கவுரவ விரிவுரையாளர் பணியிடங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கான 5 சதவீத இடங்களை முழுமையாக வழங்க கோரிக்கை - ஆசிரியர் மலர்

Latest

 




 


03/01/2023

கவுரவ விரிவுரையாளர் பணியிடங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கான 5 சதவீத இடங்களை முழுமையாக வழங்க கோரிக்கை

 கவுரவ விரிவுரையாளர் பணியிடங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கான 5 சதவீத இடங்களை முழுமையாக வழங்க தமிழக அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைக்களுக்கான சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.


இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு, சங்க நிர்வாகிகள் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: கலை அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் கவுரவ விரிவுரையாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான தமிழக அரசின் நடவடிக்கையை வரவேற்கிறோம். மேலும், முதுநிலை படிப்பு, முதுநிலை ஆராய்ச்சி படிப்பு (எம்.ஃபில்), முனைவர் பட்டம் (பி.எச்டி), மாநில விரிவுரையாளர் தகுதித் தேர்வு (ஸ்லெட்), மத்திய விரிவுரையாளர் தகுதித் தேர்வு (நெட்) ஆகியவற்றில் தேர்ச்சிபெற்ற தகுதியான மாற்றுத் திறனாளிகள் அனைவருக்கும் இந்த பணி வாய்ப்பு மிகுந்த பயனுள்ளதாக அமையும்.


எனினும், மாற்றுத் திறனாளிகள் உரிமைச் சட்டம்-2016 பிரிவு 35-ன்படி முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும். அதாவது, கவுரவ விரிவுரையாளர் பணியிடங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கு 5 சதவீதம் பணி வாய்ப்பை வழங்க வேண்டும். உயர்கல்வித் துறை அரசாணையின்படி 7,198 கவுரவ விரிவுரையாளர் பணியிடங்கள் உள்ளதாகவும், அதில் 5,303 இடங்கள் ஏற்கெனவே நிரப்பப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ள 1,895 இடங்கள் தற்போது நிரப்ப உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


சம வாய்ப்புக் கொள்கை: இதில், தற்போது மாற்றுத் திறனாளிகளுக்கான பணி வாய்ப்பு 1,895-ல் 5 சதவீத இடத்துக்காக மட்டுமே நிரப்பப்பட உள்ளதாக அறிவிப்பு வெளிவந்துள்ளது. ஏற்கெனவே நிரப்பப்பட்ட 5,303 இடங்களில் 5 சதவீதத்துக்கான பணியிடங்கள் முறையாக நிரப்பப்படாத நிலையில் அதனை நேர் படுத்திடும் வகையில், முதல்வரால் வெளியிடப்பட்ட சம வாய்ப்புக் கொள்கையைப் பின்பற்றி 7,198 இடங்களில் 5 சதவீதம் பணி வாய்ப்பு என்ற அடிப்படையில் மாற்றுத் திறனாளிகளுக்கு 360 இடங்களுக்கு குறையாமல் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459