இந்திய ஒன்றிய அளவில் நாடே வியந்து திரும்பிப் பார்க்கும் வகையில் தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித் துறை தோற்றுவித்த இல்லம் தேடிக் கல்வித் திட்டம் திகழ்ந்து வருகிறது. அதாவது, கோவிட் 19 நோய்ப் பெருந்தொற்றுக் காரணமாக ஊரடங்கு காலத்தில் மூடிக் கிடந்த பள்ளிகளால் அனைத்து வகையான மாணவர்களும் கல்வி கற்க மிகவும் சிரமப்படும் சூழ்நிலை நிலவியது. பள்ளி செல்லாமலேயே வேறுவழியின்றி மாணவர்கள் தேர்ச்சி அளிக்கப் பெற்று அடுத்த வகுப்பிற்குக் கடத்தப்பட்டனர்.
இதன் விளைவாக பள்ளி மாணவரிடையே கற்றல் இடைவெளி அதிகரித்துக் காணப்பட்டது. கற்றல் கற்பித்தல் நிகழ்வுகள் நடைபெறாத காரணத்தினால் மாணவர்கள் ஒரு வகுப்பில் அடைய வேண்டிய குறைந்த பட்ச கற்றல் இலக்குகளைப் பெற இயலாமல் போயினர். இணைய வழிக் கல்வி, கல்வித் தொலைக்காட்சி வழிக் கல்வி என பள்ளிக்கல்வித்துறை பல்வேறு முன்னெடுப்புகளை முனைப்புடன் எடுத்த போதிலும் ஏழை எளிய அடித்தட்டு மாணவர்களிடையே இவை பல்வேறு காரணங்களால் எடுபடாது போனது வருந்தத்தக்க நிகழ்வாகும்.
இத்தகு சூழலில் தமிழ்நாட்டில் நிகழ்ந்த ஆட்சி மாற்றம் காரணமாக புதிதாக பதவியேற்ற விடியல் அரசு மாணவர் நலனைச் சிரமேற்கொண்டு இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தை முன்மொழிந்து பள்ளிகள் திறக்காத காலக்கட்டத்தில் தீவிரமாகச் செயல்படுத்த பல்வேறு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொண்டது. 20 மாணவர்களுக்கு ஒரு மையம் தோற்றுவிக்கப்பட்டது.
தன்னார்வலராக மையம் சார்ந்த பகுதியில் படித்த தகுதி வாய்ந்த வேலைவாய்ப்பற்ற இல்லம் தேடிக் கல்விக்கென உருவாக்கப்பட்ட செயலியில் விருப்பப்பட்டு பதிவு செய்த இளம் பெண்கள் தற்காலிக அடிப்படையில் சம்பந்தப்பட்ட பள்ளியின் தலைமை ஆசிரியர் மூலமாக வட்டார அளவில் இதற்காக மாற்றுப் பணியில் நியமிக்கப்பட்ட மாவட்ட, ஒன்றிய ஒருங்கிணைப்பாளர்கள் மேற்பார்வையில் சான்றிதழ் சரிபார்ப்பு, எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு ஆகியவற்றில் தேர்ச்சி பெற்றோர் மைய தன்னார்வலராக பணி நியமனம் செய்யப்பட்டனர்.
அதன்பின், இல்லம் தேடிக் கல்வி மைய தன்னார்வலர்களுக்குச் சிறப்புப் பயிற்சிகள் வழங்கப்பட்டன. மேலும் கற்றல் உபகரணங்களும் அரசால் அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதுதவிர, இத்தன்னார்வலர்களுக்கு மாதந்தோறும் அவரவர் வங்கிக் கணக்கில் பற்றாகும் வகையில் ரூபாய் ஆயிரம் ஊக்கத்தொகையாகத் தற்போது வரை வழங்கப்பட்டு வருகிறது. முழுமையாகப் பள்ளிகள் திறக்காத காலக்கட்டத்தில் இத்திட்டத்தின் கால அளவு ஆறு மாதங்கள் என்று அறிவிக்கப்பட்டது.
