பள்ளிக்கல்வி அமைச்சரே... பாடம் நடத்த விடுங்களேன்! - வகுப்பறையில் சந்திக்கும் சவால்கள் குறித்து ஆசிரியர்கள் மனம் திறப்பு! - ஆசிரியர் மலர்

Latest

 




 


23/04/2022

பள்ளிக்கல்வி அமைச்சரே... பாடம் நடத்த விடுங்களேன்! - வகுப்பறையில் சந்திக்கும் சவால்கள் குறித்து ஆசிரியர்கள் மனம் திறப்பு!

'மண்டல அளவில் ஆய்வு கூட்டம் நடத்தி, பள்ளிக்கல்வித்துறையில் உள்ள சிக்கல்களுக்கு, தீர்வு காணும் அமைச்சரே... எங்களின் குமுறல்களுக்கும் செவி சாய்ப்பீர்களா' என, 'தினமலர்' நாளிதழ் மூலம், வகுப்பறையில் சந்திக்கும் சவால்கள் குறித்து, ஆசிரியர்கள் மனம் திறந்துள்ளனர். 


மாணவர் சேர்க்கை சரிவதால், அரசுப்பள்ளிகள் மூடப்பட்டு வந்த நிலை மாறி, கடந்த இரு ஆண்டுகளாக, சேர்க்கை கணிசமாக உயர்ந்திருப்பது, ஆக்கபூர்வமான வளர்ச்சி குறியீடுதான். ஆனால், புதிதாக சேர்ந்துள்ள மாணவர்களை தக்க வைத்துக்கொள்ள, கல்வித்துறையின் மெனக்கெடல் என்ன?



மாதந்தோறும் முதன்மை கல்வி அலுவலர்களுக்கு கூட்டம் நடத்தி, மாவட்ட வாரியாக கல்வி செயல்பாடுகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. சங்க பிரதிநிதிகளை வரவழைத்து, அவர்களின் நீண்ட கால கோரிக்கைகள் பெறப்பட்டுள்ளன. ஆனால், இதில் விவாதிக்கப்பட்ட பல்வேறு சிக்கல்களுக்கு, எந்த தீர்வும் எட்டப்படவில்லையே...!



'தி.மு.க., ஆசிரியர்களுக்கு ஆதரவான கட்சி' என்ற நிலை மாறி, அடிப்படை கோரிக்கைகளை கூட கண்டுகொள்ளாத ஆட்சியாக மாறிவிட்டதாக தோன்றுகிறது. அது உண்மையில்லை என்பதை, உங்கள் நடவடிக்கைகள்தான் நிரூபிக்க வேண்டும். 

ஆசிரியர்களை முடக்கும் 'எமிஸ்' 



அமைச்சர் அவர்களே... பாடம் நடத்த விடாமல் ஆசிரியர்களை முடக்குவதில் முதலிடத்தை பிடிப்பது, எமிஸ் எனும், பள்ளிக்கல்வி தகவல் மேலாண்மை முறைமை. இதன் நோக்கம், தமிழகத்தில் உள்ள அனைத்து வகை பள்ளிகளின் தகவல்களையும், இயக்குனரகத்தில் இருந்தபடியே ஒருங்கிணைப்பது என்பது உங்களுக்கு தெரிந்திருக்கும். 



இந்த இணையதளம் 'க்ளவுட்' தொழில்நுட்பம் மூலம், சமீபத்தில் மேம்படுத்தப்பட்டது. ஆனாலும், தற்போது வரை, இதில் பதிவேற்றப்படும் தகவல்கள், முழுமையாக பதிவாவதில்லை. அனைத்து புள்ளிவிபரங்களும், ஆசிரியர்கள் மூலமாக பதிவு செய்ய, அவ்வப்போது இ-மெயில் மூலம் 'அவசரம்' என குறிப்பிட்டு உத்தரவுகள் பிறப்பிக்கப்படுகின்றன. ஆசிரியர்களும் வேறு வழியில்லாமல், வகுப்பு நேரத்தில் இந்த வேலையை பார்க்கின்றனர். இதனால் கற்பித்தல் பணி அந்தரத்தில் தொங்குகிறது.



