கேந்திரியா பள்ளி அட்மிஷன் வயது வரம்பு திடீர் உயர்வு. - ஆசிரியர் மலர்

Latest

 




 


28/02/2022

கேந்திரியா பள்ளி அட்மிஷன் வயது வரம்பு திடீர் உயர்வு.

கேந்திரிய வித்யாலயா என்ற கே.வி., பள்ளிகளில், மாணவர் சேர்க்கைக்கான வயது வரம்பில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளதால், பெற்றோர் குழப்பம் அடைந்துள்ளனர்.


மத்திய கல்வி அமைச்சகத்தின், தன்னாட்சி பெற்ற அமைப்பாக உள்ள கேந்திரிய வித்யாலயா சங்கதன் நிறுவனத்தின் கீழ், நாடு முழுதும் கே.வி., பள்ளிகள் செயல்படுகின்றன.ராணுவத்தினர், மத்திய, மாநில அரசின் அலுவலர்,ஊழியர்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனத்தினர் ஆகியோரின் பிள்ளைகளுக்கு, முன்னுரிமை அளித்து, இந்த கல்வி நிறுவனத்தில் மாணவர் சேர்க்கை நடத்தப்படும்.மீதமுள்ள இடங்கள் மற்றவர்களுக்கு ஒதுக்கப்படும். இந்த பள்ளிகளில், ஒன்றாம் வகுப்பில் மாணவர்களை சேர்க்கும் பணி நடக்கும் போது, அந்த ஆண்டு மார்ச், 31 அல்லது ஏப்., 1ல், 5 வயது நிறைந்திருக்க வேண்டும் என்ற விதி, பல ஆண்டுகளாக உள்ளது.



வரும், 2022- - 23ம் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பை, கே.வி.சங்கதன் நேற்று வெளியிட்டுள்ளது.அதில், ஒன்றாம் வகுப்பில் சேரும் மாணவர்கள்,புதிய கல்வி கொள்கையின்படி, 6 வயதாக இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது.இதில் மாணவர்களுக்கு 6 வயது முடிந்திருக்க வேண்டுமாஅல்லது 5 வயது முடிந்து, 6 வயதில் இருக்க வேண்டுமா என்ற தெளிவு இல்லை.மேலும் மாணவர், எந்த ஆண்டில் இருந்து, எந்த ஆண்டிற்குள் பிறந்திருக்க வேண்டும் என்ற குறிப்பும், முதல் கட்ட அறிவிப்பில் இடம் பெறவில்லை.ஏற்கனவே, 5 வயது நிறைவடைந்தால் போதும் என்ற நிலையில், 6 வயது நிறைவடைய வேண்டும் என, திடீரென வயது வரம்பை உயர்த்தினால், ஆயிரக்கணக்கான மாணவர்கள் இந்த ஆண்டு கே.வி., பள்ளிகளில் சேர முடியாத நிலை ஏற்படும். 



தனியார் பள்ளிகளில் ஏற்கனவே, 'அட்மிஷன்' முடிந்து விட்டதால், அங்கும், 'சீட்' பெற முடியாது. தமிழக மாணவர்களை பொறுத்தவரை, அரசு பள்ளிகளில் மட்டுமே சேருவதற்கு வாய்ப்பு உள்ளது.இது குறித்து, நாளை துவங்க உள்ள, 'ஆன்லைன்' பதிவில், கூடுதல் விபரங்களை அறிந்து கொள்ளலாம் என, கே.வி., தரப்பில் கூறப்பட்டுள்ளது. கே.வி., மாணவர் சேர்க்கை அறிவிப்பை,  http://kvsangathan.nic.in/ என்ற இணையதளத்திலும், ஆன்லைன் பதிவு விபரங்களை,  http://kvsonlineadmission.kvs.gov.in/index.html  என்ற இணையதளத்திலும் தெரிந்து கொள்ளலாம்.  

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459