அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் போராடிவரும் கௌரவ விரிவுரையாளர்கள் உடனடியாக பணிநீக்கம் செய்ய கல்லூரி கல்வி இயக்குநர் அதிரடியாக உத்தரவிட்டு இருப்பதாக செய்தி வெளியான நிலையில், தமிழக உயர்கல்வித்துறை செயலாளர் விளக்கம் அளித்துள்ளார்.
அரசாணை எண் 56-ஐ பயன்படுத்தி கௌரவ விரிவுரையாளர்களை உடனடியாக பணி நிரந்தரம் செய்திட வேண்டும், கல்லூரி ஆசிரியர் பணி நியமனத்தில் எழுத்து தேர்வு முறையை கைவிட்டு, நேர்காணல் முறையையே தொடர்ந்து பின்பற்ற வேண்டும், சட்டக்கல்லூரிகளில் 30,000 ரூபாய் சம்பளம் வழங்கப்படுவதைப் போல தங்களுக்கும் ஊதிய உயர்வு வழங்க வேண்டும், மாநில தகுதித் தேர்வு உடனடியாக நடத்திட வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி கௌரவ விரிவுரையாளர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனிடையே, போராட்டத்தை கைவிடாத கௌரவ விரிவுரையாளர்களை பணியில் இருந்து உடனே நீக்க வேண்டும் என்றும் கௌரவ விரிவுரையாளர்களை போராட்டத்தை கைவிட கல்லூரிகளில் முதல்வர்கள் தெரிவிக்க வேண்டும் என்றும் நீக்கம் செய்யப்படும் பணிகளில் உடனடியாக யுஜிசி விதிகளை பின்பற்றி தகுதியுடைய கௌரவ விரிவுரையாளர்களை நியமிக்க வேண்டும் என்றும் வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்ட கௌரவ விரிவுரையாளர்கள் மீண்டும் பணி கேட்டு வந்தால் சேர்க்கக்கூடாது எனவும் அனைத்து கலை, அறிவியல் கல்லூரி முதல்வர்களுக்கு கல்லூரி கல்வி இயக்குநர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளதாக செய்தி வெளியானது.
இந்த செய்தியை தமிழக உயர்கல்வித்துறை செயலாளர் கார்த்திகேயன் மறுத்துள்ளார். போராட்டம் நடத்தும் கௌரவ விரிவுரையாளர்களை பணியில் இருந்து நீக்கு அரசு உத்தரவிடவில்லை என்றும் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் புதிதாக 4000 உதவி பேராசிரியர்கள் விரைவில் நியமனம் செய்யப்பட உள்ளனர் என்றும் உதவி பேராசிரியர்கள் தேர்வில் கௌரவ விரிவுரையாளர்களுக்கு 15 சதவீதம் வெயிட்டேஜ் மதிப்பெண்கள் வழங்கி முன்னுரிமை வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment