கற்பித்தல் மற்றும் நிர்வாகப் பணிகளில் சிறந்து விளங்கும் அரசு பள்ளிஆசிரியர்கள் மற்றும் அதிகாரிகளை வெளிநாடுகளுக்கு கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்ல பள்ளிக்கல்வித் துறை முடிவுசெய்துள்ளது.
தமிழக பள்ளிக்கல்வித் துறையில் அரசு பள்ளிகளின் தரத்தை மேம்படுத்த பல்வேறு செயல்பாடுகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் கற்றல் மற்றும் இதர கலைச் செயல்பாடுகளில் மாநில அளவில் சிறந்து விளங்கும் அரசு பள்ளி மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு வெளி நாடுகளுக்கு கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லப்படுகின்றனர். அதன்படி அரசு பள்ளிகளில் நடத்தப்பட்ட வினாடி வினா போட்டிகளில் சிறப்பாக செயல்பட்ட 68 மாணவர்கள் கடந்த நவம்பரில் துபாய் நாட்டுக்கு கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லப்பட்டனர்.
இதைத்தொடர்ந்து நடப்பு கல்வி ஆண்டிலும் கலைத் திருவிழா போட்டிகள் மற்றும் கற்றலில் நன்றாக செயல்பட்ட மாணவர்களும் வெளிநாடுகளுக்கு கல்விச் சுற்றுலா செல்ல இருக்கின்றனர். இதற்கான முன்னேற்பாடுகளை பள்ளிக்கல்வித் துறை முழுவீச்சில் மேற்கொண்டு வருகிறது. இதற்கிடையே, மாணவர்களை போல் அரசு பள்ளி ஆசிரியர்கள், மற்றும்அதிகாரிகளையும் வெளிநாடுகளுக்கு கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்வதற்கு பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டு வருகிறது.
இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை உயர் அதிகாரிகள் கூறியதாவது: நிர்வாகப் பணிகள் மற்றும் அரசின் நலத்திட்டங்களை செயல்படுத்துதலில் சிறந்து விளங்கும் மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளை, தேர்வு செய்து மாணவர்களுடன் கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்ல முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த பட்டியலில் கற்றல், கற்பித்தலில் சிறப்பாக இயங்கும் ஆசிரியர்களும் சேர்க்கப்பட உள்ளனர். ஏனெனில், வெளிநாடுகளுக்கு கல்விச்சுற்றுலா செல்லும் திட்டம் மாணவர்களிடம் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதன் காரணமாக படிப்பில் மட்டுமின்றி பல்வேறு கலைச் செயல்பாடுகளிலும் மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்கின்றனர்.
தற்போது இந்த திட்டத்தைதுறை அதிகாரிகள், ஆசிரியர்களுக்கும் விரிவுப்படுத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிக்கை தயாரிக்கப்பட்டு அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்படும். அரசின் அனுமதி கிடைத்தவுடன் இதற்கான பணிகள் தொடங்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்
No comments:
Post a Comment