10,11,12th Public Exam Tips for Students And Parents! - ஆசிரியர் மலர்

Latest

 




04/05/2022

10,11,12th Public Exam Tips for Students And Parents!

படிக்கும் வழிமுறைகள் : 
1. படிக்கும் இடத்தையும் தேர்வு செய்து காலண்டர் பொதுத்தேர்வு அட்டவணை மற்றும் கடிகாரம் வைத்துக்கொள்ளுங்கள்.

2. ஒரு பாடத்தைப் படிக்கத்தொடங்கும் முன் எந்த முறையில் படிப்பது என்பது மிக அவசியம். புத்தகத்தை எடுத்தவுடன் மனப்பாடம் செய்யக்கூடாது. நான்குமுறை வாசித்து பிறகு இரண்டு முறை புரிந்துபடித்து பின்பு மனப்பாடம் செய்து எழுதிப்பாருங்கள் . பெற்றோர்கள் படி படி என்று சொல்லி தொந்தரவு செய்கிறார்களே என ஒரு போதும் எண்ணக்கூடாது. நீங்கள் படிப்பது பெற்றோர்களுக்காகவோ ஆசிரியர்களுக்காகவோ இல்லை. நமக்காகத்தான் என்பதை உணர்ந்து படியுங்கள்..

3. முதலில் 2,3,5 , மதிப்பெண் கேள்விகளுக்கு முக்கியத்துவம் கொடுங்கள். இரவு தூங்கச்செல்லும் முன் ஒரு மதிப்பெண் வினாவைப் பாருங்கள்.

4. கேள்விக்கான பதிலை நினைவில் வைத்துக்கொள்ள நினைவுக் குறிப்புகளை தயார் செய்து கொள்ளுங்கள்.

5. தொடர்ச்சியாக அமர்ந்து படிப்பதைவிட ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 10 நிமிடம் ஓய்வு எடுத்துக்கொள்ளுங்கள். ( ஓய்வு நேரத்தில் நடப்பது உடற்பயிற்சி , தியானம் செய்வது போன்றவைகளை செய்யுங்கள் )

6. படிக்கும் நேரத்தில் நண்பர்களுக்கு போன் செய்து எவ்வளவு படித்திருக்கிறாய் போன்ற கேள்விகளைத் தவிர்த்துவிடுங்கள் .

7. படித்து முடித்தவற்றையும் , படிக்கவேண்டியது பற்றியும் அவ்வப்போது சுயமதிப்பீடு செய்யவேண்டும்.



மாணவர்களுக்கு பெற்றோர்களின் பங்களிப்பு : 



1. வீட்டில் அமைதியான சூழ்நிலையை ஏற்படுத்தி தருவதில் பெற்றோரின் முழு ஒத்துழைப்பு இருக்கவேண்டும்.

2. படிப்புக்கேற்ற இடம் அமைத்துக்கொடுத்து தொந்தரவு கொடுக்காமல் நல்ல மனநிலையுடன் படிக்கச்செய்யவேண்டும்.

3. அட்டவணைப்படி படிப்பதைக் கண்காணித்தல் வேண்டும் 

4. படிக்க உற்சாகப்படுத்துதல் சலிப்புதோன்றாத வகையில் பாராட்டுதல் , உணவு , உடை ஆகியவற்றைத் தக்க முறையில் கொடுத்தல் ஆகியவற்றில் பெற்றோர் பங்கு முக்கியமாக இருக்கவேண்டும்.

