பழைய ஓய்வூதிய திட்டம் சாத்தியமற்றது - நிதி அமைச்சருக்கு வலுக்கும் கண்டனங்கள் - ஆசிரியர் மலர்

Latest

 




08/05/2022

பழைய ஓய்வூதிய திட்டம் சாத்தியமற்றது - நிதி அமைச்சருக்கு வலுக்கும் கண்டனங்கள்

 மாண்புமிகு தமிழ்நாடு நிதி அமைச்சருக்கு TNPGTA மாநில அமைப்பின் வன்மையான கண்டனங்கள்....


இன்று சட்டப்பேரவையில் மானிய கோரிக்கையின் மீதான விவாதத்தின்போது பேசிய மாண்புமிகு தமிழ்நாடு நிதியமைச்சர் அவர்கள் பழைய ஓய்வூதியம் சாத்தியமே இல்லை என்று சொல்லி அதற்கு காரணமாக அரசுக்கு ஆகும் செலவு கணக்குகளை சுட்டிக்காட்டி பேசியிருக்கிறார்.


நிதி அமைச்சர் அவர்களே,  கணக்குகளை எல்லாம் சரியாகத்தான் சொல்கிறீர்.  ஆனால் அரசாங்கம் என்பது லாபத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்டிருக்கும் தனியார் நிறுவனம் அன்று. உற்பத்தி துறைகள் மூலம் வருவாயைப் பெருக்கி மக்களுக்கு முறையான சேவைகளை வழங்குவது அரசின் கடமையாக இருக்கிறது. *"குடிதழீஇக் கோலோச்சும் மன்னவன் மக்கட்கு இறையென்று வைக்கப் படும்"* என்பதை நீங்கள் அறியாதிருப்பது எங்களுக்கு ஆச்சரியமல்ல. 


பன்னாட்டு நிறுவனங்களில் பணியாற்றி ஊழியர்களின் உழைப்பை உறிஞ்சி லாப நோக்கத்தை நிறைவேற்றி பெருமுதலாளிகளின் சொத்துக்களை மேலும் பெருக்கி அதை பாதுகாக்கும் உங்களால் அரசு ஊழியர்களுக்கு நியாயம் வழங்க முடியாது என்பதை நாங்கள் உணர்ந்து இருக்கிறோம்.


அது என்ன கணக்கு? உயர் நீதிமன்ற நீதிபதிகளுக்கு ஓய்வூதியம் இந்த ஆண்டு 7 கோடி ரூபாய் என்றால் எத்தனை நீதிபதிகளுக்கு இந்த ஏழு கோடி?  எத்தனை சட்டமன்ற உறுப்பினர்களுக்கு 40 கோடி ஓய்வூதியம் என்ற கணக்கை பொதுவெளியில் சொல்லுங்கள் பார்க்கலாம். நீங்கள் இப்படிச் செய்தால் என்ன? நீங்கள் சொன்ன அந்த நீதிபதிகளையும் சட்டமன்ற உறுப்பினர்களையும் மட்டுமே வைத்துக் கொண்டு அரசாங்கத்தை நடத்தினால் என்ன? செலவு குறையுமே....


அரசாங்கம் என்பது நீதிபதிகளும் சட்டமன்ற உறுப்பினர்களும் மட்டுமே அல்ல லட்சக்கணக்கான அரசு ஊழியரும் ஆசிரியர்களும் தான் இந்த அரசாங்கம் இயங்குவதற்கான அச்சாணி என்பதை மறந்து ஆணவத்தோடு பேச வேண்டாம்.


இந்த ஆண்டு ஓய்வு பெறுபவர்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டிய நிலை பற்றிப் பேசும்போது அது என்னங்க சிரிப்பு? அந்தச் சிரிப்பின் அர்த்தம் என்ன ? காற்று எப்போதும் ஒரே திசையில் வீசாது அமைச்சரே...


2011, 2016, 2021 ஆகிய மூன்று சட்டமன்றத் தேர்தல் வாக்குறுதிகளில் நீங்கள் (தி.மு.க) சொன்னதுதான்.  பழைய ஓய்வூதிய திட்டத்தை நாங்கள் அமல்படுத்துவோம் என்பது.


இப்போது சாத்தியமில்லை என்று சொல்வதைப் பார்த்தால் "15 லட்சம் ரூபாய் விவகாரத்தில் பிஜேபி தலைவர் நிதின் கட்கரி அவர்கள், ஓட்டுக்காக நாங்கள் பொய் சொன்னோம்" என்று சொல்லியது தான் நினைவுக்கு வருகிறது. அவர்களோடு நீங்களும் கூட்டணி வைத்து விட்டீர்களா என்ன?


உங்கள் கட்சியின் பொதுச் செயலாளரின் வெற்றி யாரால் வந்தது என்பதைத் தெரிந்து வைத்துள்ளீரா?  இல்லையெனில் அவரிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளும் உங்கள் கட்சி சட்டமன்ற  உறுப்பினர்கள் பலரின் ஓட்டு வித்தியாசம் என்ன? என்பதை மீண்டும் மீண்டும் எண்ணிப் பார்த்துக் கொள்ளும்.


ராஜஸ்தான் அரசுக்கு PFRDA பணத்தை தர முடியாது என்று சொன்னால் அவர்கள் பணத்தை அங்கே கொடுத்துவிட்டு கேட்கிறார்கள் உங்களுக்கு என்ன?


PFRDA வில் தமிழ்நாடு இன்னும் சேராமல் தானே இருக்கிறது. எங்கள் பணம் எங்கே எனும் கேள்விக்கு பதில் உண்டா உங்களிடம்?


எனவே மாண்புமிகு நிதியமைச்சர் அவர்கள் பெருமுதலாளிகளின் எண்ண ஓட்டத்தில் இல்லாமல் நீங்களும் ஒரு அரசு ஊழியர் என்பதை மனதில் வைத்து பேசும்படி கேட்டுக் கொள்கிறோம். மேலும் பழைய ஓய்வூதியம் சாத்தியமற்றது என்னும் பேச்சுக்கு TNPGTA மாநிலக் கழகத்தின் சார்பில் வன்மையான கண்டனங்களைத் தெரிவிப்பதோடு அரசின் நிலைப்பாடு இதுவாக இருக்குமானால் ஒட்டுமொத்த ஆசிரியர்களையும் அரசு ஊழியர்களையும் ஒன்றுதிரட்டி போராட்டங்களை முன்னெடுக்க வேண்டி இருக்கும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்.


சே.பிரபாகரன்

மாநிலப் பொதுச் செயலாளர்

TNPGTA

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459