கள்ளக்குறிச்சி சம்பவத்தில், பள்ளி பாதுகாப்பு விதிகளில் ஏற்பட்டுள்ள குறைபாடுகள் கண்டறியப்பட்டுள்ளன. இதை தொடர்ந்து, மாநிலம் முழுதும், தனியார் பள்ளி கட்டடங்கள் மற்றும் விடுதிகளை ஆய்வு செய்ய, முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.கள்ளக்குறிச்சி மாவட்டம் கணியாமூரில் உள்ள சக்தி மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் படித்த, பிளஸ் 2 மாணவி ஸ்ரீமதி, பள்ளி வளாகத்தில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
மூன்றாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்ததாக, பள்ளி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதையடுத்து, பள்ளிக்கு எதிராக வெடித்த போராட்டத்தில் பள்ளி வளாகம் தீக்கிரையானது. பள்ளி கட்டடத்தை, கல்வி அதிகாரிகள் மற்றும் போலீசார் ஆய்வு செய்துஉள்ளனர்.
இதில், பள்ளியின் மொட்டை மாடிக்கு செல்லும் வழி, அடைக்கப்படாமல் திறந்து இருந்தது தெரிய வந்து உள்ளது.அதேபோல், பள்ளி வளாகத்தில் தேவையான இடங்களில், கண்காணிப்பு கேமரா இல்லாதது; உறைவிட பள்ளிகளுக்கான விதிகளை சரியாக பின்பற்றாதது என, பல குளறுபடிகள் கண்டறியப்பட்டுள்ளன. அதாவது, தனியார் பள்ளிக்கு வழங்கப்பட்ட அங்கீகாரத்தின்படி, பள்ளி வகுப்பறை கட்டடத்திலேயே, தங்கும் அறைகள் இருக்க கூடாது. ஆனால், கள்ளக்குறிச்சி பள்ளியில் வகுப்பறை கட்டடத்திலேயே, விடுதி இருந்ததும் தெரிய வந்தது. இதை அதிகாரிகள் முன்கூட்டியே ஆய்வு செய்ய தவறியது ஏன் என்ற கேள்வி எழுந்து உள்ளது.
மேலும், கண்காணிப்பு கேமராக்கள் குறித்து, உயர் நீதிமன்றம் உத்தரவுப்படி, பள்ளி வளாகத்தில் முக்கிய இடங்களில் கேமரா பொருத்தப்படாமல் இருந்தும், அதை பள்ளிக் கல்வி அதிகாரிகள் ஆய்வு செய்யாமல் விட்டு விட்டதாகவும், குற்றச்சாட்டு எழுந்து உள்ளது.வரும் காலங்களில் இதுபோன்ற பிரச்னைகள் ஏற்படாமல் தடுக்க, அனைத்து தனியார் பள்ளிகளிலும், மீண்டும் உள்கட்டமைப்பு வசதிகளை ஆய்வு செய்ய, முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சென்னை, திருச்சி, கோவை, நாமக்கல், கிருஷ்ணகிரி, நீலகிரி, மதுரை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில், அதிக அளவில் செயல்படும் 'ரெசிடென்ஷியல் ஸ்கூல்' எனப்படும் உறைவிட பள்ளிகளில், மாணவர்களுக்கான பாதுகாப்பு வசதிகளை ஆய்வு செய்து, அறிக்கை தரவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment