* ‘டாக்டர் ஆப் சயின்ஸ்’ கவுரவத்தின் மகத்துவம் என்ன? கல்வியாளர்கள், ஆராய்ச்சியாளர்களின் உச்சபட்ச கவுரவம்தான், ‘டாக்டர் ஆப் சயின்ஸ்’ பட்டம். ஒரு ஆராய்ச்சியாளரின், கல்வியாளரின் சமூக பங்களிப்பை, கவுரவிக்கும் பொருட்டு, வழங்கப்படும் மிக உயரிய பட்டம் இது. குறிப்பாக, தரமான ஆராய்ச்சிகளுக்கும், தகுதியான சமூக பங்களிப்பிற்கும் மட்டுமே வழங்கப்படும் மரியாதை இது.
* ‘டாக்டர் ஆப் சயின்ஸ்’ கவுரவத்தை பெறுவது எப்படி? எங்கு விண்ணப்பிக்க வேண்டும்? யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? எப்படி உழைக்க வேண்டும்? தேசிய மற்றும் சர்வதேச அளவிலான பல்கலைக்கழகங்கள் வாயிலாகத்தான் இந்த கவுரவத்தை பெற முடியும். ‘டாக்டர் ஆப் சயின்ஸ்’ பட்டம் பெற, குறைந்தபட்சம் முனைவர் பட்டம் பெற்றிருக்க வேண்டும். முனைவர் பட்டம் பெற்று 4-5 வருடங் களுக்கு பிறகுதான், இதற்கு விண்ணப்பிக்க முடியும். மேலும் தரமான ஆராய்ச்சி, சமூக முன்னேற்றத்திற்கான ஆய்வு பணிகள், 50-க்கும் மேற்பட்ட ஆய்வு கட்டுரைகள் வெளியீடுகள்... இவை எல்லாம் இருக்கும்பட்சத்தில்தான், டி.எஸ்.சி. எனப்படும் டாக்டர் ஆப் சயின்ஸ் பட்டத்திற்கு விண்ணப்பிக்க முடியும்.
* ‘டாக்டர் ஆப் சயின்ஸ்’ கவுரவத்தின் மூலம், கல்வி அந்தஸ்தை எப்படி மேம்படுத்தலாம்? ஒரு பேராசிரியராக பணியாற்றிக்கொண்டே டாக்டர் ஆப் சயின்ஸ் பட்டம் பெறுபவர்களுக்கு, பல்கலைக்கழக துணை வேந்தர், துறை இயக்குனர் போன்ற உயர் பதவிகளில் அங்கம் வகிக்கும் வாய்ப்பு உருவாகும். அதேசமயம் ஒரு ஆராய்ச்சியாளராக நீங்கள் டாக்டர் ஆப் சயின்ஸ் பட்டம் பெறுகையில், அந்த ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குனராக செயலாற்றும் முயற்சிகளுக்கு அடித்தளமிடுகிறீர்கள்.
* மத்திய-மாநில அரசின் மானியம் கிடைக்குமா? டாக்டர் ஆப் சயின்ஸ் என்ற பட்டத்திற்கு மானியம் கிடைக்காது. ஆனால் இதற்கு அடித்தளமாக அமையும், பி.எச்டி. படிப்புகளுக்கும், மற்ற பிற ஆராய்ச்சிகளுக்கும் மத்திய-மாநில அரசுகளின் உதவியும், சில தனியார் அமைப்பு களின் உதவி தொகையும் கிடைக்கும்.