5. குழந்தைகள் படித்துக்கொண்டிருக்கும்போது பெற்றோரும் மற்றோரும் தொலைக்காட்சியை பார்த்துக்கொண்டும் , சத்தமாகப் பேசிக் கொண்டும் இருந்தால் படிக்கின்ற கவனம் சிதறும் என்பதை உணர வேண்டும். குழந்தைகளின் படிப்பில் பெற்றோரின் பங்கு எந்தவிதத்திலும் குறைந்ததல்ல. அவ்வப்போது தட்டிக்கொடுத்து உற்சாகப்படுத்தி சோர்ந்து விடாமல் ஆறுதல் வார்த்தைகள் கூறி முக்கிய துணையாக இருக்கவேண்டும். உங்கள் குழந்தைகள் நடுநிசிவரை படிக்கிறார்கள் என்று பெருமிதம் கொள்ளவேண்டாம். அது அவர்களுக்கு மனச் சோர்வையும் , உடல்சோர்வையும் கொடுக்கும். எனவே தேர்வு சமயங்களில் உங்கள் குழந்தைகள் குறைந்தது 5 மணிநேரம் முதல் 7 மணிநேரம் வரை உறங்கவேண்டும்.



  தேர்வுக்கு முந்தின நாளில் அறிந்துகொள்ள வேண்டியவை:



1. தேர்வு நாள் காலம் நடைபெறும் இடம் ஆகியவை பற்றித் தெளிவாகத் தெரிந்திருக்கவேண்டும்.

2. பாடத்திட்டத்துக்குத் தகுந்தபடி படிக்க வேண்டிய பகுதிகள் அனைத்தும் படிக்கப்பட்டுள்ளதா என உறுதிசெய்யவேண்டும் 

3.எழுதி வைத்துள்ள முக்கிய குறிப்புகளை ஒருமுறை பார்த்து அவை அனைத்தும் நமது நினைவுக்கு வருவதை உறுதிப்படுத்திக் கொள்ளவேண்டும்.

4. ஏதாவது ஒருபகுதியை படிக்காமல் விட்டிருந்தாலும் வேகமாக அதைப்படித்து அதன் முக்கியக்குறிப்புகளையாவது நினைவில் வைத்துக்கொள்ளவேண்டும். 

5.பேனா , பென்சில் , அழிப்பான் , ஜியாமென்ட்ரி பாக்ஸ் முக்கியமாக ஹால்டிக்கெட் போன்றவற்றைத் குறிப்பிட்ட இடத்தில் வைத்திருக்க வேண்டும்.

6. ஏற்கனவே எழுதிய தேர்வுகளில் பெற்ற அனுபவத்தை வைத்து பொதுத்தேர்வை சந்திக்கவேண்டும் . பொதுத்தேர்வை கண்டு பயப்படாமல் முழு ஈடுபாடு ஆர்வம் ஆகியவற்றுடன் சந்திக்க தயார்நிலையில் இருக்கவேண்டும்.

7. தேர்வு குறித்தோ வினாக்கள் குறித்தோ வீண் விவாதம் செய்வது வீணான மனக்குழப்பத்துக்கு வழிவகுக்கும்.



  தேர்வுநாளில் மற்றும் தேர்வு அறையில் என்ன செய்யவேண்டும் : 



1.தேர்விற்கு கிளம்பும்போது வீட்டிலேயே அனைத்து பொருட்களும் இருக்கிறதா என்பதை சரிபார்த்துக்கொண்ட பின் கிளம்புங்கள்.

2.தேர்வு சமயங்களில் காலை உணவை கட்டாயம் சாப்பிடுங்கள் இல்லையெனில் சோர்வு உங்களை தேர்வில் கவனம் செலுத்த முடியாமல் செய்துவிடும்.

3.தேர்வு மையத்திற்கு அரைமணி நேரத்திற்கு முன்னரே சென்று விடுங்கள் . 10 நிமிடம் இருக்கும்பொழுது உங்கள் தேர்வறைக்கு சென்று உங்கள் இருக்கையில் அமர்ந்துகொள்ளுங்கள்.

 4. உங்கள் இருக்கையின் அருகில் காகிதங்கள் , துண்டுச்சீட்டுகள் , புத்தகங்கள் ஏதேனும் காணப்பட்டால் வெளியில் வைத்துவிடுங்கள் . நாம் படித்த பாடங்களில்தான் கேள்விகள் வரும் என்ற நம்பிக்கையோடு அமர்ந்திருங்கள்.

