திருச்சி: கல்வித் தொலைக்காட்சி சிஇஓவாக தேர்ந்தெடுக்கப்பட்ட நபரின் நியமனம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
திருச்சி ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நேற்று நடைபெற்ற மண்டல அளவிலான ஆய்வுக் கூட்டத்துக்குப் பிறகு அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கல்வித் தொலைக்காட்சிக்கான முதன்மை செயல் அலுவலரை(சிஇஓ) நாங்கள் தேர்வு செய்யவில்லை.
இதற்காக பத்திரிகையாளர், திரைப்பட இயக்குநர் உள்ளிட்ட 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இதற்கு விண்ணப்பித்த 79 பேரின் விண்ணப்பங்களை இக்குழுவினர் ஆய்வு செய்து, தகுதி அடிப்படையில் 3 பேரை தேர்வு செய்து, பின்னர், அதிலிருந்து ஒருவரை சிஇஓவாக தேர்ந்தெடுத்தனர்.
சிஇஓவாக நியமிக்க தேர்ந்தெடுக்கப்பட்ட நபரின் பின்புலம் குறித்து சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, அவரது நியமனம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தமிழக முதல்வர் குறிப்பிட்டது போல சிறிய விஷயத்தில் கூட சமரசம் செய்து கொள்ளமாட்டோம். முதல்வரின் வளர்ப்பு பிள்ளை நான். ஆகவே, இந்த அரசும், நானும் ஏமாறமாட்டோம்.
நியமன பணிகள் மும்முரம்
பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறையை போக்க தற்காலிக ஆசிரியர்கள் 10 ஆயிரம் பேர் நியமனம் செய்யப்பட உள்ளனர். இதில், முதற்கட்டமாக 2,500 பட்டதாரி ஆசிரியர்களை நியமனம் செய்வதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. சான்றிதழ் சரிபார்க்கும் பணி முடிவடைந்த பிறகு அவர்கள் பணியில் அமர்த்தப்படுவர். மேலும்உள்ள பணியிடங்களுக்கு டெட் தேர்வு மூலம் ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுவர். இவ்வாறு அமைச்சர் கூறினார்.
No comments:
Post a Comment