வருகைப்பதிவால் வகுப்புகள் 'அம்பேல்' 



அமைச்சர் அவர்களே... ஒரு பாடவேளைக்கு, 40 நிமிடங்கள் ஒதுக்கப்படுகின்றன. இந்த நேரத்தில்தான், வருகைப்பதிவை மொபைல் போன் மூலம், ஆன்லைனில் பதிவேற்ற வேண்டியிருக்கிறது. சர்வர் சிக்கல், இணையதள வேகமின்மை உள்ளிட்ட காரணங்களால், மாணவர்கள் வருகையை பதிவு செய்ய, அதிகபட்சம் 15 நிமிடங்கள் ஆகின்றன. மீதமுள்ள நேரத்தில், ஒவ்வொரு பாடத்திலும் உள்ள க்யூ.ஆர். கோடு ஸ்கேன் செய்து, மாணவர்களுக்கு திரையிட்டு காட்ட வேண்டும்.



பாடம் நடத்தி, வகுப்பு தேர்வுகள் வைக்க வேண்டும்.அரசுப்பள்ளிகளில் தொழில்நுட்ப வசதியை மேம்படுத்தாமலே உத்தரவுகள் மட்டும் வரிசையாக வருகின்றன. இதை செயல்படுத்துவதற்குள் வகுப்பு நேரம் காலியாகி விடுகிறது. அப்புறம் எப்படி கற்பிப்பது, கல்வித்தரத்தை உயர்த்துவது...நீங்களே சொல்லுங்கள்!



ஒவ்வொரு பள்ளிக்கும், மாணவர்கள், ஆசிரியர்கள் எண்ணிக்கையை பொருத்து, வை-பை வசதி ஏற்படுத்தி, அதிவேக இணையதள வசதி ஏற்படுத்தி தர வேண்டும். தொழில்நுட்ப வளர்ச்சி அசுர வேகத்தில் உள்ள இக்காலக்கட்டத்தில், இணையதள வசதி ஏற்படுத்தி தராமலே, மாணவர்களுக்கு டிஜிட்டல் கல்விமுறையை சிலபஸில் கொண்டு வர முடியாது என்பது உங்களுக்கு தெரியாததல்ல. 



அடி வாங்கவா ஆசிரியர் வேலை? 



அமைச்சர் அவர்களே... கொரோனாவுக்கு பின், பள்ளிகள் திறந்ததும், கற்றல், கற்பித்தல் சவால்களை தாண்டி, மாணவர்களை வகுப்பறையில் அமர வைப்பதும், வருகைப்பதிவில் நுாறு சதவீத இலக்கை அடைவதுமே பெரும் சவாலாக முன்நிற்கிறது. இதற்கிடையில், மாணவர்கள் ஆசிரியர்களை மிரட்டுவது, கை ஓங்கி அடிக்க வருவது, போன்ற வீடியோக்கள் பதற வைக்கின்றன. ஆசிரியர்- மாணவர் உறவை மேம்படுத்தாமல், ஆரோக்கியமான இளம் தலைமுறையை உருவாக்குவது கனவாகவே முடியும்.பள்ளிகளில் நன்னெறி வகுப்பு கொண்டு வருதல், பாலியல் கல்வி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துதல் போன்ற முயற்சிகளோடு, ஒன்றியத்திற்கோ, கல்வி மாவட்ட அளவிலோ, ஒரு உளவியல் ஆலோசகரை நியமிக்கலாம். மன அழுத்தத்தை தீர்க்க, மனவளக்கலை பயிற்சி, உளவியல் சிக்கல்களுக்கு கவுன்சிலிங் போன்ற செயல்பாடுகளை, சுழற்சி முறையில் மேற்கொள்ள அனுமதிக்கலாம் என்கிறார், கோவையை சேர்ந்த மனநல மருத்துவர் சீனிவாசன்.

பரிசீலிப்பீர்களா அமைச்சரே...? 



இதேபோல், பல்வேறு சவால்களை கடந்துதான் ஆசிரியர் சமூகம் தினசரி பயணிக்கிறது. புதிதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக பொறுப்பேற்றிருப்பதால், ஓராண்டு அனுபவத்தில் பல மாற்றங்களை கொண்டு வர நீங்கள் திட்டமிட்டிருக்கலாம். ஆனால், அடுத்த நான்கு ஆண்டுகளும், திட்டமிடுதலிலேயே கழிக்காமல், ஏழை மாணவ மாணவியர் வாழ்வில் விடியலை கொண்டு வாருங்கள்! - இப்படிக்கு ஆசிரியர்கள். 



'தொங்கலில்' தொடக்க கல்வி 



பள்ளிக்கல்வியின் அடித்தளம் தொடக்க வகுப்புகளில்தான் உள்ளது. மாணவர்களின் வயது, படிக்கும் வகுப்புக்கு ஏற்ப, பாடவாரியாக இலக்கு நிர்ணயிக்கப்படுவது வழக்கம். குறிப்பாக, எண், எழுத்துகளை கண்டறிதல், வாசித்தல், வாய்ப்பாடு அறிதல், சுயமாக கட்டுரை எழுதுவது உள்ளிட்ட இலக்குகள் ஏட்டளவில் மட்டுமே உள்ளது. இதில், 30 சதவீதம் கூட, பூர்த்தி செய்ய முடிவதில்லை. இதற்கு காரணம், தொடக்க வகுப்புகளில் போதிய ஆசிரியர்கள் நியமிக்கப்படாததே. அடித்தளத்தை வலுவாக்காமல், அடுத்தத்தடுத்த வகுப்புகளுக்கு செல்லும் குழந்தைகளால், உயர்வகுப்பு கையாளும் ஆசிரியர்கள், பெரிதும் சிரமப்படுகின்றனர். பத்தாம் வகுப்பில் இவர்கள் பாஸ் ஆக வில்லை என்றால், வகுப்பாசிரியர் தொலைந்தார்!

பெரும்பாலும், மூன்று ஆசிரியர்களே தொடக்க பள்ளிகளில் இருப்பதால், இரு வகுப்புகளை சேர்த்து ஒரே வகுப்பறையில் அமர வைத்து பாடம் நடத்த வேண்டிய நிலை. இப்படியிருந்தால் எப்படி பாடங்களை புரிய வைக்க முடியும்? இதற்கான தீர்வை முன்வைக்கிறார், கல்வியாளர் சங்கம் மாநில ஒருங்கிணைப்பாளர் சதீஷ்குமார். 



''தொடக்க கல்வியை பொறுத்தவரை, வகுப்புக்கு ஒரு ஆசிரியரோ அல்லது, பாடத்திற்கு ஒரு ஆசிரியரோ கட்டாயம் நியமிக்க வேண்டும். வகுப்புக்கு ஒரு ஸ்மார்ட் வகுப்பறை உருவாக்க வேண்டும். ஆங்கில வழி கொண்டு வந்து, 10 ஆண்டுகளுக்கு மேலாகியும், ஆசிரியர்களே நியமிக்காமல் இழுத்தடிப்பதால், கூடுதல் பணிச்சுமை தொடர்கிறது. பாடமும் நடத்தி, அலுவலக பணிகளும் சேர்த்து பார்க்கும் ஆசிரியர்களால், அறிவுசார் மாணவ சமுதாயத்தை உருவாக்க முடியாது. 



பல கோடி ரூபாய் நிதியை பள்ளிக்கல்வித்துறைக்கு ஒதுக்கும் போது, தொடக்க கல்வித்தரத்தை மேம்படுத்த முனைப்பு காட்டலாமே,'' என்கிறார் அவர். மேலும் அவர், ''உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளை பொருத்தவரை, மாணவர்களின் எண்ணிக்கை பொருத்து, அலுவலக பணியாளர்கள் நியமிக்கப்படுவதில்லை. அலுவலக பணிகளில் இருந்து, பட்டதாரி, முதுகலை ஆசிரியர்களை விடுவித்தால்தான், குறிப்பிட்ட கால இடைவெளிக்குள், பாடங்களை நடத்தி முடித்து, பொதுத்தேர்வுக்கு தயார்ப்படுத்த முடியும்; மாணவர்களை நிஜமாகவே கற்றவர்கள் ஆக மாற்ற முடியும்,'' என்று கூறுகிறார்.

ஆசிரியர்கள் 'அப்டேட்' ஆகணும் 



அண்ணா பல்கலை முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி கூறியதாவது:தரமான கல்விக்கு திறமையான ஆசிரியர்கள் இருக்க வேண்டும். மாணவர்கள் மதிப்பெண் வாங்கினால் மட்டும் போதாது; சிந்திக்கும் திறன் மிக்கவர்களாக மாற்ற வேண்டும். அதற்கேற்ற கற்பித்தல், கற்றல் முறையை ஆசிரியர்கள் கையாள வேண்டும்.



