இல்லம் தேடிக் கல்வி: குழந்தைகள் என்ன நினைக்கிறார்கள்? பேராசிரியர் நா.மணி - ஆசிரியர் மலர்

Latest

 




 


21/11/2021

இல்லம் தேடிக் கல்வி: குழந்தைகள் என்ன நினைக்கிறார்கள்? பேராசிரியர் நா.மணி

 எல்லாக் குழந்தைகளும் பள்ளியில் சேர்க்கப்பட வேண்டும். கற்றல் இடைவெளி இட்டு நிரப்பப்பட வேண்டும். மக்கள் பங்கேற்போடு, இந்தப் பணியை செய்து முடிக்க வேண்டும் என்று சொல்லி, ‘இல்லம் தேடிக் கல்வி’ இயக்கத்தை ஆரம்பித்துவைத்தார் தமிழக முதல்வர் ஸ்டாலின். ஆரம்பக் கட்டமாக சில இடங்களில் மட்டும் பணி ஆரம்பித்திருக்கிறது. பொதுவாக இதுபற்றி குழந்தைகள் என்ன நினைக்கிறார்கள்? இன்னும் இந்த இயக்கம் சென்றடையாத இடங்களில் உள்ள குழந்தைகளிடமே, இதைப் பற்றிக் கேட்டால் என்ன என்று தோன்றியது.


பள்ளிகள் திறக்கப்பட்ட பின்னர் இந்த மாலை நேர வகுப்புகள் எதற்கு? ஏற்கெனவே 9-5 பள்ளியில் பயின்று, களைப்புடன் திரும்பும் குழந்தைகளை, மீண்டும் படிக்க நிர்ப்பந்திப்பது சுமை இல்லையா? இப்படியெல்லாம் பொதுச் சமூகமே நிறையக் கேள்விகளைக் கேட்கிறது இல்லையா? அப்படியிருக்க குழந்தைகள் இதுபற்றி என்னை நினைக்கிறார்கள் என்பதையும் தெரிந்துகொள்வது அவசியம் என்று கருதினேன்.




ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட 150 வீடுகளை இதற்கான களம் ஆக்கிக்கொண்டேன். உழைக்கும் மக்கள் வாழும் குடியிருப்புகளையும் கொண்ட பகுதியாக வீடுகள் தேர்ந்தெடுக்கப்பட்டன. இரண்டாம் வகுப்பு முதல் எட்டாம் வரை படிக்கும் மாணவ – மாணவிகளே நமக்கான பேட்டியாளர்கள்!



எல்லோரும் பள்ளி சென்று வந்தீர்களா?


இந்தக் கேள்விக்கு, ‘செல்லவில்லை’ என்று பலர் பதில் சொன்னது அதிர்ச்சியாக இருந்தது. ‘அம்மா தீபாவளி முடிந்து போகலாம்’ என்று சொன்னதாகச் சொன்னவர்கள் ஏராளம்.


யாரெல்லாம் கரோனா காலத்தில் வேலைக்குச் சென்றீர்கள்?


மூன்று பேர், ‘ஆம்’ என்றார்கள்.


என்ன வேலைக்குச் சென்றீர்கள்?


இப்படி வேலைக்குச் சென்ற எல்லோருமே, “சிப்ஸ் கடைக்கு. சிப்ஸ் சீவ” என்று சொன்னார்கள். “மூட்டைக்கு 25 ரூபா. நாளொன்றுக்கு நான்கு மூட்டை சீவுவோம்” என்று சொன்னார்கள். ஆனால், இப்படிச் சொன்ன மூவருமே பள்ளி திறந்ததும் பள்ளிக்குச் சென்றுவிட்டிருந்தார்கள் என்பது மகிழ்ச்சி தரும் செய்தியாக இருந்தது.


'இல்லம் தேடிக் கல்வி இயக்கம்' தெரியுமா?


மூன்று பேர், ‘தெரியும்’ என்றனர். இரண்டு பேர் தொலைக்காட்சியில் பார்த்ததாகவும், ஒருவர் பள்ளியில் ஆசிரியர் கூறியதாகவும் சொன்னார்கள்.


