இதுகுறித்து அந்தச் சங்கத்தின் மாநிலத்தலைவர் பி.கே.இளமாறன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:
’’இந்தியாவிற்கே முன்மாதிரி மாநிலமாக, குறிப்பாகக் கல்விக்கு அதிக முக்கியத்துவம் அளித்து அதிக நிதி ஒதுக்கீடு செய்து பல்வேறு திட்டங்களை அறிவித்து அரசுப் பள்ளிகளையும் மாணவர்களையும் மேம்படுத்தும் நோக்கத்தோடு முதலமைச்சர் ஸ்டாலின் செயல்பட்டு வருகிறார்.
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் இட ஒதுக்கீடு வழங்கியதைத் தொடர்ந்து, பொறியியல் கல்லூரியிலும் 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டது. ஏழை, எளிய குடும்பங்களில் இருந்துதான் பெரும்பாலானோர் அரசுப் பள்ளிகளில் படிக்கிறார்கள் என்பதை உணர்ந்தும் பெண் கல்வியை ஊக்குவிக்கும் வகையிலும் அரசுப் பள்ளியில் படித்து உயர் கல்வியைத் தொடரும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 போன்ற அறிவிப்பின் மூலம் அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.
எதிர்காலத்தில் அனைத்திலும் முதன்மை பெறப் போகிறவர்கள் அரசுப் பள்ளிகளில் படித்தவர்களாகத்தான் இருப்பார்கள். கடந்த ஆண்டில் மட்டும் ஐந்தரை லட்சம் புதிய மாணவர்கள் சேர்ந்தார்கள். எதிர் வரும் ஆண்டில் இந்த எண்ணிக்கை, இருமடங்காக உயரும் நிலை உருவாகும். நிலைமை இவ்வாறிருக்க சமீப காலமாக சமூக வலைதளங்களில் அரசுப் பள்ளிகளையும் அங்கு படிக்கும் மாணவர்களை தவறான செய்கையில் ஈடுபடுவது போன்று வீடியோ எடுத்து பரப்பி வருவதன்மூலம் அரசுப் பள்ளிகளையும் மாணவர்களின் எதிர்காலத்தையும் கேள்விக்குறியாக்கும் வகையில் ஈடுபடுவோர் மீது தமிழக அரசு கடுமையான நடவடிக்கை எடுக்கும்படி தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் கேட்டுக்கொள்கிறேன்.
கொரோனா ஊரடங்கு ஏற்படுத்திய தாக்கத்தால் எங்கோ ஒரு சில மாணவர்கள் ஈடுபட்ட செயல்கள் வருந்தத்தக்கவை என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் அம்மாணவர்களை நாங்கள் மீண்டும் நல்ல நிலைக்குக் கொண்டு வந்து விடுவோம். ஆனால் அதை வீடியோ எடுத்து பரப்புவதனால் மாணவனின் எதிர்காலம் கேள்விக் குறியாகிறது.
அரசுப் பள்ளிகள் மீது அவதூறு பரப்பியும் அங்கு படிப்பவர்கள் அனைவரும் ஒழுங்கீனமானவர்கள் போலவும் சித்தரித்து வீடியோ பரப்பப்படுகிறது. அல்லது ஒரு சிலரின் தூண்டுதலால் திட்டமிட்டுப் பரப்புகிறார்களோ என்ற அச்சம் ஏற்படுகிறது . மாணவர் சேர்க்கை தொடங்கவுள்ள நிலையில் பெற்றோர்களை அச்சுறுத்தும் வகையில் வீடியோக்கள் வெளியிடுகிறார்கள்.
அரசுப் பள்ளிகள்தான் அடிமட்ட மக்களின் அடையாளம். அரசுப் பள்ளிதான் சிறப்பான குடிமகன்களை உருவாக்கும் அறிவாலயம். ஆகையால், அரசுப் பள்ளிகள் மீது சேற்றை வாரிப் பூசும் வீடியோக்களை எடுத்து சமூகவலைதளங்களில் பரப்புவோர் மீதும் பகிர்வோர் மீதும் கடுமையாக நடவடிக்கை எடுக்க ஆவன செய்ய வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன்’’.
இவ்வாறு தமிழ்நாடு ஆசிரியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் பி.கே.இளமாறன் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment