TNPSC GROUP4 EXAM : தமிழ் மொழிப்பாடப்பகுதியில் 95 மதிப்பெண்களுக்கு மேலே பெற என்ன செய்ய வேண்டும்? எப்படி படிக்க வேண்டும்? - ஆசிரியர் மலர்

Latest

 




29/05/2022

TNPSC GROUP4 EXAM : தமிழ் மொழிப்பாடப்பகுதியில் 95 மதிப்பெண்களுக்கு மேலே பெற என்ன செய்ய வேண்டும்? எப்படி படிக்க வேண்டும்?


TNPSC group 4 VAO exam How to score 95 above in Tamil: 
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு ஜூலை 24 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், தமிழ் மொழிப்பாடப்பகுதியில் 95 மதிப்பெண்களுக்கு மேலே பெற என்ன செய்ய வேண்டும்? எப்படி படிக்க வேண்டும்? என்பதை இப்போது பார்ப்போம். 
 தமிழக அரசுத்துறைகளில் உள்ள நான்காம் நிலை பணியிடங்களை நிரப்ப, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) குரூப் 4 தேர்வை நடத்தி வருகிறது. இந்த ஆண்டுக்கான அறிவிப்பில், 7382 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதனிடையே குரூப் 4 தேர்வுக்கு 21 லட்சத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பித்துள்ளதால், போட்டி கடுமையாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

 கடந்த குரூப் 4 தேர்வில் கட் ஆஃப் மதிப்பெண்கள் 160 க்கு மேல் இருந்த நிலையில், இந்த முறையும் கட் ஆஃப் மதிப்பெண்கள் அதிகமாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. மேலே கூறிய கட் ஆஃப் என்பது வினாக்களின் எண்ணிக்கை மற்றும் இது ஓவ்வொரு பிரிவு மற்றும் உட்பிரிவுக்கு ஏற்ப குறைவாகவும், அதிகமாகவும் இருந்தது என்பதை நினைவில் கொள்ளுங்கள். இந்த முறையும் கட் ஆஃப் மதிப்பெண்கள் அதிகமாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுவதால், தேர்வர்கள் கடினமாக பயிற்சி செய்ய வேண்டியுள்ளது. 

தேர்வர்கள் 160 வினாக்களுக்கு மேல் எடுக்க வேண்டும் என்றால், நிச்சயமாக தமிழ் மொழிப்பாடத்தில் 95 வினாக்களுக்கு மேல் கண்டிப்பாக விடையளிக்க வேண்டும். ஏனெனில் பொது அறிவு பகுதியில் மதிப்பெண்கள் எடுப்பது கடினம். தற்போதைய குரூப் 2 தேர்வில் பொது அறிவில் நிறைய பேர் 60 முதல் 70 மதிப்பெண்களே எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதே நிலையே குரூப் 4 தேர்வுக்கும் இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுவதால், தமிழ் மொழிப்பாடத்தில் அதிக மதிப்பெண் எடுத்தாக வேண்டும். எனவே தமிழில் 95 மதிப்பெண்களுக்கு மேல் எடுப்பது என்பது குறித்து இப்போது பார்ப்போம். முன்னதாக, குரூப் 4 தேர்வு குறித்த முக்கிய தகவல்களை தெரிந்துக் கொள்வோம். TNPSC குரூப் 4 தேர்வானது, தற்போது 7 விதமான பதவிகளுக்கு நடத்தப்படுகிறது. அவை, இளநிலை உதவியாளர் (Junior Assistant), தட்டச்சர் (Typist), சுருக்கெழுத்து தட்டச்சர் (Steno-Typist), கிராம நிர்வாக அலுவலர் (Village Administative Officer), வரித் தண்டலர் (Bill Collector), நில அளவர் (Field Surveyor), வரைவாளர் (Draftsman). இந்த பணியிடங்கள் எழுத்துத் தேர்வு மூலம் நேரடியாக நிரப்பப்படுகிறது.

 மேலும் பத்தாம் வகுப்பு தேர்ச்சி மட்டுமே தகுதி என்பதால் அதிகமானோர் விண்ணப்பித்துள்ளனர். குரூப் 4 தேர்வானது ஒரேயொரு எழுத்து தேர்வை அடிப்படையாகக் கொண்டது. எழுத்துத் தேர்வு இரு பகுதிகளாக நடைபெறும். முதல் பகுதி தமிழ் மொழித் தகுதி தேர்வு. இதில் 100 வினாக்கள் கேட்கப்படும். இதனை கட்டாயம் தேர்வர்கள் எழுத வேண்டும். இதில் குறைந்தப்பட்சம் 40 சதவீத மதிப்பெண்கள் எடுத்தால் தான் விடைத்தாள் முழுமையாக மதிப்பீடு செய்யப்படும். முன்னர் தமிழ் அல்லது ஆங்கில மொழிப்பாடத்தை தேர்தெடுத்துக் கொள்ளும் வாய்ப்பு இருந்தது. தற்போது தமிழ் மொழிப்பாடம் மட்டுமே உள்ளது. இதனை தேர்வர்கள் கண்டிப்பாக எழுதி குறைந்தப்பட்ச மதிப்பெண்ணை எடுக்க வேண்டும். அடுத்தப்பகுதியாக, பொது அறிவு பகுதியிலிருந்து 100 வினாக்கள் கேட்கப்படும். இதற்கான பாடத்திட்டம், பழைய பாடத்திட்டத்தை ஒத்துத்துள்ளது. இருப்பினும், புதிதாக யூனிட் 8 (தமிழ்நாடு மரபு, பண்பாடு, இலக்கியம்) மற்றும் யூனிட் 9 (தமிழ்நாடு வளர்ச்சி நிர்வாகம்) ஆகிய பாடங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. எனவே மொத்தம், இந்த எழுத்துத் தேர்வில் மொத்தம் 200 வினாக்கள் கேட்கப்படும். ஒவ்வொரு வினாவுக்கும் 1.5 மதிப்பெண்கள் என மொத்தம் 300 மதிப்பெண்களுக்கு தேர்வு நடைபெறும். முதல் 100 வினாக்கள் தமிழ் மொழி பாட பகுதியிலிருந்து கேட்கப்படும். இதற்கு முன்பு நடத்தப்பட்ட குரூப் 4 தேர்வுகளில், இந்த பகுதி விருப்ப மொழிப் பாட பகுதியாக இருந்தது. அதாவது தேர்வர்கள் தமிழ் அல்லது ஆங்கிலம் ஆகியவற்றில் ஏதேனும் ஒரு மொழிப்பிரிவை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். ஆனால் தற்போது தமிழ் மொழித் தேர்வை தகுதி தேர்வாக தமிழக அரசு நிர்ணயித்துள்ளது. எனவே தமிழ் மொழிப்பாட பகுதியில் இருந்து மட்டுமே கேள்விகள் இடம்பெறும். இந்த தமிழ் மொழித் தகுதித் தேர்வில் குறைந்தபட்சம் 40 சதவீத மதிப்பெண்கள் எடுக்க வேண்டும். இல்லையென்றால், அடுத்த பகுதி வினாக்கள் மதிப்பீட்டுக்கு எடுத்துக் கொள்ளப்படமாட்டாது. அதாவது உங்களுக்கு வேலை கிடைக்காது. இருப்பினும் தேர்வர்கள் கவனிக்க வேண்டிய மிக முக்கியமான விஷயம், இதனால், தமிழ் மொழிப் பாடப் பகுதியில் 40 சதவீத மதிப்பெண்கள் மட்டும் எடுத்தால் போதும் என்று நினைக்கக் கூடாது. ஏனெனில் தமிழ் மொழிப் பாடப் பகுதி தகுதி மற்றும் மதிப்பீட்டு தேர்வாக உள்ளது. 
எனவே தமிழ் மொழிப் பாட பகுதி மதிப்பெண்களும் இறுதி மதிப்பீட்டுக்கு எடுத்துக் கொள்ளப்படும். எனவே தமிழ் பாடப் பகுதியை எப்போதும் போல் நன்றாக படித்து அதிக மதிப்பெண்கள் எடுப்பது முக்கியம். 
