சென்னையிலுள்ள மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் மற்றும் மாவட்டங்களிலுள்ள ஆசிரியர் கல்வி, பயிற்சி நிறுவனங்களில் மூத்த விரிவுரையாளர், விரிவுரையாளர், இளநிலை விரிவுரையாளர்கள் என 155 காலிப் பணியிடங்களுக்கான நியமன அறிவிப்பை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் ஆகஸ்ட் 20-ல் வெளியிட்டது.
இதற்கான கல்வித் தகுதி முதுகலை பட்டப்படிப்புடன் எம்.எட் மற்றும் 2 ஆண்டு பணி அனுபவம் இருக்கவேண்டும். இந்த வாய்ப்பை பயன்படுத்தி நீண்ட நாளாக பணி வாய்ப்புக்காக காத்திருக்கும் தகுதியுள்ள விரிவுரையாளர்கள் விண்ணப்பிக்க தொடங்கிய நிலையில், குறுக்கு வழியில் சிபாரிசுகள் மூலம் சிலர் பணியை பெறுவதற்கு முயற்சி நடப்பதாகவும் புகார் எழுந்துள்ளது. இதற்கான பணி நியமனம் நேர்மையான முறையில் நடக்குமா என்ற சந்தேகம் எழுகிறது.
இத்தேர்வு நியாயமாக நடக்கவேண்டும் என்பது, வாய்ப்புக்கென நீண்ட நாளாக காத்திருக்கும் தகுதி வாய்ந்த விரிவுரையாளர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது என அவர்கள் தெரிவித்தனர்.
இது குறித்து தங்கள் பெயரைக் குறிப்பிட விரும்பாத சில விண்ணப்பதாரர்கள் கூறியது: “தமிழகத்தில் 35-க்கும் மேற்பட்ட ஆசிரியர் கல்வி, பயிற்சி மையங்கள் செயல்படுகின்றன. இப்பயிற்சி மையங்களில் நீண்ட நாளாகவே விரிவுரையாளர்கள் காலியிடங்கள் நிரப்ப நடவடிக்கை எடுக்கவில்லை. ஆசிரியர் கல்வி பயிற்சி, ஆராய்ச்சி மையங்களில் பணிபுரிய உரிய கல்வித்தகுதியை பெற்றவர்கள் தமிழகளவில் சுமார் 15 ஆயிரம் வரை அரசு பணிக்கென காத்திருக்கிறோம்.
குடும்பச் சூழல் காரணமாக வேறு வழியின்றி சொற்ப சம்பளத்தில் தனியார் சுயநிதி கல்வியியல் மற்றும் கலை, அறிவியல் கல்லூரிகளில் பணியாற்றுகிறோம். தற்போதைய அரசு ஆசிரியர் கல்வி, பயிற்சி நிறுவனம், மாநில கல்வியியல் கல்லூரியிலுள்ள 155 காலியிடங்களுக்கு விரிவுரையாளர்களை நியமிக்க நடவடிக்கை எடுத்தது வரவேற்கத்தக்கது. இதன்படி, தகுதியுள்ள விரிவுரையாளர்கள் விண்ணப்பிக்க தயாராகி உள்ளோம்.
இருப்பினும், விரிவுரையாளர்கள் பணி நியமனத்திற்கான அதிகாரபூர்வ அறிவிப்புக்கு முன்னதாகவும், அறிவிப்பு வெளியான பிறகும் முக்கிய அரசியல் புள்ளி மற்றும் ஓய்வு பெற்ற அதிகாரிகளைப் பிடித்து சிலர் குறுக்கு வழிகளை கையாண்டு, சிபாரிசுகள் மூலம் பணி வாய்ப்பைப் பெற முயற்சிப்பதாக தகவல் கசிகிறது. ஓய்வு வயதை சிலர் நெருங்கிவிட்டனர். எனவே, முறைகேடு இன்றி நேர்மையான முறையில் பணி நியமனம் நடக்கும் என, எதிர்பார்க்கிறோம். இல்லையெனில் தகுதி இருந்தும், பண வசதி படைத்தவர்களே அதிக பணி வாய்ப்பை பெற முடியும்” என்று அவர்கள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment