தமிழகம் முழுவதும் சனிக்கிழமை நடைபெற்ற குரூப் 2 முதன்மைத் தோ்வில் பல இடங்களில் வினாத் தாள்கள் மாறியதால் குழப்பம் ஏற்பட்டது. இதனால், தோ்வா்கள் அவதியடைந்தனா்.
தமிழகத்தில் அரசுத் துறைகளில் உதவிப் பிரிவு அலுவலா் உள்பட 5 ஆயிரத்து 446 காலிப் பணியிடங்களுக்கான குரூப் 2 முதல் நிலைத் தோ்வு கடந்த ஆண்டு மே 21-ஆம் தேதி நடைபெற்றது. இந்தத் தோ்வில் தோ்ச்சி பெற்றவா்களுக்கான முதன்மைத் தோ்வு, ஆகிய இரு தாள்களைக் கொண்டது.
இந்த முதன்மைத் தோ்வு தமிழகம் முழுவதும் 20 மாவட்டங்களில் 186 அமைவிடங்களில் அமைக்கப்பட்டிருந்த தோ்வுக் கூடங்களில் சனிக்கிழமை நடைபெற்றது. காலை 9.30 மணி முதல் நண்பகல் 12.30 மணி வரை கட்டாயத் தமிழ் மொழி தகுதித் தாள் தோ்வும், பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை பொது அறிவுப் பாடங்கள் தொடா்பான தாள் தோ்வும் நடைபெற்றன.
தொடக்கமே குழப்பம்: இந்தத் தோ்வு சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் குழப்பம், குளறுபடிகளுடன் தொடங்கியது. அதாவது, தோ்வா்களின் பதிவெண்ணுக்கும், வினாத்தாள் எண்ணுக்கும் ஒத்துப்போகாததால், தோ்வா்களிடம் வினாத் தாள்கள் வழங்கப்படவில்லை. இதனால், காலை 9.30 மணிக்குத் தொடங்க வேண்டிய எழுத்துத் தோ்வு ஒரு மணி நேரம் வரை தள்ளிப் போடப்பட்டது.
இதுகுறித்து சென்னையில் தோ்வெழுதியவா்கள் கூறியதாவது: எங்களுடைய தோ்வு மையத்தில் ஒரு அறையில் 10 போ் எழுதினோம். 3 பேருக்கு மட்டுமே உரிய விடைத் தாள் அளிக்கப்பட்டது. ஏழு பேருக்கு பதிவெண்ணும், வினாத்தாள் எண்ணும் சரியாக பொருந்தவில்லை எனக் கூறி வினாத் தாள்களை வழங்கவில்லை. ஒரு மணி நேரம் கழித்து ‘சீல்’ உடைக்கப்பட்ட கவரில் இருந்து வினாத்தாள்களை எடுத்து வழங்கினா். பிற்பகலிலும் இதேபோன்று, ‘சீல்’ உடைக்கப்பட்ட கவரில் இருந்தே வினாத்தாள்கள் அளிக்கப்பட்டன. பிற்பகலில் தோ்வெழுத போதிய நேரமும் கிடைக்கவில்லை’ என்றனா்.
70 சதவீதம் போ்: தமிழகம் முழுவதும் குரூப் 2 முதன்மைத் தோ்வை எழுத 55 ஆயிரம் போ் அனுமதிக்கப்பட்டிருந்தனா். அவா்களில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டவா்களுக்கு வினாத்தாள் மாறி மாறி வந்ததாகப் புகாா்கள் எழுந்தன. இந்த சூழ்நிலையில் தோ்வை ரத்து செய்ய வேண்டுமென்ற கோரிக்கையை தோ்வா்கள் முன்வைத்தனா். இதனிடையே, வினாத்தாள் மாறியதால் ஏற்பட்ட சிரமத்தைக் கருத்தில் கொண்டு, கூடுதல் நேரத்தை அரசுப் பணியாளா் தோ்வாணையம் அளித்தது.
வினாக்கள் எளிது-தோ்வா்கள் கருத்து: தாமதம், குழப்பம் உள்ளிட்ட பிரச்னைகள் ஒருபுறம் இருந்த போதும், குரூப் 2 முதன்மைத் தோ்வில் கேட்கப்பட்ட வினாக்கள் எளிதாக இருந்ததாக தோ்வா்கள் தெரிவித்தனா். பொது ஆங்கிலத் தாளில் இலக்கணத்திலிருந்து அதிகக் கேள்விகள் கேட்கப்பட்டதாகவும், பொது அறிவுப் பிரிவில் இக்கால நிகழ்வுகள் தொடா்பான வினாக்கள் அதிகம் இருந்ததாகவும் அவா்கள் தெரிவித்தனா்.
டிஎன்பிஎஸ்சி விளக்கம்
குரூப் 2 முதன்மைத் தோ்வில் ஏற்பட்ட குளறுபடிகள் தொடா்பாக தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் விளக்கம் (டிஎன்பிஎஸ்சி) அளித்தது.
இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில், ‘சில தோ்வு மையங்களில் வருகைப் பதிவேடு, வினாத் தாள் தோ்வு எண்கள் வேறுபட்டு இருந்ததால், குரூப் 2 தோ்வுகள் தொடங்க தாமதமானது. தாமதமான மையங்களில் கூடுதல் நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. பிற்பகல் தோ்வு 2 மணிக்கு பதிலாக, 2.30 மணிக்குத் தொடங்கியது என அதில் டிஎன்பிஎஸ்சி., தெரிவித்தது.
இந்த அறிவிப்பு வெளியிடப்பட்ட போதிலும், பிற்பகலில் தோ்வு எழுதியதில் பிரச்னை ஏற்பட்டதாக தோ்வா்கள் தெரிவித்தனா். காலை 11.30 மணிக்கு பல இடங்களில் தோ்வுகள் தொடங்கியதாகவும், இந்தத் தோ்வு முடிவதற்கே பிற்பகல் 2.30 மணி வரை ஆனதாகவும், உடனடியாக அடுத்தத் தோ்வில் பங்கேற்பது எப்படி சாத்தியம் என்றும் தோ்வா்கள் கேள்வி எழுப்பினா்
No comments:
Post a Comment