பிறகு, எல்லா வகையான பள்ளிகளும் முழுமையாக திறக்கப்பட்டு வழக்கம்போல் செயல்படும் இன்றைய நிலையில் இத்திட்டமானது மேலும் விரிவுப்படுத்தப்பட்டு எதிர்வரும் டிசம்பர் 2022 முடிய செயல்படும் என்று நிதிநிலை அறிக்கையில் போதிய நிதி ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இத்திட்டத்தின் பயனாளிகளாக 1-8 வகுப்புகள் பயிலும் அனைத்து வகைப் பள்ளிகளின் மாணவ மாணவிகள் ஆவார்கள். இம்மையங்கள் செயல்படும் நேரம் மாலை 5 மணி முதல் 6 மணி வரை மட்டுமே.
அண்மையில் 2 இலட்சமாவது இல்லம் தேடிக் கல்வி மையம் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது அறிந்ததே. 35 இலட்சம் மாணவர்களில் 25 இலட்சத்திற்கும் அதிகமானோர் நாள்தோறும் இந்த இல்லம் தேடிக் கல்வி மையங்களில் தொடர்ந்து கல்வி பயின்று வருவதை அறிய முடிகிறது. அதுபோல் 82% பொதுமக்கள் இல்லம் தேடிக் கல்வி மையம் பற்றி அறிந்து வைத்துள்ளனர். தன்னார்வலர்கள் மற்றும் கற்போர் ஒருங்கிணைப்பில் உருவாக்கப்பட்ட வட்டார அளவில் நடைபெற்ற கற்றல் கற்பித்தல் படைப்புக் கண்காட்சி(TLM EXHIBITION)யும் மாநில அளவிலான தொடர் வாசிப்புப் போட்டி(READING MARATHON)யும் பெற்றோர்கள் மத்தியில் கல்வி சார்ந்த நேர்மறையான அதிர்வலைகளைத் தோற்றுவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
எதிர்வரும் காலங்களில் கணிதப் போட்டி (MATHS OLYMPIAD), தனித்திறன் படைப்பாற்றல் திருவிழா (SKILL FEST), எழுத்து உச்சரிப்புப் போட்டி (SPELL BEE) முதலானவை பிரமாண்ட அளவில் ஒவ்வொரு இல்லம் தேடிக் கல்வி மையங்களிலும் நடைபெற இருக்கின்றன. கற்போர் வருகை உள்ளிட்ட அனைத்தும் Illam Thedi Kalvi செயலி மூலமாகவே நாள்தோறும் பதிவேற்றம் செய்யப்பட்டு வருவது பாராட்டுக்குரியது. இதன் மூலம் மாநில அளவில் சரியான புள்ளிவிவரங்கள் சேகரிக்கவும் சேமிக்கவும் ஆய்வு மேற்கொள்ளவும் அதன்வழியாக, புதிய திட்டங்கள் உருவாக்கி நடைமுறைப்படுத்தவும் இயலுகின்றன.
குறிப்பாக, மாவட்ட, ஒன்றிய இல்லம் தேடிக் கல்வி மைய ஒருங்கிணைப்பாளர்களாகப் மாற்றுப் பணியில் பணிபுரியும் ஆசிரியப் பெருமக்கள் தத்தம் சொந்த வாகனத்தின் உதவியுடன் மையம் செயல்படும் நேரத்தில் தொலைதூரம் வரை சென்று பார்வையிட்டு வருகின்றனர். தவிர, தன்னார்வலருக்கு ஏற்படும் கற்பித்தல் சார்ந்த ஐயப்பாடுகளுக்குத் தக்க தீர்வும் வழிகாட்டுதலும் வழங்கி வருவது வாடிக்கையாக உள்ளது.
இல்லம் தேடிக் கல்வித் திட்டம் தொடங்கிய காலத்தில் ஊர் ஊராக மாநில மையத்திலிருந்து அனுப்பி வைக்கப்பட்ட கலைக்குழுவினரை ஒருங்கிணைத்து பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தியதில் இவர்களின் பங்கு அளப்பரியது. அதேவேளையில், இவர்களுக்கு இதற்காக எந்தவொரு போக்குவரத்துப்படியும் இதுநாள்வரை வழங்கப்படாதது ஒரு பெரும் குறையாகும். இதன் காரணமாக, இவர்கள் தொடக்கத்தில் பம்பரமாகச் சுழன்று பணியில் காட்டிய வேகம் தற்போது சற்று சுணக்கம் அடைந்துள்ளது கண்கூடு. பலபேர் மீண்டும் தம் பள்ளிப்பணிக்கே சென்று விடும் முடிவில் இருப்பது அறியமுடிகிறது. தினசரி தொலைதூர அலைச்சல், போக்குவரத்துச் செலவு அதிகரிப்பு, தமது பள்ளியில் உரிய பதிலி ஆசிரியர் சரிவர நியமிக்காமை, உடல்நலம் ஒத்துழையாமை போன்ற காரணிகள் குறிப்பிடத்தக்கவையாக உள்ளன.