குறிப்பிட்ட ஆண்டுக்கு ஒரு முறை, ஆசிரியர்களுக்கு தேர்வு நடத்தி அவர்களை, அப்டேட் செய்ய வாய்ப்பு அளிக்க வேண்டும். அரசு பள்ளிகளில் உள் கட்டமைப்பை, கட்டாயம் மேம்படுத்த வேண்டும். பள்ளிக்கு செல்லும் ஆர்வத்தை ஏற்படுத்தும் கற்றல் சூழல் இருக்க வேண்டும். பிளஸ் 2 முடிக்கும் மாணவன் ஒருவன், உயர்கல்வி படிக்க முடியாவிடில் சுயமாக தொழில் துவங்கி முன்னேறும் அளவிற்கு, பள்ளிகளிலேயே திறனை மேம்படுத்த வேண்டும். 



மாணவர்களுக்கு தனி பஸ்! 



தமிழ்நாடு அரசு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்க மாநில நிர்வாகி அருளானந்தம் கூறியதாவது:n உயர்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு, அறிவியல் ஆய்வக வசதிகளை மேம்படுத்த வேண்டும். கட்டாயம் பள்ளி, கழிவறைகளை சுத்தம் செய்வதற்கு துாய்மை பணியாளர் ஒருவரை நிரந்தரமாக நியமிக்க வேண்டும்.n அனைத்து பள்ளிகளிலும், 'அப்டேட்' செய்யப்பட்ட புத்தகங்களுடன் தனி நுாலக வசதி ஏற்படுத்த வேண்டியது அவசியம். அரசு போக்குவரத்துக்கழகம்சார்பில், அனைத்து வழித்தடங்களிலும் காலை, மாலை நேரங்களில் பஸ்களை இயக்க வேண்டும். அனைத்து மாணவர்களுக்கும் கம்ப்யூட்டர் கல்வியை, தனிப்பாடமாக கற்பிக்க வேண்டியது அவசியம்.

விளையாட்டும் அவசியம் 



பல பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாமலே உள்ளன. காலியிடங்கள் நிரப்பாமல், மாணவர்களை மாநில, தேசிய அளவிலான போட்டிகளுக்கு எப்படி தயார்ப்படுத்த முடியும் என்று கேட்கிறார், தமிழ்நாடு உடற்கல்வி இயக்குனர், ஆசிரியர் சங்க மாநில தலைவர் தேவி செல்வம்.



மேலும் இவர் கூறுகையில், ''விளையாட்டு மைதானங்கள் வேண்டும். முன்பு, விளையாட்டு உபகரணங்களுக்கு பிரத்யேக நிதி விடுவிக்கப்பட்டது. தற்போது, மாணவர்களுக்காக அரசு ஒதுக்கும் கல்வி கட்டணத்தில், குறிப்பிட்ட பகுதியை இதர செலவினங்கள் மேற்கொள்ள அனுமதிக்கப்படுகிறது. இதர செலவினங்களில், விளையாட்டு உபகரணங்களும் இருப்பதால், தலைமையாசிரியர்கள் மனது வைத்தால்தான், புதிய உபகரணங்களே வாங்க முடிகிறது. உடற்கல்வி வகுப்புகள் ஏறக்குறைய நடத்தப்படுவதே இல்லை.மூளையை சுறுசுறுப்பாக்க உடற்கல்வி அவசியம். ஒழுக்கம், கட்டுப்பாடு, விதிமுறைகளை பின்பற்றுவது, மனச்சிதறல் தவிர்ப்பது ஆகியவை, விளையாட்டு மூலமாகதான் சாத்தியமாகும்,'' என்கிறார்.



டிஜிட்டல் கட்டமைப்பு'



கல்வியாளர் ஜெயபிரகாஷ் காந்தி கூறுகையில்,''பள்ளிக்கல்வித்துறையில் அனைத்து இடங்களிலும் டிஜிட்டல் கட்டமைப்பு ஏற்படுத்த, அரசு திட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டும். 'நான் முதல்வன்' போன்ற திட்டங்களை தீவிரமாக செயல்படுத்த வேண்டும். கடந்த இரண்டு ஆண்டுகள் ஏற்பட்ட கற்றல் இடைவெளியை குறைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். சமூக வலைத்தளங்களுக்கு அடிமைகளாக மாறியுள்ள மாணவர்களை மீட்க, உளவியல் ரீதியான ஆலோசனை வழங்க வேண்டியது அவசியம். சிலபஸ் தாண்டி சிந்திக்கும் திறனை மாணவர்களிடம் ஏற்படுத்த வேண்டும்,'' என்கிறார்.

 - தினமலர் நிருபர்கள் 

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459