 தமிழ் மொழிப்பாடத்தில் 95+ எடுப்பது எப்படி? தமிழ் மொழிப்பாடப்பிரிவில், தமிழ் இலக்கணம், இலக்கியம், தமிழ் அறிஞர்களும் தமிழ் தொண்டும் ஆகிய தலைப்புகளில் இருந்து வினாக்கள் கேட்கப்படும். இதற்கு 6 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரையிலான தமிழ் பாடத்தை படிக்க வேண்டும். பாடத்திட்டத்தை முழுமையாக கவனித்த பின் அதற்கு ஏற்றாற்போல் பாடங்களை படிக்க வேண்டும். குறிப்பாக பாடங்களின் முடிவில் உள்ள (புக் பேக் கொஸ்டின்) வினாக்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். பாடங்களின் உள்ளே செய்திகளை பொறுத்தவரை பெட்டிச் செய்திகள், அடைப்புக்குள் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுங்கள். நூல், நூலாசிரியர் தொடர்பாக அதிக வினாக்கள் இடம்பெறுவதால், அதனை நன்றாக படித்துக் கொள்ளுங்கள். செய்யுள் வரிகள் இடம் பெறும் வினாக்களைப் பொறுத்தவரை பெரும்பாலும் மனப்பாட செய்யுள் பகுதிகளிலிருந்து கேட்கப்படுவதால், முடிந்த வரை அந்த செய்யுள் பாடல்களை மட்டுமாவது மனப்பாடம் செய்து, அதற்குரிய நூல், நூலாசிரியர் விவரங்களை படித்துக் கொள்ளுங்கள். 
 உரைநடைப் பகுதியில், ஹைலைட் செய்யப்பட்ட தகவல்களை நன்றாக படித்துக் கொள்ளுங்கள். அறிவியல் சார்ந்த மற்றும் ஆண்டுகள் குறிப்பிடப்பட்ட வினாக்களுக்கு முக்கியத்துவம் கொடுங்கள். அடுத்ததாக இலக்கணம் பகுதியைப் பொறுத்தவரை, புரிந்து படித்துக் கொள்ளுங்கள். பாடப்பகுதியிலிருந்து தான் பெரும்பாலும் வினாக்கள் கேட்கப்படுகிறது என்பதால், இலக்கணப் பகுதியை மனப்பாடம் செய்யாமல், புரிந்து படித்துக் கொள்ளுங்கள். அப்போது தான், பாடப்புத்தகத்திலிருந்து வினாக்கள் கேட்கப்பட்ட நிலையிலும், உங்களுக்கு அதற்கான விடை மறந்திருந்தால், உங்களால் விடையளிக்க முடியும். இலக்கண பகுதியை, தனியாக படிப்பதோடு மட்டுமல்லாமல், ஓவ்வொரு செய்யுள் மற்றும் உரை நடைப் பகுதியை படித்து முடித்தவுடனே படித்துக் கொள்ளுங்கள். முடிந்தவரை குறிப்பு எடுத்து படிப்பதும் நல்லது. தற்போது நேரம் குறைவாக இருப்பதால், புத்தகத்தை முழுமையாக படியுங்கள். முடிந்தால் குறிப்பு எடுத்துக் கொள்ளுங்கள். முக்கியமாக, முந்தைய ஆண்டு வினாத்தாள்களை கண்டிப்பாக திருப்பி படியுங்கள். அப்போது உங்களுக்கு வினாக்கள் எப்படி கேட்கப்படுகின்றன என்ற ஐடியா கிடைக்கும். மேலும் அவற்றில் சில கேள்விகள் அல்லது அந்த பகுதி சார்ந்த வினாக்கள் மீண்டும் கேட்கப்படலாம். ஒருமுறை அனைத்து புத்தகங்களையும் படித்துவிட்டால், மீண்டும் அதனை திரும்ப படியுங்கள். பாடங்களை மீண்டும் மீண்டும் நினைவுப்படுத்திக் கொள்ளுங்கள். இவ்வாறு படித்தால் நிச்சயமாக 95 மதிப்பெண்களுக்கு மேல் எடுக்கலாம்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459