20 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்களுக்கு சம்பளம் பாதிப்பு : மாநில பொதுச்செயலர் தகவல் - ஆசிரியர் மலர்

Latest

 




 


02/01/2023

20 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்களுக்கு சம்பளம் பாதிப்பு : மாநில பொதுச்செயலர் தகவல்

 தமிழகத்தில் 20 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்கள் அடிப்படை சம்பளத்தை இழந்து வருகின்றனர்,'' என, தமிழக தொடக்க பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில பொதுச் செயலர் கே.காமராஜ் தெரிவித்தார்.


அவர் கூறியதாவது:


பழைய பென்ஷன் திட்டம், இடைநிலை ஆசிரியர்களின் சம்பள முரண்பாடு, உயர்கல்விக்கான ஊக்க உயர்வு, ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர்பாக இதுவரை தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.


இதனால் அரசு ஊழியர், ஆசிரியர்கள் மிகுந்த மனவேதனைக்கு உள்ளாகியுள்ளனர்.


சட்டசபை தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிகளை சிறிதும் கண்டு கொள்ளாததால், தி.மு.க., அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் 'ஜாக்டோ --- ஜியோ' ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டத்தில் எடுத்த முடிவுபடி ஜன., 5 மாலை மாவட்ட தலைநகரங்களில் நடக்கும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் தமிழக தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி பங்கேற்கும்.


மேலும் 2009 மே 31 வரை நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு ஒருவித சம்பளமும், 2009 ஜூன் 1க்கு பிறகு நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு மற்றொரு சம்பளம் வழங்கப்படுகிறது.


இதனால் அடிப்படை சம்பளத்தில் மாதத்திற்கு 3,170 ரூபாயை 20 ஆயிரம் ஆசிரியர்கள் இழந்து வருகின்றனர். சம வேலைக்கு சம ஊதியம் வழங்க கோரி சென்னையில் போராட்டம் நடத்தி வரும் இடைநிலை ஆசிரியர்களுக்கு ஆதரவு அளிக்கப்படும்.


முதல்வர் ஸ்டாலின் இதை நன்கு பரிசீலனை செய்து தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்.


இவ்வாறு அவர் கூறினார்.


மாநில தலைவர் ஜோசப் சேவியர், சிவகங்கை தலைவர் ராமராஜ், பொருளாளர் பாண்டியராஜன் உடனிருந்தனர்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459