தமிழகத்தில் தற்காலிக ஆசிரியர்கள் நியமனத்தை தடை செய்ய வேண்டும்; ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு மட்டுமே பணி வழங்கப்பட வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.இது தொடர்பாக அன்புமணி ராமதாஸ் வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர்களை நியமிப்பதற்கான திருத்தப்பட்ட வழிகாட்டுதல்களை பள்ளிக்கல்வித் துறை வெளியிட்டுள்ள போதிலும், அது தகுதித் தேர்வில் வெற்றி பெற்று ஆசிரியர் பணிக்காக காத்திருப்போர் மத்தியில் எழுந்துள்ள கொந்தளிப்பை போக்கவில்லை. தற்காலிகம் என்பதை தடை செய்து விட்டு, தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களை அரசு பள்ளிகளில் நிரந்தர ஆசிரியர்களாக நியமிப்பதன் மூலம் மட்டுமே இந்த சிக்கலுக்கு நிரந்தர தீர்வு காண முடியும்.
தற்காலிக நியமனம்
தமிழ்நாடு அரசு பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களுக்கு போட்டித் தேர்வுகளை நடத்தி, நிரந்தர ஆசிரியர்கள் நியமிக்கப்படும் வரை மாணவர்களுக்கு பாடம் நடத்துவதற்காக 4,989 இடைநிலை ஆசிரியர்கள், 5,154 பட்டதாரி ஆசிரியர்கள், 3,188 முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் என மொத்தம் 13,331 ஆசிரியர்களை மிகக்குறைந்த ஊதியத்தில் தற்காலிகமாக நியமிக்க தமிழக அரசு ஆணையிட்டுள்ளது. ஆசிரியர்களை நிரந்தரமாக நியமிக்காமல் தற்காலிகமாக நியமிப்பதை பெற்றோர்கள் முதல் சென்னை உயர்நீதிமன்றம் வரை அனைத்துத் தரப்பினரும் கடுமையாக கண்டித்திருக்கின்றனர்.தவறான கொள்கைஆனால், தமிழக அரசோ, இது ஒரு தற்காலிக ஏற்பாடு தான், அடுத்த சில மாதங்களில் நிரந்தர ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு விடுவார்கள் என்று விளக்கமளித்திருக்கிறது. ஆசிரியர்கள் நியமனத்தில் நிலவும் அனைத்துக் குழப்பங்களுக்கும் தமிழக அரசு கடைபிடித்து வரும் ஒரே ஒரு தவறான கொள்கை தான் காரணம் ஆகும். அந்தத் தவறை சரி செய்து விட்டால், அடுத்த ஒரு வாரத்திற்குள் காலியாக உள்ள அனைத்து இடைநிலை &; பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களில் தகுதியான ஆசிரியர்களை எந்த சர்ச்சையுமின்றி நியமிக்க முடியும். அதற்கு அரசு மனம் வைக்க வேண்டும் என்பது தான் ஒரே தேவை.
போட்டித் தேர்வு
இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்க போட்டித் தேர்வுகளை நடத்த வேண்டும்; அதற்கு சில மாதங்கள் ஆகும் என்பதால் தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க வேண்டியுள்ளது என்பது தான் தமிழக அரசின் சார்பில் முன்வைக்கப்படும் வாதம் ஆகும். ஆனால், இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் ஏற்கனவே தகுதித் தேர்வில் வெற்றி பெற்று தங்களின் தகுதியையும், திறமையையும் நிரூபித்திருக்கின்றனர். அவர்களுக்கு மீண்டும் ஒரு போட்டித் தேர்வு நடத்தத் தேவையில்லை என்பது தான் பாட்டாளி மக்கள் கட்சியின் நிலைப்பாடு ஆகும். இந்தியாவின் பல மாநிலங்களில் தகுதித் தேர்வின் அடிப்படையில் மட்டுமே ஆசிரியர்கள் நியமிக்கப்படுகின்றனர்; போட்டித் தேர்வுகள் நடத்தப்படுவதில்லை.
போட்டித் தேர்வும் சமூக நீதியும்
அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் கீழ் தொடக்கத்தில் 8-ஆம் வகுப்பு வரையிலும், பின்னர் 10-ஆம் வகுப்பு வரையிலும் கல்வி வழங்க மத்திய அரசு நிதி வழங்குகிறது. அதற்காக மத்திய அரசு விதித்த நிபந்தனையின்படி 2012 முதல் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு தகுதித் தேர்வு கட்டாயமாக்கப்பட்டது. அதனால், தகுதித் தேர்வை நடத்துவதைத் தவிர வேறு வழியில்லை. ஆனால், அதற்குப் பிறகும் போட்டித் தேர்வுகளை நடத்த வேண்டிய தேவை தமிழக அரசுக்கு இல்லை. தமிழ்நாட்டில் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் நியமனங்களுக்கு போட்டித் தேர்வு அறிமுகம் செய்யப்பட்டதே பிழையான முடிவு. 2013-ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு ஆசிரியர் பணி வழங்க வெயிட்டேஜ் முறை கொண்டுவரப்பட்டது. அதற்கு பாமக. உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், வெயிட்டேஜ் முறையை ரத்து செய்த தமிழக அரசு, அதற்கு மாற்றாக 2018-ஆம் ஆண்டு ஜூலை 20-ஆம் நாள் பிறப்பிக்கப்பட்ட 149 என்ற எண் கொண்ட அரசாணை மூலம் போட்டித் தேர்வை திணித்தது. ஆனால், 2013-14 ஆம் ஆண்டுக்குப் பிறகு இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்படாத நிலையில், போட்டித் தேர்வுகள் ஒருமுறை கூட நடத்தப் படவில்லை. இதுவரை நடத்தப்படாத போட்டித் தேர்வுகளை இனியும் நடத்தாமல் இருப்பதே சமூகநீதி.ஆசிரியர் தேர்வு முறையில் மாற்றம்2018-ஆம் ஆண்டில் போட்டித் தேர்வுகள் அறிமுகம் செய்யப்பட்ட போது அதை இன்றைய முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களும் எதிர்த்தார்கள். திமுக ஆட்சிக்கு வந்தவுடன் போட்டித் தேர்வு முறை ரத்து செய்யப்படும் என்றும் அறிவித்தார். அதேபோல், தற்காலிக நியமனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்றும் அறிவித்தார். ஆனால், அந்த இரு வாக்குறுதிகளையும் மீறுவது நியாயமல்ல. எனவே, ஆசிரியர்கள் நியமனத்தில் சமூகநீதியை நிலைநிறுத்தும் வகையில் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு போட்டித் தேர்வை ரத்து செய்து விட்டு, தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களை நிரந்தர ஆசிரியர்களாக நியமிக்க வேண்டும்; பணியிடங்களின் எண்ணிக்கையையும் அதிகரிக்க வேண்டும். அதேபோல், ஆசிரியர்களை தற்காலிக அடிப்படையில் நியமிப்பதை தடை செய்ய வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் ஓய்வு பெறும் ஆசிரியர்களின் எண்ணிக்கை குறித்த விவரங்கள் அரசிடம் இருக்கும் நிலையில், அதற்கேற்ற எண்ணிக்கையிலான ஆசிரியர்களை முன்கூட்டியே தேர்வு செய்து கல்வியாண்டின் தொடக்கத்தில் நியமிப்பதை தமிழக அரசின் கொள்கையாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன். இவ்வாறு அன்புமணி ராமதாஸ் கூறினார்.
No comments:
Post a Comment