நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத நெல்லை மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டு, அவர்களை ஆஜர்படுத்த போலீஸாருக்கு’ உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தூத்துக்குடியை சேர்ந்த பிராங்க்ளின் ராஜ், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில், "பாளையங்கோட்டை புனித சேவியர் மேல்நிலைப்பள்ளியில் 2ம் நிலை ஆசிரியராக பணிபுரிகிறேன். எனக்கு பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு கேட்டு 2020-ல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன். அந்த வழக்கில் என் மனுவை 8 வாரத்தில் பரிசீலிக்க உத்தரவிடப்பட்டது. ஆனால் என் மனுவை அதிகாரிகள் தற்போது வரை பரிசீலிக்கவில்லை. எனவே, நீதிமன்ற உத்தரவை பின்பற்றாத அதிகாரிகள்மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்"
இவ்வாறு கூறப்பட்டிருந்தது.
இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, நெல்லை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க நீதிபதி உத்தரவிட்டார். இந்நிலையில் மனு நீதிபதி தண்டபாணி முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போதும் கல்வி அதிகாரிகள் நேரில் ஆஜராகவில்லை. இதையடுத்து நீதிபதி, ‘நீதிமன்ற உத்தரவை பின்பற்றாத நெல்லை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர் ஆகியோருக்கு ஜாமீனில் வெளிவரக்கூடிய பிடிவாரண்ட் பிறப்பிக்கப்படுகிறது. இருவரையும் போலீஸார் ஜன. 20-ல் ஆஜர்படுத்த வேண்டும்’ என உத்தரவிட்டார்.
No comments:
Post a Comment