TNPSC group 4 VAO exam preparation strategies in Tamil: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு ஜூலை 24 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், எப்படி படிப்பது? என்ன படிப்பது? எதை முதலில் படிக்க வேண்டும் என்பதை இப்போது பார்ப்போம்.
தமிழக அரசுத்துறைகளில் உள்ள நான்காம் நிலை பணியிடங்களை நிரப்ப, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) குரூப் 4 தேர்வை நடத்தி வருகிறது. இந்த ஆண்டுக்கான அறிவிப்பில்,
7382 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. TNPSC குரூப் 4 தேர்வானது, தற்போது 7 விதமான பதவிகளுக்கு நடத்தப்படுகிறது. அவை, இளநிலை உதவியாளர் (Junior Assistant), தட்டச்சர் (Typist), சுருக்கெழுத்து தட்டச்சர் (Steno-Typist), கிராம நிர்வாக அலுவலர் (Village Administative Officer), வரித் தண்டலர் (Bill Collector), நில அளவர் (Field Surveyor), வரைவாளர் (Draftsman). இந்த பணியிடங்கள் எழுத்துத் தேர்வு மூலம் நேரடியாக நிரப்பப்படுகிறது. மேலும் பத்தாம் வகுப்பு தேர்ச்சி மட்டுமே தகுதி என்பதால் அதிகமானோர் விண்ணப்பித்துள்ளனர். இதனிடையே குரூப் 4 தேர்வுக்கு 21 லட்சத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பித்துள்ளதால், போட்டி கடுமையாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
குரூப் 4 தேர்வில் தமிழ் மொழி தகுதித் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளதால், தமிழை படிப்பது கட்டாயமாகும்.
முதலில் குரூப் சிலபஸை டவுன்லோடு செய்து, அதனை நன்றாக தெரிந்துக் கொள்ளுங்கள். குரூப் 4 தேர்வுக்கு புதிய பள்ளி பாடப் புத்தகங்களை மட்டும் படிக்காமல், சிலபஸூக்கு ஏற்றவாறு பழைய புத்தகங்களையும் படித்துக் கொள்ளுங்கள்.
குரூப் 4 தேர்வானது ஒரேயொரு எழுத்து தேர்வை அடிப்படையாகக் கொண்டது. எழுத்துத் தேர்வு இரு பகுதிகளாக நடைபெறும். முதல் பகுதி தமிழ் மொழித் தகுதி தேர்வு. இதில் 100 வினாக்கள் கேட்கப்படும். இதில் குறைந்தப்பட்சம் 40 சதவீத மதிப்பெண்கள் எடுத்தால் தான் விடைத்தாள் முழுமையாக மதிப்பீடு செய்யப்படும்.
அடுத்தப்பகுதியாக, பொது அறிவு பகுதியிலிருந்து 100 வினாக்கள் கேட்கப்படும். இதற்கான பாடத்திட்டம், பழைய பாடத்திட்டத்தை ஒத்துத்துள்ளது. இருப்பினும், புதிதாக யூனிட் 8 (தமிழ்நாடு மரபு, பண்பாடு, இலக்கியம்) மற்றும் யூனிட் 9 (தமிழ்நாடு வளர்ச்சி நிர்வாகம்) ஆகிய பாடங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. எனவே மொத்தம், இந்த எழுத்துத் தேர்வில் மொத்தம் 200 வினாக்கள் கேட்கப்படும். ஒவ்வொரு வினாவுக்கும் 1.5 மதிப்பெண்கள் என மொத்தம் 300 மதிப்பெண்களுக்கு தேர்வு நடைபெறும்.
மொழிப்பாடம்
தமிழ் மொழிப்பாடப்பிரிவில், தமிழ் இலக்கணம், இலக்கியம், தமிழ் அறிஞர்களும் தமிழ் தொண்டும் ஆகிய தலைப்புகளில் இருந்து வினாக்கள் கேட்கப்படும்.
பொது அறிவு
அடுத்தப்படியாக, 100 வினாக்கள் பொது அறிவு பகுதியிலிருந்து கேட்கப்படும். அவற்றில் 75-பொது அறிவு வினாக்களும், 25- திறனறி தேர்வு (Aptitude Test) வினாக்களும் இருக்கும். இந்த பொது அறிவு பகுதியில் அறிவியல், நடப்பு நிகழ்வுகள்,
புவியியல், வரலாறு, இந்திய அரசியல், பொருளாதாரம், இந்திய தேசிய இயக்கம், திறனறி வினாக்கள் போன்ற பகுதிகளிலிருந்து வினாக்கள் கேட்கப்படும். அனைத்து வினாக்களும் கொள்குறி வகையில் (Objective Type) கேட்கப்படும்.
தேர்வுக்கு தயாராவது எப்படி?
குரூப் 4 தேர்வுக்கு தயாராக நினைப்பவர்கள் முதலில், புத்தகங்களை சேகரியுங்கள். பாடத்திட்டத்திற்கு ஏற்றவாறு 6 முதல் 10 ஆம் வகுப்பு பாடப் புத்தகங்களை முதலில் வாங்கிக் கொள்ளுங்கள்.
