தமிழ்நாட்டில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் படிக்கும் 20 மாவட்டங்களை சேர்ந்த 10 மற்றும் பிளஸ்2 மாணவர்களின் சுய விவரங்கள் விற்பனை செய்யப்பட்டது தொடர்பாக, சைபர் க்ரைம் போலீசார் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளிடம் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர்.
தமிழ்நாடு முழுவதும் 10 மற்றும் பிளஸ்2 மாணவர்களுக்கு பொது தேர்வு நடந்து வருகிறது. இதற்கிடையே கடந்த வாரம் சமூக வலைத்தளங்களில் மாணவர்களின் சுய விவரங்கள் வேண்டும் என்றால் இ-மெயில் மற்றும் தொலைபேசியில் தொடர்பு கொள்ளுங்கள் என்ற பதிவு செய்யப்பட்டிருந்தது. அதை தொடர்ந்து ஆடியோ ஒன்றும் வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பரவியது.
அந்த ஆடியோவில், தற்போது அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் படித்து வரும் 10 மற்றும் பிளஸ் 2 மாணவர்களில் விருதுநகர், தென்காசி, திருச்சி, மதுரை என 20 மாவட்ட மாணவர்களின் சுய விவரங்கள் எங்களிடம் உள்ளது. இந்த விவரங்கள் உங்களுக்கு வேண்டும் என்றால், ஒரு மாவட்டத்தில் உள்ள பிளஸ்2 மாணவரின் சுய விவரங்களுக்கு ரூ.5 ஆயிரம், 10ம் வகுப்பு மாணவர்களின் என்றால் ரூ.3 ஆயிரம் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. போன் ஆப் பணம் செலுத்தினால் பிளஸ்2 மாணவர்களின் ஒரு மாவட்ட விவரங்கள் ரூ.3 ஆயிரத்திற்கு வழங்கப்படும் என்று ஒருவர் பேசுவது போன்ற ஆடியோ வெளியாகியது. இது தமிழ்நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அதேநேரம், தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறையில் 10 மற்றும் பிளஸ்2 மாணவர்களின் முகவரி, தொடர்பு எண்கள் என அனைத்து சுய விவரங்களும் ரகசியமாக பாதுகாக்கப்பட்டு வரும் நிலையில், தனியார் பொறியியல், தொழில் நுட்ப நிலையங்களின் நிர்வாகிகளுக்கு அவை சென்றது எப்படி என குழப்பம் நிலவியது. பள்ளிக்கல்வித்துறையில் அதிகாரிகளுடன் நெருக்கமாக இருக்கும் சிலர் பணத்திற்கு ஆசைப்பட்டு இந்த விவரங்களை விற்பனை செய்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்த மோசடி பின்னணியில் உள்ள நபர்கள் யார் என்பது குறித்து ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்துறை அதிகாரி புண்ணியக்கோடி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் ஒன்று அளித்துள்ளார். அதன்படி மத்திய குற்றப்பிரிவு சைபர் க்ரைம் போலீசார் விசாரணை நடத்திய போது, அனைத்தும் ஆன்லைன் மூலம் மோசடி நடந்துள்ளது. மாணர்களின் சுய விவரங்கள் அனைத்தும் வாட்ஸ் அப் மற்றும் இ-மெயில் மூலம் தனியார் கல்வி நிறுவனங்களுங்களுக்கு விற்பனை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது.
பள்ளிக்கல்வித்துறை சார்பில் ரகசியமாக பராமரிக்கப்பட்டு வந்த தகவல் எப்படி வெளியானது என்று விசாரணை நடத்திய போது, மாணவர்களின் டேட்டாக்களை அனைத்தும் ‘ஹேக்’ செய்து அதன் மூலம் மாணவர்களின் சுய விவரங்கள் திருடியது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மாணவர்களின் விவரங்கள் ஹேக் செய்யப்பட்டு இருந்தாலும், பள்ளிக்கல்வித்துறையில் அதிகாரிகள் துணை இல்லாமல் இந்த மோசடி நடக்க வாய்ப்பு இல்லை என்று தொழில்நுட்ப வல்லுநர்கள் கருதுகின்றனர். இதனால், மோசடி தொடர்பாக சம்பந்தப்பட்ட பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் சிலரை நேரில் அழைத்து விசாரணை நடத்த சைபர் க்ரைம் போலீசார் முடிவு செய்துள்ளனர்.
அதேநேரம், 10 மற்றும் பிளஸ்2 மாணவர்களின் சுய விவரங்கள் விற்பனை செய்த மோசடி நபர்கள், விவரங்களை பணம் கொடுத்து வாங்கிய தனியார் கல்வி நிறுவனங்களிடமும் விசாரணை நடத்த உள்ளதாக சைபர் க்ரைம் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொது தேர்வு எழுதும் மாணவர்களின் சுய விவரங்கள் வெளியான விவகாரம் மாணவர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாணவர்களின் சுய விவரங்கள் அனைத்தும் வாட்ஸ் அப் மற்றும் இ-மெயில் மூலம் தனியார் கல்வி நிறுவனங்களுங்களுக்கு விற்பனை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது.
No comments:
Post a Comment