30 - 40 வயது காலகட்டத்தில் இருக்கிறீர்களா? குடும்பம், வேலை என்று ஓரளவு செட்டில் ஆன/ஆகும் காலகட்டம் இது. ஆனால், உடல் சார்ந்த பிரச்னைகள் தொடங்கும் நேரம் என்பதால் சில விஷயங்களில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
30 வயது என்பது கிட்டத்தட்ட பாதி வாழ்க்கையைக் கடப்பது. மீதியுள்ள பாதி வாழ்க்கையில் சில விஷயங்களை கவனத்தில் கொண்டாலே வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.
அந்தவகையில் 30 வயதைக் கடந்தவர்கள் உடல்நலம் சார்ந்து கடைப்பிடிக்க வேண்டிய 10 விஷயங்கள்...
உணவு
வேலைப்பளு காரணமாக உணவைத் தவிர்க்கக்கூடாது. அதுபோல, கொழுப்பு நிறைந்த உணவுகளைக் குறைத்துவிட வேண்டும் அல்லது முற்றிலுமாகத் தவிர்த்துவிடுவதுகூட நல்லதுதான். பதிலாக, பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிடலாம். ஹோட்டலில் இல்லாமல் வீட்டில் சமைத்த ஆரோக்கியமான உணவுகளுக்கு முன்னுரிமை கொடுங்கள். துரித, பொருந்தா உணவுகள் வேண்டாம்!
தூக்கம்
நாள் ஒன்றுக்கு 7-8 மணி நேரம் தூக்கம் அவசியம். அதுவும் ஒவ்வொரு நாளும் ஒரே நேரத்தில் தூங்கி ஒரே நேரத்தில் எழுந்திருக்க பழக வேண்டும். இது உடல்நிலையை சீராக வைத்திருக்க உதவும்.
உடற்பயிற்சி
குறைந்தது நாள் ஒன்றுக்கு அரை மணி நேரம் உடற்பயிற்சி செய்ய வேண்டும். வெளியில் செல்ல முடியாத சமயத்தில் வீட்டிலேயே அல்லது மொட்டை மாடியில் நடக்கலாம், லேசான ஒர்க்-அவுட் பயிற்சிகளை செய்யலாம். குறைந்தது வெளியில் செல்லும்போது முடிந்தவரை நடந்து செல்லலாம்.
மது அருந்துதல்
இன்றைய இளைஞர்கள் பெரும்பாலானோர் 'பீர்' குடிப்பதை ஒரு ட்ரெண்டிங் ஆக பின்பற்றுகின்றனர். 30 வயதுக்குப் பிறகு உடலில் மாற்றங்கள் நிகழ்வதால் கண்டிப்பாக மதுப்பழக்கத்தை தவிர்க்க வேண்டும். முடிந்தவரை குறைத்துக்கொள்ளுங்கள். புகைப்பிடிப்பதற்கும் இது பொருந்தும். குளிர்பானங்களையும் குடிப்பதைத் தவிர்த்து இயற்கை பானங்களை அருந்த வேண்டும்.
அறிவு வளர்த்தல்
வயது அதிகரிக்க அறிவையும் வளர்த்துக்கொள்ள வேண்டும். முதிர்ச்சித் தன்மையுடன் நடந்துகொள்ள வேண்டும். சிறுசிறு விஷயங்களுக்கு சண்டையிடுவதைக் கைவிடுங்கள்.
பொறுப்பு
30 வயது அடைந்துவிட்டால் வீட்டில் பொறுப்புகளை எடுத்துக்கொள்ளுங்கள். நீங்கள் ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் கண்டிப்பாக உங்களுக்கென சில பொறுப்புகள், சவால்கள் வரும். அதனை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்.
சேமிப்பு
30 வயதுக்கு மேற்பட்ட வாழ்க்கையில் சேமிப்பு என்பது மிகவும் அவசியம். சேமிப்பு இருந்தால் வாழ்க்கையை கடினமாக்கிக்கொள்ள தேவையில்லை.
செல்போன் பயன்பாடு
சமூக வலைத்தளங்களில் அதிக நேரம் செலவழிக்காதீர்கள். உங்களை நீங்கள் வளர்த்துக்கொள்ளும் நேரம் இது. எனவே, நேரத்தை வீணாக்காமல் குடும்பம், வேலையில் மட்டும் கவனம் செலுத்துங்கள்.
பயணம் செய்யுங்கள்
நீங்கள் தனியாகவோ அல்லது குடும்பத்துடனோ உங்களுக்குப் பிடித்த இடங்களுக்குச் சென்று வாருங்கள். உங்களுக்கென சிறிது நேரம் ஒதுக்கிக்கொள்ளுங்கள். இது மன அமைதியைத் தரும்.
நம்பிக்கை வையுங்கள்
வாழ்க்கையின் சவால்களை எதிர்கொள்ள நம்பிக்கை வேண்டும். இந்த வாழ்க்கையின் மீது நம்பிக்கை வையுங்கள். இந்த ஒரு வாழ்க்கை உங்களுக்கானது என்று மகிழ்ச்சியாக வாழுங்கள்.
No comments:
Post a Comment