அடுத்ததாக, பள்ளித் திறப்பிற்கு பின் 6-14 வயது கற்போரிடையே காணப்படும் இல்லம் தேடிக் கல்வி மைய களைப்பும் சலிப்பும் காரணமாகக் குறைந்து வரும் தினசரி வருகை வீழ்ச்சி, முந்தைய ஆர்வமின்மை, ஏதேனும் நம்பகத்தன்மை இல்லாத காரணங்கள் கூறி தொடர்ந்து வாராதிருத்தல் போன்றவற்றால் சொற்ப கற்போருக்குக் கற்பிக்க தன்னார்வலர்கள் தற்போது முனைப்புக் காட்ட தவறி விடும் நோக்கும் போக்கும் மிகுந்து காணப்படுகிறது. கற்றல் கற்பித்தல் கருவிகள் செய்திடவும் வாங்கிடவும் வேறு வருமானம் அற்ற நிலையில் வீட்டிலுள்ளோரிடம் மீண்டும் மீண்டும் கேட்க முடியாத நிலை வேறு.
மாதாமாதம் உரிய காலத்தில் கிடைக்கப்பெறாத சொற்ப ஊக்கத்தொகைக்கு மேல் ஆகும் செலவினம், அதிக வேலைப்பளு, குடும்பச் சுமை, மாத ஊக்கத்தொகை மேலும் உயர்த்தித் தரப்படாமை, வேறு நல்ல அதிக சம்பளம் கிடைக்கும் வேலைக்குப் போக வீட்டிலுள்ளோர் தொடர் அறிவுறுத்தல்கள் மற்றும் வலியுறுத்தல்கள், தொடர் கண்காணிப்பின்மை, பெற்றோர்களிடமிருந்து முன்புபோல் போதிய ஒத்துழைப்பின்மை ஆகிய காரணங்களால் தன்னார்வலர்களிடையே ஆர்வமின்மை அதிகரித்துக் காணப்படுகின்றது.
வெளிப்படையாக சொல்வதென்றால் பல இல்லம் தேடிக் கல்வி மையங்கள் முன்பு போல் உயிர்ப்போடு செயல்படுவதில்லை. மேலிடத்திலிருந்து வரும் ஆணைக்கிணங்கவும் சம்பந்தப்பட்ட பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களின் தொடர் நச்சரிப்புகளாலும் வார நாட்களில் பல நாட்கள் இயங்காமல் இருக்கும் மையங்களைத் தொய்வின்றி பழையபடி செயல்பட வைக்க பள்ளி வேலை நேரங்களில் நேரடியாக தன்னார்வலர்கள் வருகை புரிந்து பள்ளிப் பிள்ளைகளிடம் கெஞ்சுவதும் தொடர்ந்து வருகை புரிந்திட செல்லமாகக் கடிந்து கொள்வதும் வேதனையளிக்கத்தக்க காட்சியாகும். ஏனெனில், இந்தத் தன்னார்வலர் பணிக்கு முனைவர் பட்டம் முதல் முதுகலை பொறியியல் பட்டதாரிகள் வரை விண்ணப்பித்து பணிசெய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தின் தற்போதைய தொய்விற்கு முழுமுதற் காரணமாக இருப்பவர்கள் கற்போரே ஆவர். இக்கற்போர்கள் அனைவரும் 1 முதல் 8 வகுப்புகள் முடிய உள்ள சின்னஞ்சிறு குழந்தைகள் ஆவார்கள். பள்ளிக்கூடங்கள் திறக்காத காலக்கட்டத்தில் இவர்களிடையே இயல்பாக எழும் கற்றல் மீதான அதீத ஆர்வம், குழு ஈடுபாடு மற்றும் மட்டற்ற மகிழ்ச்சி காரணமாக மடை திறந்த வெள்ளம்போல் புதிதாகத் தொடங்கப்பட்ட இல்லம் தேடிக் கல்வி மையம் நோக்கித் துள்ளிக் குதித்து ஓடோடி வந்தனர். பள்ளி வகுப்பறைகளில் நாள்தோறும் வாடிக்கையாக இருக்கும் எந்தவொரு கட்டாயக் கற்றல் சார்ந்த நெருக்கடிகளும் அக்காலகட்டத்தில் இவர்களுக்கு இல்லாததும் ஒரு முக்கிய காரணம் ஆகும்.
