தனியார் பள்ளிகளில், ஆசிரியர்கள் நியமனங்களுக்கு ஒப்புதல் வழங்க மறுத்த, கல்வித் துறை அதிகாரிகளின் உத்தரவை, சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.
கடலுார், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில், தனியார் பள்ளிகளில் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள், 2019 செப்டம்பருக்கு முன் நியமிக்கப்பட்டனர். இந்த நியமனங்களுக்கு ஒப்புதல் வழங்க, மாவட்ட கல்வி அதிகாரிகள் மறுத்தனர்.இதையடுத்து, அந்த உத்தரவை ரத்து செய்து, பணி நியமனங்களுக்கு ஒப்புதல் வழங்கக் கோரி, உயர் நீதிமன்றத்தில் ஆசிரியர்கள் வழக்கு தொடர்ந்தனர்.
கல்வி அதிகாரிகளின் உத்தரவை எதிர்த்து, பள்ளி நிர்வாகங்களும் வழக்கு தொடர்ந்தன. மனுக்களில், '2019 செப்டம்பரில் பிறப்பிக்கப்பட்ட பள்ளி கல்வித்துறை உத்தரவில், புதிய நியமனங்களுக்கு தடை விதிக்கப்பட்டது. ஆனால், நாங்கள் 2019 செப்டம்பருக்கு முன் நியமிக்கப்பட்டு விட்டோம். அதனால், நியமனங்களுக்கு ஒப்புதல் வழங்குவதில் சட்டப்பூர்வ தடை இல்லை' என, கூறப்பட்டது.
மனுக்களை, நீதிபதி டி.கிருஷ்ணகுமார் விசாரித்தார். மனுதாரர்கள் சார்பில், மூத்த வழக்கறிஞர் சேவியர் அருள்ராஜ்; வழக்கறிஞர்கள் ஜி.சங்கரன், எஸ்.என்.ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் ஆஜராகினர். நீதிபதி பிறப்பித்தஉத்தரவு: நீதிமன்ற உத்தரவு மற்றும் பள்ளி கல்வித்துறை பிறப்பித்த அரசாணையை பரிசீலித்ததில், பள்ளி நிர்வாகங்கள் மேற்கொண்ட நியமனங்களுக்கு, 2019 செப்., 17ல் பிறப்பிக்கப்பட்ட அரசாணைக்கு முன்பே ஒப்புதல் கோரப்பட்டுள்ளது.
அரசாணையை முறையாக பரிசீலிக்காமல், பள்ளி நிர்வாகம் சமர்ப்பித்த கோரிக்கைகளை, கல்வித்துறை நிராகரித்துள்ளது. எனவே, கல்வித்துறை பிறப்பித்த உத்தரவுகள் ரத்து செய்யப்படுகின்றன. விதிமுறைகளை பூர்த்தி செய்யும் விதத்தில் நியமனங்கள் இருந்தால், அவற்றுக்கு ஒப்புதல் உத்தரவு வழங்குவதை, சம்பந்தப்பட்ட மாவட்ட அல்லது முதன்மை கல்வி அதிகாரிகள் பரிசீலிக்க வேண்டும்; 12 வாரங்களுக்குள் இந்த நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.
எனவே, 2019 செப்., 17க்கு முன், பட்டதாரி ஆசிரியர், இடைநிலை ஆசிரியராக நியமிக்கப்பட்டு, அதற்கான ஒப்புதலை கோரியிருந்தவர்களுக்கு, நிவாரணம் பெற உரிமை உள்ளது.இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
No comments:
Post a Comment