பெற்றோர் பாதி ஆசிரியர்களாகவும், ஆசிரியர்கள் பாதி பெற்றோராகவும் இருக்க வேண்டும் - முதல்வர் மு.க.ஸ்டாலின் - ஆசிரியர் மலர்

Latest

 




 


12/08/2022

பெற்றோர் பாதி ஆசிரியர்களாகவும், ஆசிரியர்கள் பாதி பெற்றோராகவும் இருக்க வேண்டும் - முதல்வர் மு.க.ஸ்டாலின்

பெற்றோர்கள் பாதி ஆசிரியர்களாகவும், ஆசிரியர்கள் பாதி பெற்றோர்களாவும் இருந்து மாணவர் சமுதாயத்தை வளர்த்தால் போதை போன்ற தவறான பழக்கங்களில் யாரும் ஈடுபட மாட்டார்கள் என முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். சென்னை கலைவாணர் அரங்கத்தில், போதைப்பொருட்கள் இல்லாத தமிழ்நாடு திட்டத்தை நேற்று தொடங்கி வைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: நான் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் நேரங்களில் மகிழ்ச்சி அடைகிறேன், பெருமை கொள்கிறேன் என குறிப்பிட்டு சொல்வேன். ஆனால், இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்கிற போது அதை சொல்ல முடியவில்லை. ஏனென்றால், ஒருவிதமான கவலை அளிக்கக்கூடிய மனநிலையில்தான் இந்த நிகழ்ச்சியில் நின்றுகொண்டு இருக்கிறேன். தமிழ்நாட்டில் போதைப்பொருட்களின் பயன்பாடும், அதற்கு அடிமையாகிறவர்களின் தொகையும் அதிகரித்து கொண்டு போவதை நினைக்கும் போது கவலையும், வருத்தமும் அதிகமாகிறது. இதனை தடுக்க, இரண்டு விதமான முறைகளில் நாம் சென்றாக வேண்டும்.


முதல்வழி போதைப்பொருள் நடமாட்டத்தை கட்டுப்படுத்துவது, அதனை விற்பனை செய்பவர்களை கைது செய்வது, போதைப்பொருட்களை பயன்படுத்த வேண்டாம் என்றும், அதனால் ஏற்பாடும் பாதிப்புகளை விளக்குவதும் இரண்டாவது வழி. முதல்வழி சட்டத்தின் வழி. இதை அரசும், காவல்துறையும் கவனிக்கும், இரண்டாவது வழி விழிப்புணர்வு வழி. இதில் பொதுமக்களும் இணைந்து செயல்பட்டால்தான் அத்தகைய விழிப்புணர்வு வழியை ஏற்படுத்த முடியும். நேற்றைய தினம் (நேற்று முன்தினம்) அதிகாரிகளுக்கு, கஞ்சா விளைவிப்பதை முற்றிலுமாக தடுத்தாக வேண்டும். மலை அடிவாரங்களை கண்காணிக்க வேண்டும். அண்டை மாநிலங்களில் இருந்து கடத்தி வருவதை தடுத்தாக வேண்டும். எல்லை மாவட்டங்களில் சோதனை சாவடிகளை அதிகரிக்க வேண்டும். கடலோர மாவட்டங்களில் கண்காணிப்பை அதிகப்படுத்த வேண்டும். காவல்துறையின் ரோந்து பணி அதிகரிக்க வேண்டும். அனைத்து துறைகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். போதைப்பொருள் அதிகமாக விற்பனை ஆகும் இடங்களை கண்காணிக்க வேண்டும். பள்ளி, கல்வி நிறுவனங்களுக்கு அருகில் விற்கப்படுவதை தடுக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளேன். அரசு இதுதொடர்பாக சட்டங்களை கடுமையாக்குவதற்கு முடிவெடுத்துள்ளது. சட்டங்களை திருத்தி, சிறப்பு நீதிமன்றங்களை அமைக்க இருக்கிறோம்.



போதைப்பொருள் விற்பவர்களின் சொத்துகள் எல்லாம் பறிமுதல் செய்யப்பட இருக்கிறது. இதற்காக தனியாக சைபர் செல் உருவாக்கப்பட இருக்கிறது. இதற்கான உறுதியை மாவட்ட ஆட்சியர்களும், காவல்துறை கண்காணிப்பாளர்களும் ஏற்றுக்கொள்ள இருக்கிறார்கள். இவை அனைத்தும் அரசாங்கத்தின் கடமை. இந்த நடவடிக்கைகளில், நான் சர்வாதிகாரியை போல செயல்பட்டு குற்றம் நடைபெறாமல் தடுப்பேன் என்று அதிகாரிகள் கூட்டத்தில் உறுதி அளித்துள்ளேன். இவற்றை நாங்களும், அரசு அதிகாரிகளும், காவல்துறையும் பார்த்துக்கொள்கிறோம். சட்டம் அதன் கடமையை உறுதியாக செய்யும். அப்படி அந்த கடமையை செய்ய தவறும் அதிகாரிகள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என இந்த கூட்டத்தின் வாயிலாக கடுமையாக கூற விரும்புகிறேன். இப்போது, திமுக ஆட்சியில் சட்டத்தின் ஆட்சிதான் நடக்கிறது. குற்றங்கள் குறைந்து, குற்றவாளிகள் உடனுக்குடன் கைது செய்யப்படுகிறார்கள். அவர்களுக்கு முறையான தண்டனைகளையும் வாங்கி கொடுத்து வருகிறோம். குறிப்பாக போதை மருந்து விற்பனை செய்யும் குற்றங்களில் ஈடுபடுபவர்களை தனிப்பட்ட குற்றவாளிகளாக கருத முடியாது. இந்த சமுதாயத்தை கெடுக்கக்கூடிய குற்றவாளிகள். சமூகத்தில் தீராத பெரும் நோயை பரப்பும் குற்றவாளிகளாக இருப்பதால் அவர்கள் மீது, நடவடிக்கை எடுக்க இந்த அரசு எந்தவித தயக்கமும் காட்டாது.

திமுக ஆட்சி அமைந்தது முதல் 41,268 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ரூ.50 கோடிக்கு அதிகமான சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் போதை நடமாட்டத்திற்கு முழுமையாக முற்றுப்புள்ளி வைக்க முடியவில்லை. இந்த சங்கிலியை உடைத்தாக வேண்டும். எந்த குற்றமானாலும் அதில் சட்டத்தின் பங்கு பாதிதான். குற்றவாளிகள் மனமாற்றம் பாதி அளவாவது இருக்க வேண்டும். சாதாரண நோயாக இருந்தால் பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்ற அவர்களின் பெற்றோர், குடும்பம், உறவினர்கள் போதும். ஆனால் போதை போன்ற சமூக நோயாக இருக்குமானால் அதில் பாதிக்கப்பட்டவரை காப்பாற்ற ஒட்டுமொத்த சமூகமே முயற்சி எடுத்தாக வேண்டும். போதை என்பது இந்த சமூகத்தை அழித்துவிடும். போதைக்கு காரணங்களை தேடாதீர்கள், பிரச்னைகளுக்கு தீர்வு தேடுங்கள். அதன் முடிவில் வெற்றி காத்திருக்கும். போதையால் மன பிரச்னை, சட்ட பிரச்னை ஏற்படுகிறது. போதைக்கு தெரிந்த ஒரே பாதை அழிவு பாதைதான். போதை மருந்தின் தீமைகளை பட்டியலிடுங்கள் என்று மருத்துவர்களிடம் கேட்ட போது, பீதியே ஏற்பட்டது. முதலில் மூளையின் செயல்பாடு குறைகிறது, மந்தம் ஏற்படுகிறது, இயல்பான பழக்கவழக்கம் மாறுகிறது, மனநிலை பாதிக்கப்படுகிறது.போதை என்பது அதை பயன்படுத்தும் தனி மனிதனின் பிரச்னை அல்ல, சமூக பிரச்னை.

போதையை முழுமையாக தடுக்க வேண்டும் என சொல்வதற்கு காரணம் சமூகத்தின் குற்றங்களை தடுக்க வேண்டும் என்பதுதான். போதைதான் பல்வேறு குற்றங்களுக்கு தூண்டுகோலாக இருக்கிறது. போதைப்பொருட்களை தடுக்க வேண்டும் என்றால் இந்த சமூகத்தில் அனைவரும் சேர்ந்துதான் தடுத்தாக வேண்டும். இது மக்கள் இயக்கமாக செயல்பட வேண்டும். பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை போதைப்பொருள் பயன்படுத்தாமல் கண்காணிக்க வேண்டும். இதே கடமை பள்ளி ஆசிரியர்களுக்கும் இருக்கிறது. இதே பணி கல்லூரி நிர்வாகங்களுக்கும் இருக்கிறது. வியாபாரிகள், கடைக்காரர்கள் இதை விற்க மாட்டோம் என உறுதி எடுக்க வேண்டும். மனநல மருத்துவர்கள் பரப்புரை செய்ய வேண்டும். போதையில் விழுந்தவர்களை மீட்கும் பிணயை, சமூக அமைப்புகள், அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் செய்தாக வேண்டும். இதில் பெற்றோர்கள், ஆசிரியர்களின் பங்கு மிக முக்கியமானது. பெற்றோர்கள் பாதி ஆசிரியர்களாகவும், ஆசிரியர்கள் பாதி பெற்றோர்களாவும் இருந்து மாணவர் சமுதாயத்தை வளர்த்தால் போதை போன்ற தவறான பழக்கங்களில் யாரும் ஈடுபட மாட்டார்கள். சட்டத்தின் காவலர்களாக மாவட்ட ஆட்சியர்களும், காவல் கண்காணிப்பாளர்களும் இருப்பதை போல, விழிப்புணர்வின் காவலர்களாக பெற்றோர்களும் ஆசிரியர்களும் செயல்பட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459