முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! - ஆசிரியர் மலர்

Latest

 




 


13/10/2022

முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

full

பள்ளிக்கல்வித் துறையில் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் வாயிலாக தேர்வு செய்யப்பட்ட 2849 நபர்களுக்கும், கருணை அடிப்படையில் 269 நபர்களுக்கும் பணிநியமன ஆணைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கல்வி நலன் கருதி பள்ளிகளின் வகுப்பறைக் கட்டடங்கள், குடிநீர் வசதி, கழிவறைகள், மின்சாதன வசதிகள் போன்ற அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், இணைய வசதிகளைப் பள்ளிகளில் ஏற்படுத்துதல், 1 முதல் 5ஆம் வகுப்பு வரை பயிலும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், மாணவர்களின் கற்றல் திறனை அதிகரித்து, தமிழகத்தின் கல்வித் தரத்தினை உயர்த்திட “இல்லம் தேடி கல்வி”, நம் பள்ளி நம் பெருமை பள்ளி மேலாண்மைக்குழு மறுகட்டமைப்பு, காலியாகவுள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்புதல் போன்ற பல்வேறு சிறப்பான திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது.


இதன் ஒரு பகுதியாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (13.10.2022) சென்னை, கலைவாணர் அரங்கத்தில், பள்ளிக்கல்வித் துறை சார்பில் ஆசிரியர் தேர்வு வாரியம் வாயிலாக அரசு மற்றும் நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில் காலியாகவுள்ள முதுகலை ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் நிலை-1, கணினி பயிற்றுநர் நிலை-1 ஆகிய பணியிடங்களுக்கு  தேர்வு செய்யப்பட்ட 2849 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக  10 நபர்களுக்கும், பள்ளிக்கல்வித் துறையில் பணிபுரிந்து பணிக்காலத்தில் காலமான பணியாளர்களின் 269 வாரிசுதாரர்களுக்கு இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கு கருணை அடிப்படையில் பணிநியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 10 நபர்களுக்கும், பணி நியமன ஆணைகளை வழங்கினார்.    

இந்த நிகழ்ச்சியில், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர். பிரியா, பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் காகர்லா உஷா, இ.ஆ.ப., பள்ளிக் கல்வி ஆணையர் திரு. க.நந்தகுமார், இ.ஆ.ப., தொடக்கக்கல்வி இயக்குநர் திரு. க. அறிவொளி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459