RTE - தமிழ்நாட்டில் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் 31% கூடுதல் மாணவர் சேர்க்கை: கல்வித்துறை அதிகாரிகள் தகவல் - ஆசிரியர் மலர்

Latest

 




 


27/06/2022

RTE - தமிழ்நாட்டில் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் 31% கூடுதல் மாணவர் சேர்க்கை: கல்வித்துறை அதிகாரிகள் தகவல்

தமிழ்நாட்டில் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் இந்த ஆண்டு தனியார் பள்ளிகளில் சேர்ந்த மாணவர்களின் எண்ணிக்கை 31 சதவீதம் அதிகரித்திருக்கிறது. பொருளாதாரத்தில் நலிவுற்றவர்கள் மற்றும் சமூக ரீதியாக பின்தங்கிய குடும்பங்களை சேர்ந்த குழந்தைகள் எந்தவித கட்டணமுமின்றி தனியார் பள்ளிகளில் படிக்க கட்டாய கல்வி உரிமை சட்டம் வழிவகை செய்கிறது. ஒவ்வொரு தனியார் பள்ளியிலும் 25 சதவிகித இடங்கள், ஏழை குழந்தைகளுக்காக வழங்கப்பட்டு வருகின்றன.


அந்த வகையில் நடப்பாண்டில் தனியார் பள்ளிகளில் சேர்ந்தோரின் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட 31 விழுக்காடு அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு எல்.கே.ஜி. மற்றும் ஒன்றாம் வகுப்பில் 56,687 பேர் சேர்ந்தனர். இந்த ஆண்டு அந்த எண்ணிக்கை 74,383 ஆக உயர்ந்துள்ளது. இந்த ஆண்டு 8,234 தனியார் பள்ளிகளில் 94,000 இடங்கள் ஏழை குழந்தைகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளன. இதற்காக 1.42 லட்சம் பேரிடம் இருந்து 3 லட்சத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பங்களை கல்வித்துறை பெற்றிருக்கிறது.

அவற்றில் 2.60 லட்சம் விண்ணப்பங்கள் தகுதி உள்ளவை என்று பள்ளிக்கல்வித்துறை கூறியுள்ளது. அதிக விண்ணப்பங்கள் போடப்பட்டிருப்பதால் கடந்த மே மாதம் குலுக்கல் முறையில் மாணவர்களுக்கு இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. ஆர்.டி.இ. எனப்படும் கட்டாய கல்வி உரிமை சட்டம் தொடர்பான விழிப்புணர்வு அதிகரித்திருப்பதால் சேர்க்கையும் அதிகரித்திருப்பதாக கல்வித்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459