கடந்த இரண்டு கல்வியாண்டுகளை மாணவர்களிடமிருந்து கொரோனா நோய்ப் பெருந்தொற்றுக் காலம் முழுதாக விழுங்கிக் கொண்டு விட்டது. கற்றல் கற்பித்தல் நடைபெறாத இக்காலகட்டத்தில் மாணவர்களின் கற்றல் அடைவுகளில் பெரும் இடைவெளி ஏற்பட்டுள்ளது. அதாவது, ஆறாம் வகுப்பு மாணவனுக்கு எண்ணும் தெரியவில்லை. எழுத்தும் புரியவில்லை. தம் பெயரைக் கூட முழுமையாக ஆங்கிலத்தில் மட்டுமல்ல தமிழில் எழுதவும் மிகவும் சிரமப்படும் சூழ்நிலை நிலவுகிறது. பத்து வாய்ப்பாடு முழுமையாகச் சொல்லத் தெரியவில்லை. கூட்டல், கழித்தல், பெருக்கல் மற்றும் வகுத்தல் எளிய அடிப்படைக் கணக்குகளைப் பிழையில்லாமல் தீர்வு காண முடியவில்லை.
இத்தகுச் சூழலில், நடப்புக் கல்வியாண்டில் பள்ளித் திறக்கப்பட்டு இன்னும் மேற்குறிப்பிட்ட கற்றல் இடைவெளிகள் முழுவதும் நிவர்த்தி ஆனபாடில்லை. அதற்குள் பள்ளிக் கல்வித்துறை கடந்த காலங்களில் முன்னெடுத்த மாநில மையத்திலிருந்து இயக்குநர் தலைமையில் மண்டல அளவிலான முன்னறிவிப்பில்லா திடீர் பள்ளி ஆய்வுகள் கடந்த ஜூலை முதல் வாரத்திலிருந்து தொடங்கி இருப்பது வியப்பாகவும் ஆசிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
இதுபோன்ற உயர்மட்டக் குழு ஆய்வுகளும் அதனைத் தொடர்ந்து மண்டல அளவில் ஏதேனும் ஒரு தலைமையிடத்தில் மேற்கொள்ளப்படும் மீளாய்வுக் கூட்டங்களும் குறைதீர் ஆலோசனைகளும் வழிகாட்டுதல்களும் ஒரு கல்வியாண்டின் இறுதியில் மேற்கொள்வதே நல்ல எதிர்பார்க்கப்படும் விளைவை வெளிப்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்போது தான் மாணவர்களும் ஆசிரியர்களும் ஒருவரையொருவர் மீளவும் மெல்ல புரிந்து கொள்ளத் தொடங்கி உள்ளனர்.
குறிப்பாக, மாணவர்களை மீண்டும் பள்ளிச் சூழலுக்கு ஆயத்தப்படுத்துவதில் எண்ணற்ற சிரமங்கள் இருப்பதாகக் களத்தில் இருக்கும் ஆசிரியர் பெருமக்கள் பலரின் கூற்றாகக் காணப்படுகிறது. ஊரடங்கு காலத்தில் கிராமப்புற, நகர்ப்புற ஏழை, எளிய, அடித்தட்டு மக்களின் அரசுப் பள்ளிக் குழந்தைகளுக்கு தமிழ்நாடு அரசும் கல்வித்துறையும் பல்வேறு முன்னெடுப்புகளை எடுத்திருந்தாலும் அவை முழுவதுமாக பலனளிக்கவில்லை. கல்வித் தொலைக்காட்சி வழியாக நல்ல பயனுள்ள தரமான வகையில் வழங்கப்பட்ட வகுப்புகள் பல்வேறு காரணங்களால் அவர்களைக் கவராதது வருந்தத்தக்க நிகழ்வாகும். அஃது ஈடுசெய்ய முடியாத கற்றல் இழப்பு!
இத்தகைய நிலையில், மேலோட்டமாக மாணவர் நலத்திட்டங்கள் வழங்கல் குறித்தான பார்வை என்று செயல்முறைகளில் காரணம் சொல்லப்பட்டாலும் கற்றல் கற்பித்தல் சார்ந்த பதிவேடுகளும் நிகழ்வுகளும் பாடக் குறிப்புகளும் மாதிரி வகுப்புகளும் கற்றல் அடைவுகளும் கட்டாயம் முன்பு சோதித்தது போல் ஆசிரியர்களிடம் 70 வகையான பொருண்மைகளில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவது வாய்மொழி ஆணையாகவே பினபற்றப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், பல்வேறு ஒன்றியங்களைச் சார்ந்த வட்டாரக் கல்வி அலுவலர்கள் இவற்றை சிரமேற்கொண்டு செய்து முடிக்கப்பட வேண்டிய இன்றியமையாத அறிவுறுத்தல்களாகச் சமூக ஊடகங்களில் நாளும் தம் கீழ் பணிபுரியும் இருபால் ஆசிரியர் பெருமக்களுக்குப் பரப்புரை செய்வதும் நடந்தேறி வருகிறது.
இதுதவிர, மாநில கல்வி மற்றும் ஆசிரியர் பயிற்சி நிறுவனம் சார்பில் மாவட்டம்தோறும் பணிபுரியும் ஆசிரியர் பயிற்சி முதுநிலை விரிவுரையாளர் தலைமையில் மேலும் ஒரு குழுவினர் பள்ளிகள்தோறும் ஆய்வுகள் மேற்கொள்ளும் நோக்கும் போக்கும் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதுபோன்ற உயர்மட்ட பள்ளி ஆய்வுகள் ஆசிரியர் பெருமக்கள் அனைவருக்கும் நல்வழி காட்டும் இன்பியல் நிகழ்வாக அமைய வேண்டுமேயன்றி பயமும் பதட்டமும் ஒருங்கே நிறைந்த துன்பியல் நிகழ்வாக ஆகிவிடக் கூடாது. எப்போதுமே ஆசிரியர் பணியிலிருந்து வழுவி, போதை பழக்கத்திற்கும் குடிக்கும் அடிமையாகி முறையாகப் பள்ளிக்கு வராத, பாடம் எடுக்காமல் ஒழுங்கீனமாக நடந்து கொள்வோருக்கு எந்தக் குழு பற்றியும் உயர்மட்ட குழுவினர் பற்றியும் ஒரு கவலையும் இல்லை. ஏனெனில், அவர்களுக்கு ஏதோவொரு விதத்தில் ஊதியத்தில் எந்தவொரு இழப்புகளும் இல்லாமல் மொத்தமாக சுளையாக எப்படியோ கிடைத்து விடுகிறது.
மனசாட்சிக்குக் கட்டுப்பட்டு பள்ளி, மாணவர் மற்றும் சமூக நலனைக் கருத்தில் கொண்டு இயங்கி வரும் நல்லோரே அதிகம் மன அளவில் இதுபோன்ற திடீர் பயமுறுத்தல்களாலும் அதனையொட்டி கூறப்படும் அறிவுறுத்தல்கள்களாலும் பாதிக்கப்படுகின்றனர்.
ஏனெனில், கற்றல் இழப்புகளாலும் ஊரடங்கு கால கவனச் சிதறல்களாலும் இயல்பான மறதியினாலும் அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண்ணறிவில் மிகவும் பின்னோக்கிச் சென்று விட்ட மாணவர்களை ஓரிரவில் தம் மாயவித்தைகளால் யாராலும் ஒரேயடியாக முன்னோக்கித் தள்ளிவிட இயலாது என்பது கசப்பான உண்மையாகும்.
தற்போது நடைமுறையில் உள்ள அனைத்து வகுப்புகளுக்கான பாடங்கள் அனைத்தும் குருவி தலையில் பெரிய பாறாங்கல் சுமையாகவே இருந்து வருவதை எவராலும் மறுக்க முடியாது. குறிப்பிட்ட பருவத்திற்குள் மற்றும் காலத்திற்குள் முழுமையான கற்பித்தல் மற்றும் கற்றல் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதில் ஆசிரியர்களும் மாணவர்களும் மிகுந்த சிரமப்பட்டு வருவது எண்ணத்தக்கது. உலகத்தரத்தில் பாடத்திட்டம் உருவாக்கப்பட்டு இருக்கிறதே ஒழிய மிகவும் பின்தங்கிய, மெல்ல மலரும், மாற்றுத்திறன், கற்றல் குறைபாடு மற்றும் விளிம்புநிலை மாணவர்கள் நலன் என்பது முற்றிலும் புறக்கணிக்கப்பட்டு இருப்பது நோக்கத்தக்கது. மேலும், பல பாடங்கள் மாணவர்களின் உடல் மற்றும் மன வயதிற்கு ஏற்ப அமையாமல் பிஞ்சுக் குழந்தைகள் தம் சக்திக்கு உட்பட்டு புரிந்து கொள்ள இயலாத நிலையில் அமைக்கப்பட்டிருப்பது வேதனைக்குரிய ஒன்று.
அதாவது, இளங்கலை கல்லூரிக் கல்வி பயிலும் மாணவர் கற்க வேண்டிய பாட நுண் கருத்துகளை ஏழாம் வகுப்பு படிக்கும் சிறுவர் கட்டாயம் கற்றுக் கொள்ள வேண்டிய அவலநிலை. அதாவது பெருக்கெடுக்கும் காவிரி ஆற்றை சிறிய சொம்பிற்குள் அடைத்துக் காட்ட வேண்டிய நிர்ப்பந்தத்தில் ஆசிரியர் பெருமக்களும் பள்ளிக்கு முழுமையாக வருகைதரும் முதல் தலைமுறை பள்ளிப் பிள்ளைகளும் இருந்து வருகின்றனர். தொடர் பயிற்சிகள் மற்றும் பருவநிலை விடுமுறைகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களாலும் கற்போர் அந்த நிலையில் கட்டாயம் அடைவு பெற்றிருக்க வேண்டிய குறைந்த பட்ச கற்றல் இலக்குகளில் போதிய அடைவின்மை காரணங்களாலும் அறிமுகமற்ற, புரியாத, தெரியாத, எளிதில் புரிந்து கொள்ள முடியாத பல்வேறு பாடப்பகுதிகளை முறையாக நடத்த முடியாமல் தாவிச் செல்வதும் தாண்டிச் செல்வதும் பிறகு பார்க்கலாம் என்று கடந்து போவதும் வகுப்பறைகளில் இயல்பாக நடப்பதை அறிய முடிகிறது.
எட்டாம் வகுப்பு வந்து விட்ட தமிழ் மற்றும் ஆங்கில எழுத்துகளை மிகச் சரியாக அடையாளம் காண முடியாத ஒரு சராசரி நிலையில் உள்ள மாணவர்கள் பலருக்கும் வதவதவென்று காணப்படும் நடப்பில் உள்ள பாடத்தை முடித்து ஒப்பேற்றுவதா அல்லது மழலையர் நிலையில் மிகவும் பொறுமையாக எழுத்துகளை அடையாளம் கண்டு வாசிக்க வைப்பதா என்று மதில் மேல் பூனைகள் போல் ஆசிரியர்கள் தடுமாறிக் கையறு நிலையில் பரிதாபத்துக்குரியவர்களிடம் பத்துக்கும் மேற்பட்ட படிநிலைகளில் பாடக்குறிப்பு எங்கே? கற்றல் இலக்குகள் எங்கே? நூலக வாசிப்பு எங்கே? அது எங்கே? இது எங்கே? என்று அலைக்கழிப்பு செய்வது என்பது மானுட நீதியாகா.
இத்தகைய சூழலில் ஒரே நாளில் மாவட்டம் முழுமையும் அல்லது ஒரு வட்டாரத்தில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளிகளில் ஆய்வு என்று கட்டவிழ்த்து விடப்படும் அதிகார வர்க்கத்தின் அடாவடித்தனம் என்பது சகிப்பதற்கில்லை. இத்தனை ஆண்டு காலம் ஒரு பரபரப்பும் இல்லாமல் கற்றுக் கொடுத்த கல்வி இப்போது என்ன குடிமுழுகியா போய்விட்டது? ஏன் இவ்வளவு அவசரம்? எதற்காக இத்தனை களேபரம்? நானும் ரௌடிதான் என்கிற அவலநிலைக்குக் கல்வித்துறை ஆகிப்போனதோ என்னும் அச்சமும் கழிவிரக்கமும் எழுவது தவிர்க்க முடியாத ஒன்றாக இருக்கிறது.
இந்த நெருக்கடி நிலையை மாநில அளவிலான ஆய்வுக் குழுவினர் காலம் கருதி உணருதல் நல்லது. மேலும், தம் திடீர் பள்ளி ஆய்வுகளின் போது ஏதோ பெரிய குற்றவாளிகளைக் கையும் களவுமாக பிடித்து விடுவது போல் ஆக்கிக் கொள்வதை முடிந்தவரை தவிர்க்கப்பட வேண்டும். இதுபோன்ற மாநில, மாவட்ட, வட்டார அளவிலான மண்டல பள்ளி ஆய்வுகள் சிறப்பாக அமைய ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் கற்றல் கற்பித்தலை வலுப்படுத்த சற்று கால அவகாசம் இருப்பது நல்லது. அதற்கான உரிய உகந்த உன்னத காலமும் இதுவல்ல. தமிழக அரசு இதுகுறித்து நல்ல முடிவெடுக்க வேண்டும் என்பது அனைவரின் கருத்தாகும்.
எழுத்தாளர் மணி கணேசன்
No comments:
Post a Comment