பள்ளிகளின் அடிப்படை வசதிகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்: அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு - ஆசிரியர் மலர்

Latest

 




 


25/08/2022

பள்ளிகளின் அடிப்படை வசதிகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்: அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை உயர் நீதிமன்றத்தில் பி.ஆர்.சுபாஷ் சந்திரபோஸ் என்பவர் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், மாநிலம் முழுவதும் உள்ள பல பள்ளிகளில் விளையாட்டு மைதானங்கள் இல்லை. கல்விக்கு இணையாக விளையாட்டுக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த வழக்கு கடந்த முறை தலைமை நீதிபதி தலைமையிலான முதல் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, விளையாட்டு மைதானம் மட்டுமல்லாமல், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்தும் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.


இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி, நீதிபதி என்.மாலா முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, சென்னை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தார். அதில், சென்னை மாவட்டத்தில் மொத்தம் 1,434 பள்ளிகள் உள்ளன. அதில் 367 பள்ளிகளில் விளையாட்டு மைதானங்கள் இல்லை. அந்த பள்ளி மாணவர்கள், அருகே உள்ள பொது விளையாட்டு மைதானங்களை பயன்படுத்துகின்றனர்.

அதேபோல, 1,434 பள்ளிகளில் கழிவறை வசதிகள் இருந்தாலும், அதில் 21 பள்ளிக்கூடத்தில் குடிநீர் வசதி இல்லை. 290 பள்ளிகளில் கழிவறையில் குப்பைத்தொட்டி இல்லை என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த அறிக்கையை படித்து பார்த்த நீதிபதிகள், இதுபோல மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகளில் உள்ள அடிப்படை வசதிகள் குறித்தும், விளையாட்டு மைதானங்கள் குறித்தும் அடுத்த வாரம் அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று மாநில அரசு பிளீடர் முத்துக்குமாருக்கு உத்தரவிட்டனர்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459