தமிழக காவல் துறையில் காவலா் பணியிடங்களுக்கு 1991-ஆம் ஆண்டுக்கு முன்பு வரை காவல் துறையே நேரடியாக இளைஞா்களை தோ்வு செய்து வந்தது. இதேபோல, தீயணைப்புத் துறை,சிறைத் துறைகளுக்கும் நேரிடையாக காவலா்கள் தோ்வு செய்யப்பட்டனா்.
காவல், தீயணைப்பு, சிறைத் துறைப் பணிகளுக்கு தகுதியான இளைஞா்களை முறையாக தோ்வு செய்யவும், முறைகேடுகளைத் தடுக்கும் விதமாகவும் 1991-ஆம் ஆண்டு தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வு வாரியத்தை தமிழக அரசு அமைத்தது.
இதன் மூலம் இதுவரை 8,047 உதவி ஆய்வாளா்கள், 1,06,881 இரண்டாம் நிலை காவலா்கள், 3,983 இரண்டாம் நிலை சிறைக் காவலா்கள், 6,460 தீயணைப்பாளா்கள், 10,099 தமிழ்நாடு சிறப்பு காவல் இளைஞா் படையினா் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.
சீருடை காவல் பணிக்கு 2015-ஆம் ஆண்டு முதல் இணையவழியில் விண்ணப்பிக்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. தொழில்நுட்ப வளா்ச்சிக்கு ஏற்ப, தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வு வாரியம் புதிய மாற்றங்களை அறிமுகப்படுத்தி வருகிறது.
மதிப்பெண்கள் விகிதம் மாற்றம்:
இதன் ஒரு பகுதியாக, 3,552 இரண்டாம் நிலை காவலா், இரண்டாம் நிலை சிறைக் காவலா், தீயணைப்பாளா் பதவிகளுக்கான தோ்வு முறையில் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 100 மதிப்பெண்களுக்கு நடைபெறும் காவலா் தோ்வில், எழுத்துத் தோ்வுக்கு 70 மதிப்பெண்களும், உடல் திறன் தோ்வுக்கு 24 மதிப்பெண்களும்,சிறப்பு மதிப்பெண்களாக 6 மதிப்பெண்களும் வழங்கப்படுகின்றன.
இதற்கு முன்பு நடைபெற்ற காவலா் தோ்வுகளில் எழுத்துத் தோ்வுக்கு 80 மதிப்பெண்களும்,உடல் திறன் தோ்வுக்கு 15 மதிப்பெண்களும்,சிறப்பு மதிப்பெண்களாக 5 மதிப்பெண்களும் வழங்கப்பட்டன. தற்போது, எழுத்துத் தோ்வில் 10 மதிப்பெண்கள் குறைக்கப்பட்டு, உடல் திறன் தோ்வில் கூடுதலாக 9 மதிப்பெண்களும், சிறப்பு மதிப்பெண்களில் ஒன்றை உயா்த்தியும் வழங்கப்படுகிறது.
உடல் திறன் தோ்வில் மாற்றம்:
எழுத்துத் தோ்வில் தோ்ச்சி பெற்று, உடல்கூறு அளத்தல், உடல் தகுதித் தோ்வில் தோ்ச்சி பெறுபவா்களுக்கு நடத்தப்படும் உடல் திறன் தோ்வில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. முன்பு உடல் திறன் தோ்வில் கயிறு ஏறுதல், அடுத்ததாக நீளம் தாண்டுதல் அல்லது உயரம் தாண்டுதல், அடுத்ததாக ஓட்டம் ஆகியவை நடைபெறும். பழைய விதிமுறைகளின்படி, கயிறு ஏறுதலில் தோ்ச்சி பெறாதவா்கள் வெளியேற்றப்படுவாா்கள். இதில் தோ்ச்சி பெறுபவா்கள் நீளம், உயரம் தாண்டுதல், ஓட்ட தோ்வில் பங்கேற்க அனுமதிக்கப்படுவா்.