குறிப்பாக, கற்றல் இடைவெளிகளும் பள்ளி செல்ல விரும்பாத மனப்பான்மை உருவாதலும் தம் வயதிற்கு மீறிய தீம் பழக்கத்திற்கு ஆட்பட்டவர்களிடம் கொண்ட திடீர் நட்பால் எழும் பல்வேறு விரும்பத்தகாத செயல்களில் ஈடுபடும் மனப்பாங்கும் ஏற்படாதவாறு குழந்தைகளைப் பேணிப் பாதுகாக்க இவர்களுக்கென கல்வி வல்லுனர்களால் தயாரிக்கப்பட்ட கையேடுகளில் பாடல்கள், கதைகள் மற்றும் செயல்பாடுகள் மிகுந்த முக்கியத்துவம் பெற்றிருந்தன. கற்றலில் இனிமை மற்றும் குழந்தை மையக் கல்வி ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு எண்ணும் எழுத்தும் எந்தவொரு நிபந்தனையுமின்றிக் கற்றுத் தரப்பட்டன.
ஒரு மணி நேரம் மட்டுமே வகுப்பு, தமக்குப் பிடித்தமான மகிழ்வூட்டும் குறைந்த அளவிலான பாடப்பொருள்கள், ஆசிரியராக தம் ஊர் நல்ல அடிக்காத, அதட்டாத, நன்கு தெரிந்த, மிக அன்பான அக்கா, பாடம் படிக்க மிகவும் பிடித்த பொழுது, வீட்டுப்பாடம் இல்லாமை, முதுகை அழுத்தும் பாடப்புத்தகங்கள் சுமையின்மை, கட்டாயம் இல்லாமை முதலானவை குழந்தைகளுக்குப் புதிய அனுபவத்தைத் தந்ததும் முழு வருகைக்கான இன்றியமையாத காரணங்களாகும்.
நாளாக நாளாக குழந்தைகளிடையே எழும் இயல்பான சலிப்பும் எரிச்சலும் வீடு மீதான அளவுகடந்த பாதுகாப்பு உணர்வும் பெற்றோர் மீதான விட்டுப் பிரிய முடியாதப் பாசமும் இல்லம் தேடிக் கல்வி மையம் மீதான ஈர்ப்பைக் குறைக்கத் தொடங்கியிருந்தது. அதற்கேற்ப தன்னார்வலர்களுக்கு ஏற்பட்டிருந்த அயர்ச்சியும் அவநம்பிக்கையும் குடும்ப சூழ்நிலைகளும் கற்போரின் கட்டாய வருகையை ஊக்கப்படுத்த தவற ஆரம்பித்தது.
பள்ளிகள் அனைத்தும் திரும்பவும் திறக்கப்பட்டு வழக்கம்போல் செயல்படத் தொடங்கியதில் மையக் கற்போரின் கற்றல் சுமைகள் அதிகரிக்கத் தொடங்கின. இரட்டைச் சவாரி செய்யும் அவலநிலைக்கு இக்கற்போர் தள்ளப்பட்டனர். வகுப்பறையில் வகுப்பு அல்லது பாட ஆசிரியர்களால் தரப்படும் அனைத்துப் பாட வீட்டுப்பாடம், இரட்டை மற்றும் நான்கு வரிக் குறிப்பேடு எழுதுதல் பயிற்சிகள், கருத்து அல்லது மன வரைபடம் மற்றும் தொகுத்தல் எழுதுதல், தமிழ் மற்றும் ஆங்கில சொல்வதெழுதுதல் பயிற்சிக்குத் தம்மை தயார்படுத்துதல், வீட்டுக் கணக்குகள் செய்தல், வரைபடம் குறித்தல், வடிவியல் விளக்கப்படங்கள் வரைதல், வாராந்திர அறிவியல் பாட சிறு அலகு தேர்விற்கு எழுதியும் வரைந்தும் பார்த்தல், சமூக அறிவியல் பாடத்தை வகுப்பறையில் திறம்பட வாசித்துக் காட்ட தம்மைத் தயார்படுத்திக் கொள்ளுதல், பதினாறு வாய்பாடு, மொழிப்பாட செய்யுள் மனப்பாடப் பகுதிகளைப் பிழையில்லாமல் வாசித்து எழுதிப் பார்த்தல், எல்லா பாடங்களுக்கும் உரிய வினா விடைகள் மற்றும் இரு பாடத்திற்குரிய கட்டுரைகள் போன்றவற்றை செய்து முடிக்கவே 24 மணி நேரம் போதாத நிலை. இதில் மீளவும் ஒரு மணி நேரம் மீண்டும் படிக்கப் புறப்படுவதென்பது நாளடைவில் மாணவ மாணவியரிடையே இயலாமல் போய்விட்டது.
