அறிவுசார் குறைபாடுடையோருக்கான சிறப்பு பள்ளி ஆசிரியர்களுக்கு காலமுறை சம்பளம் நிர்ணயிக்க தாக்கலான வழக்கில் தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.
தமிழ்நாடு சிறப்பு பள்ளிகள் கவுன்சில் செயலாளர் வெற்றிவேல் முருகன் தாக்கல் செய்த பொதுநல மனு:
மாற்றுத்திறனாளிகளில் மோசமாக பாதிக்கப்பட்டவர்கள் அறிவுசார் குறைபாடுடையோர் என்பது அறிவியல்பூர்வ உண்மை. இவர்கள் சாதாரண மாணவர்களின் திறனைவிட கல்வி கற்கும் திறனில் பின்தங்கியவர்கள்.
பொதுவான கல்வி திட்டத்தை கற்க இயலாமல் சிறப்பு கல்வி முறையில் கற்கும் நிலையில் உள்ளனர். தற்போது அறிவுசார் குறைபாடுடையோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
தமிழக அரசு சார்பில் சென்னையில் ஒரு சிறப்பு பள்ளி மட்டுமே செயல்படுகிறது. அரசின் அங்கீகாரம் பெற்று தனியார் தொண்டு நிறுவனங்கள் பொருளாதார நெருக்கடியில் சிறப்பு பள்ளிகளை நடத்துகின்றன.
இவற்றில் ஆசிரியர்கள் குறைந்த சம்பளத்தில் பணிபுரிகின்றனர். இவர்களுக்கு காலமுறை சம்பளம் வழங்க வேண்டும். பொது பள்ளிகளின் ஆசிரியர்கள் பணியைவிட சிறப்பு பள்ளி ஆசிரியர்களின் பணி வேறுபட்டது. மாணவர்களுக்கு பல் துலக்குதல், உணவருந்துதல், ஆடை அணிதல், விளையாட்டு, தொழிற் பயிற்சி அளிக்கின்றனர். பெற்றோருக்கு ஆலோசனை வழங்குகின்றனர்.
சிறப்பு பள்ளி ஆசிரியர்கள், குழந்தைகள் பராமரிப்பாளர்களுக்கு காலமுறை சம்பளம் வழங்க வேண்டும்.
அதுவரை சம்பள மானியத்தை அரசு அதிகரிக்க வேண்டும். சிறப்பு பள்ளிகளுக்கு தனி சட்டம் இயற்றக்கோரி தமிழக அரசுக்கு மனு அனுப்பினேன். பரிசீலிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு வெற்றிவேல் முருகன் குறிப்பிட்டார்.
நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஜெ.சத்திய நாராயண பிரசாத் அமர்வு தமிழக மாற்றுத் திறனாளிகள் நல்வாழ்வுத்துறை முதன்மை செயலர், கமிஷனருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு நவ.,15 க்கு ஒத்திவைத்தது
No comments:
Post a Comment