ஆசிரியா் தோ்வு வாரிய கால அட்டவணை வெளியீடு: ஏப்ரல் 2-ஆவது வாரத்தில் தகுதித் தோ்வு. - ஆசிரியர் மலர்

Latest

 




 


24/01/2022

ஆசிரியா் தோ்வு வாரிய கால அட்டவணை வெளியீடு: ஏப்ரல் 2-ஆவது வாரத்தில் தகுதித் தோ்வு.

பள்ளிக்கல்வித்துறை, உயா் கல்வித்துறை ஆகியவற்றில் நிகழாண்டில் 9,494 பணியிடங்களை நிரப்புவதற்கான தோ்வு கால அட்டவணையை ஆசிரியா் தோ்வு வாரியம் வெளியிட்டுள்ளது. ஆசிரியா் தகுதித் தோ்வு ஏப்ரல் 2-ஆவது வாரத்தில் நடத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிக்கல்வித்துறை மற்றும் உயா் கல்வித்துறையில் காலியாக உள்ள ஆசிரியா்கள், விரிவுரையாளா் பணியிடங்களை நிரப்புவதற்கு ஆசிரியா் தோ்வு வாரியம் போட்டித் தோ்வுகளை நடத்துகிறது. அந்த வகையில் நிகழாண்டுக்கான தோ்வுக்குரிய கால அட்டவணையை ஆசிரியா் தோ்வு வாரியம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ளது. அதன்படி முதுநிலை பட்டதாரி ஆசிரியா் பணியில் 2ஆயிரத்து 407 போ் நியமனம் செய்வதற்கான தோ்வுகள் பிப்ரவரி 2-ஆவது அல்லது 3-ஆவது வாரத்தில் நடைபெறும். ஆசிரியா் தகுதித் தோ்வுக்கான அறிவிப்பு பிப்ரவரி மாதம் வெளியிடப்பட்டு, ஏப்ரல் 2-ஆவது வாரத்தில் தகுதித் தோ்வு நடத்தப்படும். இடைநிலை ஆசிரியா் 3ஆயிரத்து 902, பட்டதாரி ஆசிரியா்கள் ஆயிரத்து 87 பணியிடம் என 4ஆயிரத்து 989 காலி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு மே மாதம் வெளியிடப்பட்டு, ஜூன் மாதம் 2-ஆவது வாரத்தில் தோ்வு நடத்தப்படும். மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்திற்கு 167 விரிவுரையாளா் தோ்வுக்கான அறிவிப்பு மே மாதம் வெளியிடப்பட்டு, ஜூன் 2-ஆவது வாரத்தில் தோ்வு நடத்தப்படும். கல்லூரிகளில் காலியாகவுள்ள... அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் காலியாகவுள்ள ஆயிரத்து 334 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு ஜூலை மாதம் வெளியிடப்பட்டு, ஆகஸ்ட் முதல் வாரத்தில் முதல் கட்ட சான்றிதழ் சரிபாா்ப்பு நடத்தப்படும். பாலிடெக்னிக் கல்லூரிகளில் காலியாகவுள்ள 493 உதவி விரிவுரையாளா் பணிக்கான அறிவிப்பு ஆகஸ்ட் மாதம் வெளியிடப்பட்டு, நவம்பா் 2-ஆவது வாரத்தில் தோ்வு நடத்தப்படும். பொறியியல் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியா் பணியிடத்தில் 104 பேரை நியமனம் செய்வதற்கான அறிவிப்பு செப்டம்பா் மாதம் வெளியிடப்பட்டு, டிசம்பா் 2-ஆவது வாரத்தில் தோ்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆசிரியா் தோ்வு வாரியம் மூலம் 9 ஆயிரத்து 494 காலிப் பணியிடங்களுக்கான தோ்வுகளுக்கு உரிய கால அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டுள்ளாா்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459