இதில் வேடிக்கை என்னவென்றால், பள்ளி மாலை விட்டதும் நேராக வீட்டிற்கு சென்று பள்ளிச் சீருடையைக் களைந்துவிட்டு வேறொரு வீட்டு உடையை உடுத்திக் கொண்டு, சிற்றுண்டி தேநீர் பருகிவிட்டு உடனடியாகப் பள்ளி வளாகத்திலேயே வேறுவழியின்றிச் செயல்படும் இல்லம் தேடிக் கல்வி மையத்திற்கு மீண்டும் வருவதென்பது நடைமுறைக்கு இயலாத ஒன்று. மையத்திற்கும் மாணவர் வீட்டிற்கும் இடைப்பட்ட நெடுந்தொலைவும் மாணாக்கர்கள் களைப்படைவதில் முக்கிய பங்காற்றுகிறது. மாணவர்களால் மூச்சு கூட விட முடியாத நிலைமை.
இதுதவிர, வெறும் பாடல்களும் கதைகளும் ஒரேவிதமான செயல்பாடுகளும் சலிப்பை ஏற்படுத்துவதும் மையம் வாராமைக்கான காரணமாக இருக்கின்றது. தன்னார்வலர்களின் திடீர் தொடர் விடுப்புகள் எடுத்தல், வீட்டு வேலைகளைச் செய்ய வளரிளம் பருவக் கற்போரைப் பணித்தல், தம் கைக்குழந்தையைப் பார்த்துக் கொள்ளச் செய்தல், எதிர்பாராது தன்னார்வலர்கள் வீடுகளில் நிகழும் குடும்ப சண்டைகள் மற்றும் சச்சரவுகள் நிகழ்த்தப், பள்ளியில் கொடுக்கப்பட்ட வீட்டுப்பாட வேலைகளைச் செய்து முடித்து தொடர்ந்து போகச் சொல்லுதல், பெற்றோர் அனுப்ப மறுத்தல், சக கற்போர் வருகை புரியாதிருத்தல் போன்றவை இல்லம் தேடிக் கல்வி மையத் தொய்வில் அடங்கும்.
முடிவாக, இல்லம் தேடிக் கல்வி மையங்கள் தொய்வின்றி மீண்டும் சிறப்பாகச் செயல்பட உரிய உகந்த உன்னத பயனுள்ள துரித நடவடிக்கைகள் எடுப்பது பொறுப்பு அலுவலர் உள்ளிட்ட நிர்வாகத்தின் தலையாயக் கடமையாகும். ஒருங்கிணைப்பாளருக்கான போக்குவரத்துப் படி, தன்னார்வலர்களுக்கான ஊக்கத்தொகை அதிகரிப்பு, கற்றல் கற்பித்தல் வளங்களை உருவாக்குதலுக்குத் தேவையான நிதியுதவி உள்ளிட்ட நிதி சார்ந்த நியாயமான செலவினங்களை அரசு பெருந்தன்மையுடன் அங்கீகரித்து நடந்து கொள்ள வேண்டியது அவரச அவசியமான ஒன்று. தொடர்ச்சியாக முழு வருகை தரும் கற்போருக்கு ரூபாய் ஆயிரம் ஊக்கப் பரிசுத்தொகை வழங்கிப் பாராட்டி உற்சாகப்படுத்த கல்வித்துறை முன்வர வேண்டும். அப்போதுதான் தமிழக முதல்வரின் மாபெரும் கனவுத் திட்டமாகத் திகழும் இல்லம் தேடிக் கல்வி மையங்கள் புதுப்பொலிவுடன் ஒளிரும்.
முனைவர் மணி கணேசன்
No comments:
Post a Comment