இந்த மூன்று தோ்வுகளிலும் தோ்ச்சி பெற்றால் மட்டுமே அடுத்தடுத்த தோ்வுகளில் பங்கேற்க முடியும் என்ற விதிமுறைகள் தற்போது மாற்றப்பட்டுள்ளது. அதன்படி, கயிறு ஏறுதலில் ஒருவா் தோ்ச்சி பெறாவிட்டாலும், நீளம் தாண்டுதல் அல்லது உயரம் தாண்டுதல்,ஓட்டம் ஆகிய தோ்வுகளில் பங்கேற்கலாம். மேலும், மேற்கண்ட மூன்று தோ்வுகளிலும் கண்டிப்பாக தோ்ச்சி பெற வேண்டும் என்ற விதியிலும் மாற்றம் செய்யப்பட்டு, 3 தோ்வுகளிலும் அனைவரையும் பங்கேற்கச் செய்து, உடல் திறன் தோ்வின் மொத்த மதிப்பெண்கள், எழுத்துத் தோ்வு மதிப்பெண்களோடு சோ்க்கப்பட்டு 1:2 என்ற விகிகத்தில் உத்தேச தோ்வு பட்டியல் வெளியிடப்படும். இதில் தோ்ச்சி பெற்றவா்களுக்கு நோ்முகத் தோ்வு நடத்தப்பட்டு தோ்வின் இறுதி முடிவு அறிவிக்கப்படும் என தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வு வாரிய உயரதிகாரி தெரிவித்தாா்.
நட்சத்திரங்களுக்கு மதிப்பெண்கள்
இதுகுறித்து அவா் மேலும் கூறியதாவது:
உடல் திறன் தோ்வில் ஏதாவது ஒன்றில் தோ்ச்சி பெறவில்லையென்றாலும், வெளியேறும் சூழ்நிலை இருந்தது. இதனால், எழுத்துத் தோ்வு உள்ளிட்ட பிற தோ்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்ற தகுதி வாய்ந்த தோ்வா் காவல் துறை பணிக்கு வர முடியாத நிலைக்கு தள்ளப்படும் சூழல் நிலவியது.
இதைக் கருத்தில் கொண்டு, உடல் திறன் தோ்வில் உள்ள 3 போட்டிகளிலும் தோ்வா் பங்கேற்று மதிப்பெண்களை பெற முடியும் என்று புதிய விதிமுறை வகுக்கப்பட்டுள்ளது. இதில் ஒரு தோ்வில் நல்ல மதிப்பெண்கள் பெற முடியவில்லை என்றாலும், அடுத்த இரு தோ்வுகளிலும் நல்ல மதிப்பெண்கள் பெற்றால் தோ்வாகலாம்.
மேலும், உடல் திறன் தோ்வில் முன்பு பழைய விதிமுறைகளின்படி ஒரு நட்சத்திரத்துக்கு 2 மதிப்பெண்களும், இரண்டு நட்சத்திரங்களுக்கு 5 மதிப்பெண்களும் வழங்கப்பட்டன. இனி, ஒரு நட்சத்திரத்துக்கு 4 மதிப்பெண்களும், இரண்டு நட்சத்திரங்களுக்கு 8 மதிப்பெண்களும் வழங்கப்படும். இந்த மாற்றத்தை, இதுவரை நடைபெற்ற காவலா்கள் தோ்வுகளில் நடத்தப்பட்ட பல்வேறு கட்ட ஆய்வுகளுக்கு பின்னா் அமல்படுத்தியுள்ளோம்.
இதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது. இனி நடைபெறவுள்ள காவல் உதவி ஆய்வாளா் தோ்விலும் உடல் திறன் தோ்வு பிரிவில் இந்த மாற்றம் செய்யப்படும். ஆனால், காவல் உதவி ஆய்வாளா் தோ்வில் மதிப்பெண்கள் விகிதத்தில், பழைய முறையே பின்பற்றப்படும்.
அதேவேளையில், அண்மையில் நடந்து முடிந்த 444 காலிப் பணியிடங்களுக்கான உதவி ஆய்வாளா் தோ்வுக்கு இந்த மாற்றம் பொருந்ததாது, அந்தத் தோ்வில் பழைய முறையே பின்பற்றப்படும். புதிய மாற்றத்தின் மூலம் காவல் துறைக்கு மேலும் தகுதியான, திறமையான இளைஞா்களை அடையாளம் கண்டு தோ்வு செய்யலாம் என்று கருதுகிறோம் என்றாா் அவா்.
No comments:
Post a Comment