இப்படி ஒரு திட்டம் தேவையா?


ஆச்சரியமூட்டும் வகையில், எல்லோருமே, ‘கட்டாயம் தேவை’ என்றார்கள். ‘பள்ளி முடிந்து மாலை 5 மணிக்குள் வீட்டுக்கு வந்து விடுவோம். 6 மணிக்கு சிறப்பு வகுப்பை வீட்டில் தொடங்கலாம்’ என்றார்கள். சிலர், ‘தொடங்கலாம். ஆனால், 7.30 மணிக்குள் வகுப்புகளை முடித்துக்கொள்ளலாம்’ என்றனர். எல்லோருமே, ‘ஞாயிற்றுக்கிழமை மட்டும் வகுப்புகள் வேண்டாம்’ என்றார்கள்.


என்ன சொல்லிக்கொடுக்க வேண்டும்?


எல்லோருமே, ‘பிடித்த பாடங்கள் - நன்றாக வராத பாடங்கள், பிடிக்காத பாடங்கள் இரண்டையுமே சொல்லித் தர வேண்டும்’ என்றார்கள். தமிழ், ஆங்கிலம், கணக்கு ஆங்கிலப் பாடங்களைப் பரவலாகச் சொன்னார்கள்.


எங்கிருந்து ஆரம்பிக்க வேண்டும்?


இது முக்கியமானது என்று நினைக்கிறேன். ‘அடிப்படைத் தமிழ் எழுத்துக்கள், ஆங்கில எழுத்துகள், வாய்ப்பாடுகள் சொல்லிக்கொடுக்க வேண்டும்’ என்று  கேட்டுக்கொண்ட மாணவர்கள் இருந்தார்கள்.


என்ன கதைகள் பிடிக்கும்?


மூன்று விதங்களில் சொன்னார்கள், ‘டிராகன் கதைகள், மன்னர்கள் கதைகள், சண்டைக் கதைகள்’.



ஆய்வு மூலம் தோன்றிய எண்ணம்


பொதுவாகத் தெரிந்துகொண்ட விஷயம் என்னவென்றால், சமூகத்தில் கீழ் அடுக்குகளில் உள்ள குழந்தைகள் அவர்களது வீடுகளில் பள்ளி முடிந்து வீடு திரும்பிய பிறகு முறையான இடைவெளியில் உட்கார்ந்து படித்தல், எழுதல் எனும் கற்றல் செயல்பாடுகளை மேற்கொள்வது அரிதாகவே உள்ளது. ‘எங்க டீச்சர் வீட்டுப் பாடம் எதுவும் கொடுக்கவில்லை’ என்று கூறும் பிள்ளைகள் நிறைய இருக்கிறார்கள். அவர்களுக்கு இது ஒரு நல்ல ஆரம்பமாக அமையும் என்று தோன்றுகிறது.


நிறையக் குழந்தைகளுக்கு கரோனா காலகட்டமான ஒன்றரை ஆண்டுகளில் கல்விச் செயல்பாடு நிறையப் பாதிக்கப்பட்டிருக்கிறது. படிப்பில் நிறைய மறந்திருக்கிறார்கள். அவர்களுக்கு எதெல்லாம் தெரியவில்லை என்பதே இப்போது பள்ளிக்கூடங்களுக்குச் செல்லத் தொடங்கிய பிறகுதான் புரிபடலாகிறது. இத்தகு நிலையில், படிக்கும் ஆர்வம் அவர்களுக்குத் தேவையின் நிமித்தம் உருவாகிறது. ஆகையால், இந்த இயக்கத்தை முழுத் தமிழ்நாட்டுக்கும் விரித்தெடுப்பதுடன், பள்ளிக்கூடங்களிலும் ஆசிரியர்கள் கூடுதல் கவனத்துடன் செயலாற்ற அரசு ஏற்பாடுசெய்ய வேண்டும்!


No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459