NEET தேர்விற்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்: தேசிய தேர்வு முகமை அறிவிப்பு. - ஆசிரியர் மலர்

Latest

 




 


01/04/2022

NEET தேர்விற்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்: தேசிய தேர்வு முகமை அறிவிப்பு.

இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்விற்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. பொது மருத்துவம் மற்றும் பல் மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கு, தேசிய தேர்வு முகமையால் இந்திய அளவில் நீட் நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது. நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற தமிழக அரசு தீவிர முயற்சிகளில் ஈடுபட்டுவருகிறது. அதே சமயம் மாணவர்களை நீட் தேர்வுக்கு தயார் செய்யும் பொருட்டு பயிற்சி வகுப்புகளும் நடத்தப்பட்டு வருகின்றன.


இந்நிலையில் 2022-23 கல்வி ஆண்டுக்கான எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு ஜூலை 17ம் தேதி நடைபெறும் என்று தேசிய தேர்வு முகமை நேற்று அறிவித்துள்ளது. அதன்படி ஏப். 2ம் தேதி (நாளை) முதல் நீட் தேர்வுகளுக்கான ஆன்லைன் முன்பதிவு தொடங்கும் என்றும் மே 7ம் தேதியுடன் முன்பதிவு காலம் முடிவடையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஆன்லைன் விண்ணப்பங்களில் மாணவர்கள் திருத்தம் மேற்கொள்ள 5 நாட்கள் அவகாசம் வழங்கப்படும்.

மேலும் நடப்பு கல்வி ஆண்டுக்கான நீட் தேர்வானது தமிழ், இந்தி உள்ளிட்ட 13 மொழிகளில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு அட்டவணையை தேசிய தேர்வாணையம் வெளியிடும். ஒன்றிய சுகாதார அமைச்சகம், மத்திய கல்வித்துறை, தேசிய மருத்துவக் கழகம் ஆகியவற்றுடன் தேசிய தேர்வு முகமை அதிகாரிகள் ஆலோசனை நடத்தி நீட் தேர்வுக்கான அட்டவணையை இறுதி செய்ய உள்ளனர். கடந்த 2016ம் ஆண்டு 8 லட்சம் மாணவர்கள் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்து இருந்தனர்.

2017ல் சுமார் 11 லட்சம், 2018ம் ஆண்டு சுமார் 13 லட்சம், 2019ம் ஆண்டு சுமார் 15 லட்சத்து 19 ஆயிரம் மாணவர்கள் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்து இருந்தனர். 2020ம் ஆண்டு 15 லட்சத்து 97 ஆயிரம் மாணவர்கள் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்து இருந்தனர். கடந்த ஆண்டு நாடு முழுவதும் 16 லட்சத்து 14 ஆயிரத்து 777 மாணவர்கள் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்து, அவர்களில் 8 லட்சத்து 70 ஆயிரம் பேர் நீட் தேர்வை எழுதினர். இந்தநிலையில் நடப்பு ஆண்டில் சுமார் 20 லட்சம் மாணவர்கள் நீட் தேர்விற்கு விண்ணப்பிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459