5. வினாத்தாளை வாங்கியவுடன் அரக்கபரக்க வாசிக்காமல் நிதானமாக வாசித்து நன்கு தெரிந்த கேள்விகளை மனதில் தேர்ந்தெடுங்கள். ( இதற்கு 15 நிமிடம் தேர்வுதுறை ஒதுக்கியுள்ளது ) 6.வினாத்தாளில் எவ்வித குறிப்பையும் எழுதவேண்டாம்.

7. உங்களுக்கு நன்றாகத்தெரிந்த கேள்வியை முதலில் எழுதுங்கள் , யோசித்து எழுதுவதை கடைசியாக எழுதுங்கள்.

8. விடைத்தாளில் வினா எண்களை கோட்டுக்கு வெளியேயும் , விடையின் எண்களை உள்ளேயும் எழுதுங்கள்.

9. விடைத்தாளில் விடை எழுதும்பொழுது முகப்புச்சீட்டில உரிய இடத்தில் கையொப்பமிட்டு இரண்டாவது பக்கத்தில் தேர்வு எழுதுபவர் செய்யக்கூடியவை மற்றும் செய்யக்கூடாதவை என்ன என்ற விதிமுறைகளை படித்துப்பாருங்கள். 

10.உங்களுக்கு என்ன தெரியும் என்பதை விட தேர்வில் கேட்கப்படும் கேள்விக்கு என்ன பதில் எழுதவேண்டும் என்பதே முக்கியம் என அறிந்து கொள்ளுங்கள்.

11.மதிப்பெண்களுக்கேற்ப விடையை சுருக்கமாகவோ , விரிவாகவோ எழுதி நேரத்தை சரியாகக் கணக்கிட்டு எழுதுங்கள்.

12. சீக்கிரம் முடிக்கவேண்டும் என்ற காரணத்திற்காக கையெழுத்தை ஒழுங்கீனமாக எழுதவேண்டாம் . விடைத்தாளில் உங்களது கையெழுத்து ஆரம்பம் முதல் இறுதிவரை தெளிவாக இருப்பது அதிக மதிப்பெண்கள் கிடைக்க வழிவகுக்கும்.

13. பக்கவரிசைப்படி எழுதுகின்றோமா என விடைத்தாளின் பக்க எண்களை பார்த்து விடையளிக்கவேண்டும் . அடுத்தபக்கத்தை புரட்டும்பொழுது இரண்டு மூன்று தாள்கள் சேர்ந்துவிடும் விடை எழுதும் அவசரத்தில் அவற்றைச் சரியாக கவனித்து எழுதவும்.

14.நீங்கள் எந்தப் பேனாவை தேர்விற்கு பயன்படுத்தப் போகிறீர்களோ அந்தப்பேனாவை தினமும் பயன்படுத்துங்கள் . அந்த பேனாவை தேர்வு முடியும்வரை பாதுகாத்துக்கொள்ளுங்கள்.

15. படம் வரையும்போது , ஸ்கேல் , பென்சில் துணைகொண்டு வரையுங்கள் . முக்கியமாக ஜியாமென்ட்ரி பாக்ஸ் எடுத்துச்செல்வது நல்லது.

16. கடைசி 15 நிமிடங்களுக்குள் எல்லா வினாக்களுக்கும் விடையளித்து மீண்டும் ஒருமுறை விடைத்தாளை சரிபார்த்து விட்டுப்போனதை சரியான வினா எண் குறித்து எழுதி நிறைவு செய்யவேண்டும். 

17.தேர்வு நேரம் முடிந்து மணியடிக்கும்வரை தேர்வு கூடத்தில் இருந்து பயனுள்ள வகையில் திருப்புதலைச் செய்யவேண்டும் . ஒருமுறை எல்லா பதில்களையும் சரிபார்த்துவிடுங்கள்.

