‘Life behind the screens of parents, tweens, and teens’ என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள அந்த ஆய்வில், குழந்தைகளுக்கு இருக்கும் ஆன்லைன் பாதுகாப்பின்மை தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில், 10 முதல் 14 வயதில் ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் குழந்தைகளின் எண்ணிக்கை 83 சதவீதமாக உள்ளது.
இது சர்வதேச சராசரியான 76 சதவீதத்தை விட 7 சதவீதம் அதிகமாகும். இது பெற்றோர்களுக்கும் குழந்தைகளுக்கும் இடையே இடைவெளியை ஏற்படுத்துவதால், அவர்கள் ஆன்லைன் அபாயங்களுக்கு சிக்குவதற்கு வழிவகுப்பதாக அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெற்றோர்களும், குழந்தைகளுக்கு இருக்கும் ஆன்லைன் அச்சுறுத்தல் குறித்து அதிகம் கவலை கொள்வதில்லை என தெரிவித்துள்ள அந்த ஆய்வு, 22 விழுக்காடு இந்தியக் குழந்தைகள் இணைய அச்சுறுத்தலை எதிர்கொள்வதாக குறிப்பிட்டுள்ளது. ஒப்பீட்டளவில் சர்வதேச சராசரியைவிட இந்த அளவு 5 சதவீதம் அதிகமாகும்.
பொதுவெளியில் குழந்தைகளுக்கு இருக்கும் ஆபத்தில் அக்கறை கொள்ளும் பெற்றோர், ஆன்லைன் ஆபத்து குறித்து பொதுவாக கவலைப்படுவதில்லை அல்லது கவனம் செலுத்துவதில்லை.
பெற்றோர்கள் குழந்தைகளுக்கு இருக்கும் ஆன்லைன் ஆபத்து குறித்து கட்டாயம் கவனம் செலுத்த வேண்டும் என இந்த ஆய்வு முடிவுகள் அறிவுறுத்துகின்றன. தனிநபர் தகவல் மற்றும் நிதிசார்ந்த தகவல் திருட்டு இதில் முக்கிய பங்காற்றுவதாக ஆய்வு முடிவு கூறுகிறது. பதின்பருவத்தினரின் தனிநபர் தகவல் திருட்டு என்பது அவர்களின் எதிர்கால வாழ்க்கைக்கு மிகப்பெரிய பாதிப்பைக் கூட ஏற்படுத்தலாம் என்பதை பெற்றோர் கவனத்தில் கொள்ள வேண்டும்.
ஆன்லைன் மூலம் ஏற்படும் பாதிப்புகளுக்கு தீர்வு காண்பதற்கு குழந்தைகள் வெளியில் இருப்பவர்களை அதிகம் நம்புவதில்லை. பெற்றோரை மட்டும் உதவிக்காக அவர்கள் அழைப்பதாக ஆய்வு கூறுகிறது. பிரச்சனை ஏற்பட்ட பிறகு அதற்கான தீர்வுகளை வழங்குவதில் பெற்றோர்களும் மிகுந்த சிரமத்தை எதிர்கொள்கின்றனர்.
பின்விளைவுகள் மோசமாக இருக்கும்போது குடும்பச் சூழலில் அந்த பிரச்சனை அமைதியின்மையையும் ஏற்படுத்திவிடுகிறது.
மேலும், ஆண்கள் மற்றும் பெண்கள் பாலின அடிப்படையிலும் பெற்றோர்கள் ஆன்லைன் பாதுகாப்பு விஷயத்தில்
வித்தியாசமான அணுகு முறையை கடைபிடிப்பதாக தெரிவிக்கும் ஆய்வு, டெக்னாலஜி ஆபத்தில் இனி வரும் காலங்களில் கடவுச் சொல், புகைப்படங்கள், தகவல் பரிமாற்றம் குறித்து குழந்தைகளுக்கு அறிவுறுத்த வேண்டும் என கூறியுள்ளது.
தவறான தளங்களுக்கு செல்லக்கூடாது என்பதையும் சொல்லிக் கொடுக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. உலகிலேயே ஆன்லைன் ஆபத்துகளில் அதிகம் சிக்கும் குழந்தைகளாக இந்திய குழந்தைகள் இருப்பது அதிர்ச்சியாகவும் இருக்கிறது.
No comments:
Post a Comment