பள்ளி செல்ல மாணவர்களிடையே ஆர்வம் குறைவு: அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு. - ஆசிரியர் மலர்

Latest

 




 


14/11/2021

பள்ளி செல்ல மாணவர்களிடையே ஆர்வம் குறைவு: அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு.

 கொரோனா ஊரடங்கிற்கு பின் பள்ளிக்கு செல்ல மாணவர்கள் மத்தியில் ஆர்வம் குறைவாக இருப்பதாக தெரிவித்த உயர் நீதிமன்றம், மாணவர்களின் கல்வி சம்பந்தமாக வேறு பிரச்னைகள் உள்ளதா என்பது குறித்து தமிழக அரசு பதில் அளிக்குமாறு உத்தரவிட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக, பள்ளிகள் கடந்த 2020 ஏப்ரல் முதல் மூடப்பட்டன. தனியார் பள்ளிகள், மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகளை நடத்தி வருகின்றன.


ஆனால், கிராமபுறங்களில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களால் கம்ப்யூட்டர், மொபைல் வசதிகளை பெற முடியாது என்பதால், அந்த மாணவர்களுக்காக ஆன்லைன் டிஜிட்டல் முறையில் கல்வி பெறுவதற்கான வசதிகளை ஏற்படுத்த தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி, தமிழக பெண்கள் இயக்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. மனுவில், மாணவர்கள் படிப்பை பாதியில் நிறுத்தவில்லை என்பதை உறுதி செய்ய மாவட்ட, தாலுகா, பஞ்சாயத்து அளவில் குழுக்களை நியமிக்கவும் அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது. 


இந்த மனு தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், 18 மாதங்களுக்கு பின் மீண்டும் பள்ளி செல்ல மாணவர்கள் மத்தியில் ஆர்வக் குறைவு ஏற்பட்டுள்ளது. வேலை இழப்பு காரணமாக சொந்த ஊர் திரும்பியோரின் குழந்தைகள் படித்து வந்த அரசு பள்ளிகளில் மாற்றுச் சான்று பெறுவதில் சிக்கல் உள்ளதாக தெரியவந்துள்ளது. எனவே, இந்த பிரச்னைகள் தொடர்பாக அரசின் ஆலோசனைகளை கேட்டு அட்வகேட் ஜெனரல் தெரிவிக்க வேண்டும். விசாரணை நவம்பர் 24ம் தேதிக்கு தள்ளிவைக்கப்படுகிறது. அன்றைய தினம், மாணவர்களின் கல்வி சம்பந்தமாக இந்த இரு பிரச்னைகள் தான் உள்ளனவா. வேறு பிரச்னைகள் உள்ளனவா என்பதை அரசு தெரிவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459