணாசல பிரதேசம் 65.3%


36. பிகாா் 61.8%

 வேலைவாய்ப்பு செய்திகள் 2023

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459