திருப்பூர் மாவட்டம், அவிநாசியில் உள்ள மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதியாக பணிபுரிபவர் வடிவேல். இவரின் மனைவி புனிதா, மகள் ரீமா சக்தி, மகன் நிஷாந்த் சக்தி.
தன் மகள் மற்றும் மகனை, முதல் வகுப்பு முதல், அரசுப் பள்ளியில் சேர்த்து படிக்க வைத்து வருகிறார்.
ஈரோடு குமலன்குட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில், 10ம் வகுப்பு படித்த ரீமா சக்தி, பொதுத்தேர்வு எழுதி தேர்வு முடிவுக்காக காத்திருக்கிறார். இதே பள்ளியில் படித்த நிஷாந்த் சக்தி, எட்டாம் வகுப்பு முடித்துள்ளார்.
இந்நிலையில், சமீபத்தில், ஈரோட்டில் இருந்து அவிநாசிக்கு, நீதிபதி மாறுதலானார். இதையடுத்து, நிஷாந்த் சக்தியை அவிநாசி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஒன்பதாம் வகுப்பில் நேற்று சேர்த்தார்.நீதிபதி வடிவேல் கூறியதாவது:நான் அரசுப் பள்ளியில் படித்து, வழக்கறிஞர் பட்டம் பெற்று, அரசு உதவி வழக்கறிஞராக, 2014ம் ஆண்டு மாநிலத்திலேயே முதலாவதாக தேர்ச்சி பெற்றேன்.
தமிழ்நாடு அரசு தேர்வாணையம் வாயிலாக தேர்வு எழுதி நீதிபதியாக பணிபுரிகிறேன்.அரசு பள்ளிகளில் சிறு குறைகள் இருக்கத் தான் செய்யும். அப்படி இருக்கும்போது தான் மாணவர்களிடையே தேடலும், ஆர்வமும் அதிகரிக்கும்.
நாட்டில், அரசு துறைகளில் பணிபுரியும் 60 சதவீதத்தினர் அரசு பள்ளியில் படித்தவர்கள் தான். அரசு துறைகளில் பணிபுரிபவர்கள், அவர்கள் குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்க்க முன்வர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
நீதிபதி, தன் குழந்தைகளை அரசுப் பள்ளியில் படிக்க வைத்து, பிற அரசு ஊழியர்களுக்கு முன்னுதாரணமாக திகழ்வதை அறிந்து, பலரும் அவரை பாராட்டி வருகின்றனர்.
No comments:
Post a Comment