இன்று, நம் சமூகம் ஒழுக்கமற்றதாக மாறிவிட்டது. அதற்கு முக்கிய காரணம், நம் கல்வி முறை சரியில்லாமல் இருப்பதும், ஒழுக்கம் இல்லாத தலைவர்களுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவமும் தான்!தவறான நபர்கள் உயர்ந்த பதவியில், பெரும் செல்வாக்கோடு வலம் வருவது, மக்களிடையே எப்படி வாழ்ந்தால் என்ன என்ற எண்ணத்தை உருவாக்கி விட்டது.குற்றவாளிகள், மக்கள் பிரதிநிதிகளாக தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்; இது, குற்றங்கள் பெருகுவதற்கு காரணமாக மாறி விட்டது.தவறு செய்யும் மாணவர்களை கண்டிக்கக் கூடாது என, ஆசிரியர்கள் கைகள் எப்போது கட்டப்பட்டதோ, அப்போதே சமூகம் தீய வழியில் நடக்க துவங்கி விட்டது.மாணவர் மது குடிப்பதும், போதையோடு பள்ளிக்கு வருவதும், மாணவியர் மீது பாலியல் தாக்குதல்கள் நடத்துவதும் ஆங்காங்கே நடக்கிறது.
ஆசிரியரின் கண்டிப்பால் ஒழுக்கமான பிள்ளைகள் உருவான காலம் மலையேறி விட்டது.
இன்று மாணவர்களிடம், ஒழுக்கம் என்பது மிகப் பெரிய கேள்விக்குறியாக உள்ளது.அதிலும், இந்த கொரோனா காலத்தில் இரண்டு ஆண்டுகளாக வகுப்பறை கல்வி இல்லாததால், மாணவர்களின் மனநிலை பாதை தவறி விட்டது.ஏராளமான குழந்தைகள், மொபைல் போன் எனும் மாய வலையில் சிக்கி விட்டனர். ஏழை, எளிய மாணவர்கள் பலர், சூழல் காரணமாக குழந்தை தொழிலாளர்களாக மாறி விட்டனர்.இளம் வயதில் சம்பாதிக்கும்போது, தீயப்பழக்கங்களுக்கு ஆளாகின்றனர். மேலும், இன்றைய சினிமாவில் பொறுக்கி, ரவுடிகள் தான், கதாநாயகனாக காட்டப்படுகின்றனர். அதை பார்த்து, இளைஞர்களும் தறுதலைகளாக திரிகின்றனர்.தற்போது, காவலர் பூமிநாதன் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட இரண்டு சிறுவர்களில் ஒருவர் ஒன்பதாம் வகுப்பு; மற்றொருவர் ஐந்தாம் வகுப்பு படிக்கின்றனராம். இவர்களை ஆடு திருட அழைத்து சென்ற முக்கிய குற்றவாளியின் வயதோ, 19 என்பதும், அவன் மது அருந்தியிருந்தான் என்பதும் மேலும் அதிர்ச்சி அளிக்கிறது.இதன் மூலம், எப்படிப்பட்ட இளைய சமூகத்தை நாம் உருவாக்கி வருகிறோம் என்பதை அறிய முடிகிறது.இந்த மூன்று குற்றவாளிகள் உருவாக முக்கிய காரணமே, ஒழுக்கமின்மை தான்; அதை கற்று கொடுக்க இயலாதது கல்வி துறை தான்!ஒழுக்கமான மாணவர்களை உருவாக்க, ஆசிரியர்களுக்கு சுதந்திரம் அளிக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்.
No comments:
Post a Comment