18.மணி அடித்தபிறகு எழுதியதில் ஏதேனும் தவறோ குறைகளோ ஏற்பட்டிருப்பின் அதற்காக மனதை வருத்திக்கொள்ளாது அடுத்தத்தேர்வுக்கான ஆயத்தப்பணிகளைத் தொடருங்கள் .

19. தேர்வுகளுக்கு நடுவே விடுமுறை வந்தால் கட்டாயம் அலட்சியப்போக்கு ஏற்பட வாய்ப்புள்ளது . ஆகவே அதற்கு வாய்ப்பளிக்காமல் தேர்வு இருந்தால் எப்படிப் படிப்போமோ அதே உத்வேகத்துடன் படியுங்கள்.



 விடைத்தாளில் தேர்வு எழுதுபவர் செய்யக்கூடியவை மற்றும் செய்யக்கூடாதவை என்ன ?

 செய்யக்கூடியவை 



1. முகப்புச்சீட்டில் உரிய இடத்தில் கையொப்பமிடவேண்டும்.

2.விடைத்தாளில் ஒரு பக்கத்திற்கு 20 முதல் 25 வரிகள்வரை எழுதவேண்டும்.

3. விடைத்தாளின் இருபுறத்திலும் எழுதவேண்டும்.

4. செய்முறைகள் யாவும் விடைத்தாளின் கீழ் பகுதியில் இடம்பெற வேண்டும்.

5. வினா எண் தவறாமல் எழுதவேண்டும் . 

6. இருவிடைகளுக்கிடையே இடைவெளி விட்டு எழுதவேண்டும்.

 7. வினாத்தாளின் வரிசை ( A , & B ) மதிப்பெண்கள் பக்கத்தில் குறிக்கப்பட வேண்டும்.

8.விடைத்தாளில் நீலம் , கருப்புமை கொண்ட பேனாவால் விடைகளை தெளிவாக எழுதவேண்டும்.

9. விடைத்தாளில் எழுதாத பக்கங்களில் குறுக்குக்கோடு இடவேண்டும்.

  செய்யக்கூடாதவை 

1.வினாத்தாளில் எந்தவித குறியீடும் இடக்கூடாது.

2.விடைத்தாளை சேதப்படுத்தக்கூடாது. 

3.விடைத்தாளில் எந்தஒரு பக்கத்திலும் தேர்வு எண் / பெயர் எழுதக் கூடாது.

4. வண்ணக்கலர் கொண்ட பேனா / பென்சில் எதையும் பயன்படுத்தக் கூடாது. ( ஆங்கிலம் இரண்டாம் தாள் தேர்வு நீங்கலாக ) 

5. விடைத்தாள் கோட்டின் இடது மற்றும் வலது ஓரத்தில் எழுதக்கூடாது 

6.விடைத்தாள் புத்தகத்தின் எந்த தாளையும் கிழிக்கவோ நீக்கவோ கூடாது . மாணவர்களே விடைத்தாளில் பதில் எழுதும்போது நிதானம் மிகவும் அவசியம். எல்லாம் படித்திருப்பீர்கள் , எல்லாமே தெரிந்திருக்கும் . ஆனால் நிதானம் தவறிவிடுவீர்கள் . சின்ன தவறாக இருக்கும் அதை அதுவரை செய்திருக்கவே மாட்டீர்கள். கடைசியில் பார்த்தால் அது தான் கிடைக்கவேண்டிய மதிப்பெண்ணை இழக்க காரணமாகி இருக்கும் . அதனால் நிதானம் தேவை அது சின்னதவறுகளை நிகழா வண்ணம் உங்களுக்கு நல்ல மதிப்பெண்களை பெற்றுத்தருவதோடு நீங்கள் நன்மதிப்பையும் பெறுவீர்கள்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459