அரசு பள்ளிகளில் எல்.கே.ஜி., வகுப்பு கட்: ஆசிரியர்கள் கூண்டோடு இடமாற்றம் - ஆசிரியர் மலர்

Latest

 




 


28/02/2022

அரசு பள்ளிகளில் எல்.கே.ஜி., வகுப்பு கட்: ஆசிரியர்கள் கூண்டோடு இடமாற்றம்

அரசு பள்ளிகளில் உள்ள எல்.கே.ஜி., வகுப்புகளை மூட, பள்ளி கல்வித்துறை முடிவு செய்துள்ளது. அதனால், எல்.கே.ஜி., வகுப்பு நடத்திய அரசு பள்ளி ஆசிரியர்கள், ஒன்றாம் வகுப்புக்கு மேற்பட்ட பணிக்கு மாற்றப்பட்டு உள்ளனர். 


  தமிழக பள்ளி கல்வி துறையின் கீழ் செயல்படும், அரசு மேல்நிலை பள்ளிகளை, ஒருங்கிணைந்த கல்வி வளாகமாக மாற்ற, கடந்த ஆட்சியில் நடவடிக்கை எடுக்கப்பட்டது.முதற்கட்டமாக, மாவட்டம்தோறும் மாதிரி மேல்நிலை பள்ளிகள் துவக்கப்பட்டு, அங்கு, தொடக்க, நடுநிலை பள்ளிகள் இணைக்கப்பட்டன. மேலும், எல்.கே.ஜி., - யு.கே.ஜி., வகுப்புகளும் துவக்கப்பட்டன. பின், 2,381 அங்கன்வாடிகளை அருகில் உள்ள தொடக்க பள்ளிகளுடன் இணைத்து, எல்.கே.ஜி., வகுப்புகள் துவங்கி மாணவர்கள் சேர்க்கப்பட்டனர்.



எல்.கே.ஜி., வகுப்புக்கு பாடம் எடுக்க, அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு பணி மாறுதல் வழங்கப்பட்டது. இந்த மாற்றத்துக்கு பல ஆசிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்தாலும், பணி நிரவல் அடிப்படையில் மாறுதல் வழங்கப்பட்டது. இந்நிலையில், ஆட்சி மாற்றம் ஏற்பட்டு அதிகாரிகள் மாற்றப்பட்டனர். தற்போது, எல்.கே.ஜி., ஆசிரியர்களுக்கு, அவர்கள் ஏற்கனவே பணியாற்றிய இடங்களுக்கே, பணி மாறுதல் வழங்கப்படுகிறது.

  வரும் கல்வி ஆண்டிற்கான எல்.கே.ஜி., வகுப்புகளை மூட, பள்ளி கல்வித்துறை முடிவு செய்துள்ளதால், ஆசிரியர்களுக்கு முன்கூட்டியே இடமாறுதல் வழங்கப்படுவதாக, பள்ளிக்கல்வி வட்டாரங்களில் கூறப்படுகிறது.இதை உறுதி செய்யும் வகையில், வரும் கல்வி ஆண்டுக்கான எல்.கே.ஜி., மாணவர் சேர்க்கையும் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.



நடப்பு கல்வி ஆண்டு முடிந்ததும், அரசு பள்ளிகளில் எல்.கே.ஜி., வகுப்புகளை மூடிவிட்டு, சமூக நலத்துறையின் அங்கன்வாடிகளே மீண்டும் எல்.கே.ஜி., வகுப்பை நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.இதனால், கடந்த ஆண்டு அரசு பள்ளிகளில் எல்.கே.ஜி., சேர்ந்த மாணவர்கள், வரும் கல்வி ஆண்டில் அரசு பள்ளிகளில் யு.கே.ஜி., படிக்க முடியாது.எனவே, இந்த மாணவர்களை, தனியார் பள்ளிகளில் யு.கே.ஜி., சேர்க்க பெற்றோர் முயற்சித்துவருகின்றனர்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459