தமிழக பள்ளிக் கல்வி பாடத் திட்டம் புதுப்பிக்கப்பட்டு, 2018ல் நடைமுறைக்கு வந்தது. இதன்படி பாடப் புத்தகம் வெளியானதும், பல்வேறு எழுத்து பிழை மற்றும் கருத்து பிழைகள் கண்டறியப்பட்டன.இது குறித்து, கல்வியாளர்கள், ஆசிரியர்களின் கோரிக்கையை ஏற்று, பிழைகள் அனைத்தும், 2020 வரை திருத்தம் செய்யப்பட்டன.
தற்போது, தி.மு.க., அரசின் கொள்கைக்கு ஏற்ப, பாடப் புத்தகத்தில் சில அம்சங்களை திருத்த, பள்ளிக் கல்வி துறைக்கு உத்தரவிடப்பட்டது. அதன்படி, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் சார்பில், அரசு பள்ளி ஆசிரியர்கள் மற்றும் விரிவுரையாளர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டு, புத்தகங்களில் திருத்தப் பணிகள் நடந்தன. திருத்திய அம்சங்கள் அடங்கிய பாடப் புத்தகம், நடப்பு கல்வி ஆண்டில் அமலுக்கு வந்துள்ளது.
அரசு மற்றும் தனியார் பள்ளிகளின் மாணவர்களுக்கு, புதிய பாடப் புத்தகங்கள் வழங்கப் பட்டு, பாடங்கள் நடத்தப்படுகின்றன. அதேநேரம், ஒவ்வொரு வகுப்பிலும் எந்தெந்த பாடங்களில், எந்த பகுதிகள், எந்த பக்கங்களில் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன என்ற விபரங்களை, பள்ளிக் கல்வி துறை வெளியிடவில்லை.இதனால், முந்தைய புத்தகங்களுக்கும், தற்போதைய புத்தகங்களுக்கும் உள்ள வித்தியாசத்தை தெரிந்து பாடம் நடத்துவதில் சிக்கல் உள்ளதாக, ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.
பொதுவாக, எந்த ஒரு புத்தகம் மற்றும் கட்டுரையும் வெளியிடப்பட்டு, அதன் பதிப்புகள் திருத்தப்பட்டால், அந்த விபரம் மற்றும் அதற்கான குறிப்புகளை, புத்தகத்தின் கடைசி பகுதியில் குறிப்பிடுவது வழக்கம்.இந்த மரபை பின்பற்றி, பள்ளிக் கல்வி துறை அதிகாரிகள், பாடப் புத்தகத்தில் திருத்தப்பட்ட விபரங்களை, ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் தனி கையேடாக வழங்க வேண்டும் என, வலியுறுத்தப்பட்டு உள்ளது.
No comments:
Post a Comment