கடந்த கல்வியாண்டில் தமிழகத்தில் 99 ஆயிரத்து 610 பேர் நீட் தேர்வை எழுதினர். அகில இந்திய அளவில் 15 லட்சம் பேர் இத்தேர்வை எழுதினர். கொரோனா காரணமாக நடப்பு ஆண்டிற்கான மருத்துவக்கல்வி மாணவர் சேர்க்கை மற்றும் வகுப்புகள் தொடக்கம் தாமதம் ஆனது. இந்தநிலையில் தற்போது கொரோனா கட்டுக்குள் வந்துள்ளதால், வரும் கல்வியாண்டில் மருத்துவக்கல்வி பயில நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் அறிவிப்பு வெளியிடப்பட்டது. கடந்த 2ம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் மாணவர்கள் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்து வருகின்றனர். இந்நிலையில் தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்களும் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க முயற்சித்தனர்.
ஆனால் கடந்த கல்வியாண்டில் மாணவர்கள் பிளஸ் 1 பாடத்தில் எடுத்த மதிப்பெண் பட்டியல் விபரம் கேட்கப்பட்டுள்ளதால், அதற்கு மேல் உள்ளீடு செய்யமுடியவில்லை. இதற்கு காரணம் கொரோனா பரவல் காரணமாக கடந்த கல்வியாண்டில் மாணவர்கள் தேர்வு இன்றி ஆல் பாஸ் செய்யப்பட்டனர். அவர்களுக்கு வழங்கப்பட்ட பிளஸ் 1 மதிப்பெண் சான்றிதழில் படித்த பாடங்களுக்கு எதிரே மதிப்பெண் பதிவு செய்ய வேண்டிய இடத்தில் பாஸ் என மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளன. மதிப்பெண்கள் பாட வாரியாக குறிப்பிடப்படவில்லை.
இதனால் நீட் விண்ணப்பத்தில் பாஸ் என மட்டும் பதிவிட்டால் ஏற்கவில்லை என மாணவர்கள் தெரிவிக்கின்றனர். இதன் காரணமாக தமிழக மாணவர்கள் என்ன செய்வது என தெரியாமல் திகைப்பில் உள்ளனர். இதுகுறித்து நெல்லை மாவட்ட நீட் ஒருங்கிணைப்பு ஆசிரியர் கிருஷ்ணசாமி கூறுகையில், நெல்லை மாவட்டத்தில் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் மாநில பாடத்திட்டத்தில் பயிலும் மாணவர்கள் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியவில்லை. இதுகுறித்து பலர் தெரிவித்த வண்ணம் உள்ளனர். பள்ளிக் கல்வித் துறை உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு இந்த விவரம் கொண்டு செல்லப்பட்டுள்ளது என்றார். இந்த பிரச்னைக்கு உடனடியாக தீர்வு காணவேண்டும் என சம்பந்தப்பட்ட மாணவர்களின் பெற்றோர் மற்றும் கல்வியாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
No comments:
Post a Comment