* மத்திய-மாநில ஆராய்ச்சி குழு, ஆலோசனை குழுக்களில் பங்குபெறும் வாய்ப்பு கிடைக்குமா? நிச்சயமாக கிடைக்கும். துறை சார்ந்த அமைச்சகத்தில் ஆலோசகராகவும், ஆராய்ச்சி குழு தலைவராகவும் பணியாற்றும் வாய்ப்பு கிடைக்கும். அந்தவகையில் நான் மத்திய-மாநில அரசுகளின் பல ஆராய்ச்சி குழுக்களில் அங்கம் வகித்திருக்கிறேன். மத்திய அரசின் யானை பாதுகாப்பு குழு, மாநில அரசின் அறிவியல் தொழில்நுட்ப கொள்கை குழு, மழைநீர் வடிகால் மற்றும் வாய்கால் ஆராய்ச்சி குழுக்களில் அங்கம் வகித்திருக்கிறேன்.
இதுவரை இந்தியாவில் மொத்தம் எத்தனை பேர் டாக்டர் ஆப் சயின்ஸ் பட்டம் பெற்றிருக்கிறார்கள்? விரல்விட்டு எண்ணி விடும் வகையில், மிக சொற்பமான எண்ணிக்கையில்தான் இருக்கிறார்கள். மிக நீண்ட கல்வி பாரம்பரியம் கொண்ட சென்னை லயோலா கல்லூரியில் என்னுடன் சேர்த்து, மொத்தம் மூவர் மட்டுமே இந்த கவுரவத்தை பெற்றிருக்கிறோம்.
* உலகநாடுகளை ஒப்பிடுகையில், இந்தியாவில் டாக்டர் ஆப் சயின்ஸ் பட்டம் பெறுவது சுலபமா? இல்லை கடினமா? அப்படி இல்லை. அறிவியல் உலகம் ஏற்கக்கூடிய ஆராய்ச்சிகளும், ஆய்வு அறிக்கைகளும் நம்மிடம் இருக்கும்பட்சத்தில் நமக்கான அங்கீகாரம், நிச்சயம் கிடைக்கும். இரண்டு வெளிநாட்டு அறிஞர்கள், ஒரு இந்திய அறிஞர்களை கொண்டுதான், நாம் சமர்ப்பிக்கும் ஆராய்ச்சி மற்றும் ஆய்வறிக்கைகள் மதிப்பிடப்படுகின்றன. இதே நடைமுறைதான், வெளிநாடுகளிலும் பின்பற்றப்படும் என்பதால், பெரிய வித்தியாசம் இருக்காது.
* உங்களது டாக்டர் ஆப் சயின்ஸ் ஆராய்ச்சி எது சம்பந்தமானதாக இருந்தது? ‘சுற்றுச்சூழல் உயிரியல்' என்பதை அடிப்படையாக கொண்டுதான் என்னுடைய ஆராய்ச்சி பணிகள் அமைந்திருந்தன. சமூகம் சார்ந்த பிரச்சினைகளுக்கு அறிவியல் ரீதியாக தீர்வு கண்டதினால், எனது சமூக பங்களிப்பை மையப்படுத்தி, டாக்டர் ஆப் சயின்ஸ் கவுரவம் கிடைத்திருக்கிறது.
* அதை திறம்பட முடிக்கையில், நீங்கள் எதிர்கொண்ட சவால்கள் என்ன? பொதுவாக ஆராய்ச்சியாளர்களுக்கு, ஆராய்ச்சிகளை வெற்றிகரமாக முடிப்பதில் சிக்கல் இருக்கும். ஆனால் எனக்கு, ஒரு கல்வியாளராக கல்லூரியில் பணியாற்றிக்கொண்டே ஆராய்ச்சி பணிகளை மேற்கொண்டதுதான், சவால் நிறைந்த ஒன்றாக அமைந்தது.
* ‘டாக்டர் ஆப் சயின்ஸ்’ பட்டம் பெற நினைக்கும்/துடிக்கும் இளம் ஆராய்ச்சி மாணவர்களுக்கு, வழிகாட்டுவீர்களா? இதுவரை நிறைய இளம் ஆராய்ச்சி மாணவர்களுக்கும், பி.எச்டி. மாணவர்களுக்கும் வழிகாட்டி இருக்கிறேன். அந்த பணி இனியும் தொடரும்.
No comments:
Post a Comment