சரியான பதிலுக்கு தவறு என மதிப்பிட்டதால் கூடுதலாக ஒரு மதிப்பெண் வழங்கி ஆசிரியர் பணி வழங்க ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரையைச் சேர்ந்த வினோபிரதா, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:
ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய முதுநிலை பட்டதாரி ஆங்கில ஆசிரியர் தேர்வில் 150க்கு 97.77 மதிப்பெண் பெற்றேன். பிசி பெண்கள் பிரிவில் கட்-ஆப் மதிப்பெண் 98.196 என நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. இதனால், என்னை தேர்வு செய்யவில்லை. 71 மற்றும் 108வது வினாக்களுக்கு சரியான விடையளித்திருந்தேன். ஆனால், தவறான விடை என கணக்கிட்டுள்ளனர். எனக்கு கூடுதலாக 2 மதிப்பெண் வழங்கி ஆசிரியர் பணி வழங்க உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவு: மனுதாரர் இரு கேள்விக்கும் சரியான பதிலளித்துள்ளார். ஆட்சேபம் காரணமாக 71வது கேள்வி நீக்கப்பட்டுள்ளது. 108வது கேள்விக்கு மனுதாரர் சரியாக பதில் அளித்துள்ளார். ஆனால் கீ ஆன்சரில் வேறு பதில் இருப்பதால், மனுதாரருக்கு மதிப்பெண் வழங்கப்படவில்லை. இந்தியாவின் பிரதமர் யார்? என்ற கேள்விக்கு நரேந்திர மோடி என பதில் அளித்தால், விடை ராகுல்காந்தி என உள்ளதாக கூறுவது அபத்தம். எனவே, மனுதாரருக்கு கூடுதலாக ஒரு மதிப்பெண் வழங்கி, அவர் 150க்கு 98.77 மதிப்பெண் பெற்றதாக கருதி தாமதம் இல்லாமல் அவருக்கு ஆசிரியர் பணி நியமன உத்தரவு வழங்க வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.
No comments:
Post a Comment