பின்னர் நீங்கள் முதலில் படிக்க வேண்டியது தமிழ் பாடங்கள் தான். ஏனெனில் மற்ற பாடங்களில் இருந்து கேள்விகள் குறைவாக வரும் நிலையில், படிக்க வேண்டியது அதிகமாக இருக்கும். அதேநேரம் தமிழை முழுமையாக படித்தால் அதிக மதிப்பெண்களை எடுக்கலாம். இதுவரை நடந்த தேர்வுகளில் யாருக்கு வேலை கிடைத்துள்ளது என்றால் தமிழில் அதிக மதிப்பெண் எடுத்தவர்களுக்குத் தான். பொது அறிவில் எல்லாருமே கிட்டத்தட்ட ஓரே அளவான மதிப்பெண்கள் தான் எடுக்க முடியும். எனவே தமிழில் அதிக மதிப்பெண்கள் எடுத்தால் தான் வேலை கிடைக்கும்.
தமிழ் மொழிப்பாடத்தில் 6 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை படித்துக் கொள்ளுங்கள். முதலில் 9 மற்றும் 10 ஆம் வகுப்பு தமிழ் புத்தகங்களையும், தேவைப்பட்டால் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு புத்தகங்களையும் படித்து முடித்து விடுங்கள். பின்னர் 6,7,8 தமிழ் புத்தகங்களை படித்துக் கொள்ளுங்கள். இதில், செய்யுள், உரைநடை, இலக்கணம் என அனைத்து பிரிவுகளையும் தொடர்ச்சியாக படியுங்கள். முடிந்தவரை செய்யுள் தனியாக, உரைநடை தனியாக, இலக்கணம் தனியாக படிப்பதை தவிருங்கள். ஏனெனில் நீங்கள் பாடப்புத்தகங்களை திருப்பி படிக்கும்போது,
தனித்தனியாக படிக்க சிரமமாக இருக்கலாம். மேலும் அந்தந்த பாடங்களுக்கு உரிய இலக்கணப்பகுதிகளை அதோடு, சேர்த்து படித்தால் எளிதில் ஞாபகம் வைத்துக் கொள்ளலாம்.
செய்யுள் பகுதியை படிக்கும்போது, பாடல்களை ஒருமுறைக்கு இருமுறை படியுங்கள். பின்னர் பாடலின் அர்த்தத்தைப் படித்து தெளிவுபெறுங்கள். கூடவே அந்த பாடலுக்கான இலக்கணப் பகுதியையும் சேர்த்து படித்துக் கொள்ளுங்கள். செய்யுள் படிக்கும்போது, நூற்குறிப்பு, நூலாசிரியர் குறிப்பு, நூலாசிரியர் எழுதிய பிற நூல்கள், காலம் போன்ற அனைத்து தகவல்களையும் படித்துக் கொள்ளுங்கள்.
அடுத்ததாக கணித பாடங்களைப் பொறுத்தவரை, ஒவ்வொரு தலைப்பின் கீழ் வரும் வினாக்களை ஒவ்வொரு நாளாக பயிற்சி செய்து வாருங்கள். கணித பகுதிக்கு ஷார்ட் கட் வைத்து படிப்பது நல்லது. ஆனால், வினாக்களை படிக்காமல், பயிற்சி செய்து பார்ப்பது அவசியம். தமிழ் மற்றும் கணித பகுதிக்கு முக்கியமாக முந்தைய ஆண்டு வினாத்தாள்களை பார்த்துக் கொள்ளுங்கள்.
அடுத்ததாக பொது அறிவு பகுதியை பொறுத்தவரை, அறிவியல், வரலாறு, புவியியல், அரசியலமைப்பு உள்ளிட்ட பாடங்களுக்கு பாடப்புத்தகத்தை படிக்கும் போது, பெட்டிச் செய்தி,
அடைப்புகுறிக்குள் உள்ள தகவல்கள், ஹைலைட் செய்யப்பட்ட தகவல்களை முக்கியமாக படிக்க வேண்டும். மிக முக்கியமாக பாடங்கள் முடிவில் உள்ள (புக் பேக் கொஸ்டின்) வினாக்களை கண்டிப்பாக படிக்க வேண்டும்.
புவியியல் படிக்கும்போது இந்திய வரைபடத்துடன் இடங்களை பொருத்தி படித்துக் கொண்டால், உங்களுக்கு எப்போதும் மறக்காது. அரசியலமைப்பில், பகுதிகள், அட்டவணைகள், ஆர்டிக்கிள், சட்டத்திருத்தம் ஆகியவற்றில் முக்கியமானவற்றை வரிசையாக படித்து வைத்துக் கொள்ளுங்கள். முன்னதாக ஆங்கிலேயர் கால சட்டங்கள், அரசியலமைப்பு உருவானவிதம் ஆகியவற்றை படித்து தெளிவு பெற்றுங்கள்.
அடுத்தப்படியாக நடப்பு நிகழ்வுகளுக்கு செய்தித்தாள்களை படியுங்கள். செய்தித்தாள்களை படிக்கும்போது தேவையற்ற செய்திகளை படிக்காமல், சிலபஸூக்கு ஏற்றவாறு படியுங்கள்.
குரூப் 4 தேர்வுக்கான பாடத்திட்டம் பெரும்பாலும் பள்ளி பாடப் புத்தகங்களை ஒட்டியே உள்ளதால், பள்ளி புத்தகங்களை முழுமையாக படித்து பயிற்சி பெற்றாலே தேர்வில் எளிதாக வெற்றி பெறலாம்.
02/06/2022
New
TNPSC GROUP4 EXAM முதலில் படிக்க வேண்டிய பாடங்கள் எவை
About ASIRIYARMALAR
Templatesyard is a blogger resources site is a provider of high quality blogger template with premium looking layout and robust design. The main mission of templatesyard is to provide the best quality blogger templates.
TNPSC/UPSC
Labels:
TNPSC/UPSC
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment