அரசுப்பள்ளிகளில், மாணவர்களின் திறனை வளர்க்கும் விதத்தில், கல்வி இணை செயல்பாடுகளில் கூடுதல் கவனம் செலுத்த பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. அதில், வெளிநாடு கல்வி சுற்றுலா, பள்ளிகளில் சிறார் திரைப்படம் திரையிடல் என பல்வேறு அறிவிப்புகள், மாணவர்களின் கவனத்தை ஈர்க்கச்செய்துள்ளது. அவ்வகையில், உடுமலை கல்வி மாவட்ட அரசுப்பள்ளிகளில், ஒவ்வொரு வாரமும் கலைச்செயல்பாடுகளுக்கு இரண்டு வகுப்புகள் ஒதுக்கி, மாணவர்களை தயார்படுத்துவதற்கான பணிகள் துவங்கியுள்ளன.
தற்போதைய நிலையில், தினமும் மதியம், உணவு இடைவேளைக்குப் பின், 1:00 முதல் 1:20 மணி வரை மாணவர்களுக்கு, பருவ இதழ்கள், செய்தித்தாள்களை வாசிக்க நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
பள்ளித் தலைமையாசிரியர்கள் கூறியதாவது: கல்வி இணைச்செயல்பாடுகளின் விபரம் குறித்து மாணவர்களிடம் தெரிவிக்கப்படுகிறது. அதில், பல்வேறு போட்டிகள், தனித்திறன்களில் சிறந்து விளங்கும் மாணவர்கள், வெளிநாடு அழைத்துச் செல்லப்படுவர் என்ற அறிவிப்பு கூடுதல் ஊக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதனால், இலக்கியம், வினாடி - வினா, திரைப்படம், அறிவியல் கண்டுபிடிப்புகளில் மாணவர்கள் தங்கள் தனித்திறன்களை வெளிக்காட்ட தயாராகி வருகின்றனர். சிலர், அதற்கான பயிற்சியில் ஈடுபடத்துவங்கியுள்ளனர். இதற்கு, பெற்றோர்களின் ஒத்துழைப்பு அதிகளவில் கிடைக்கப்பெற்றுள்ளது. இவ்வாறு, அவர்கள் கூறினர்.
No comments:
Post a Comment