அரசுப் பள்ளிகள்தான் நம்முடைய சொத்து. அதனை இப்படி சேதப்படுத்தலாமா என்று பள்ளி மாணவர்களுக்கு காவல்துறைத் தலைவர் சைலேந்திர பாபு அறிவுரை கூறியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், மாணவர்களுக்கு வணக்கம். இரண்டு காணொலிகளைப் பார்த்தேன், அதில் அரசு பள்ளி மாணவர் ஒருவர்ஆசியரை தாக்க முற்படுகிறார். இன்னொரு காணொலியில் வகுப்பறையில் இருக்கக் கூடிய டேபிள், சேர் போன்ற பொருட்களை சிரமப்பட்டு உடைக்கிறார்கள். இதனைப் பார்க்கும் போது பாரதியார் கூறியதைப் போல நெஞ்சு பொறுக்குதில்லையே என்பது தான் நினைவுக்கு வந்தது. மாணவர்களே நானும் அரசுப் பள்ளியில்தான் படித்தேன். நம் பெற்றோர்கள் ஏன் நம்மை அரசுப்பள்ளிக்கு அனுப்பினார்கள் என்று யோசித்து பார்த்தீர்களா ?.
அவர்களிடம் அதிகமான சொத்துக்கள் கிடையாது.உங்கள் அப்பா அம்மாவுக்கு சொத்து இல்லை. உங்களுக்கு நிறைய சொத்து இருக்கிறது. உங்களுக்கு நிறைய ஆதாரங்கள் இருக்கிறது. நீங்கள் படிக்கும் அரசுப் பள்ளிதான் உங்கள் சொத்து. அங்கிருக்கும் விளையாட்டு மைதானம் அதுதான் உங்கள் சொத்து.அந்த வகுப்பறை உங்கள் சொத்து. நாங்கள் படிக்கும் போது பென்ச் டேபிள் கிடையாது தரையில் அமர்ந்துதான் படிப்போம். இப்போது அரசு உங்களுக்கு நிறைய வசதிகள் செய்து கொடுக்கிறது. அதை நீங்கள் உடைக்கிறீர்கள்.அரசு பள்ளியில் இருக்கும் ஆசிரியர்கள் தான் உங்கள் சொத்து. அவர்களால் தான் நான் இந்த நிலைக்கு வந்து இருக்கிறேன்.
ஆசிரியரை அடிக்க மாணவன் கை ஓங்குவது வேதனை அளிக்கிறது.ஏன் இது போன்று நடக்கிறது. ஆசிரியர்கள் நமக்கு கணிதம், அறிவியல், புவியியல், வரலாறு, கணிப்பொறி ஆகியவற்றை நமக்கு சொல்லித் தருவார்கள். ஆசிரியர்கள் தான் நமக்கு மிகப் பெரிய ஆதாரம். அவர்கள் தான் மிகப்பெரிய சொத்து. அறிவு செயல்திறன் அனைத்தையும் கற்றுக் கொள்ள வேண்டிய மாணவர்கள், வன்முறைச் செயலை ஏன் செய்கிறீர்கள். இது நமது வீட்டையே நாம் கொளுத்துவது போல் இருக்கிறது. நம் கைகளை நாமே வெட்டிப் போடுவது போல் இருக்கிறது.
தயவுசெய்து மாணவர்கள் இது போன்ற செயல்களை செய்ய வேண்டாம். பள்ளிக்கு மிகப்பெரிய நோக்கத்தோடு நாம் வருகிறோம். ஒரு நல்ல மனிதனாக , சிந்தனை மிக்க மனிதனாக வளர வேண்டிய மாணவர்கள், பள்ளிக்கூடத்திற்கு மரியாதை கொடுக்கவேண்டும் ஆசிரியர்களை உயர்வாக மதிக்க வேண்டும். பள்ளிக்கூடங்களில் இதுபோன்ற வன்முறைகள் சட்டப்படி குற்றம். சட்டம் மாணவர்களுக்கு சில பாதுகாப்பை கொடுத்திருந்தாலும் இது குற்றமாகக் கருதப்படும் எனவே இதுபோன்ற செயல்களை மாணவர்கள் ஈடுபட வேண்டாம், என பேசியுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
No comments:
Post a Comment