தமிழக சத்துணவுத் திட்டத்தில் அதிகரித்துள்ள 25,000 காலிப் பணியிடங்களால், தினக்கூலி (அவுட்சோர்ஸிங்) அடிப்படையில் பணியாளர்களை நியமித்து திட்டத்தை செயல்படுத்தும் முடிவில் அரசு உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. தமிழகத்தில், மறைந்த முன்னாள் முதல்வர் காமராஜரால் கொண்டுவரப்பட்ட மதிய உணவுத் திட்டம், முன்னாள் முதல்வர் எம்ஜிஆரால் 1982-ஆம் ஆண்டு சத்துணவுத் திட்டமாக விரிவுபடுத்தப்பட்டது. இத்திட்டத்தின்கீழ் அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 10-ஆம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவியருக்கு மதிய உணவு வழங்கப்படுகிறது. தமிழகத்தில் சுமார் 43,000 பள்ளிகளில் உள்ள சத்துணவு மையங்கள் மூலம் 55 லட்சம் மாணவ, மாணவியர் சத்துணவு சாப்பிடுகின்றனர். ஆரம்பத்தில் பள்ளிக்கல்வித் துறையின்கீழ் செயல்படுத்தப்பட்ட இத்திட்டம், பின்னர் ஊரக வளர்ச்சித் துறை, சமூகநலத் துறையின் கட்டுப்பாட்டில் இயங்கி வந்தது. தற்போது சமூகநலன் மற்றும் மகளிர் உரிமையியல் துறையின்கீழ் இத்திட்டம் செயல்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் முக்கிய நோக்கம், பொருளாதாரத்தில் நலிவடைந்த ஏழைக் குழந்தைகளுக்கு சத்துணவு கிடைத்திட வகை செய்தலே ஆகும். இந்தத் திட்டத்துக்கான நிதி, மத்திய, மாநில மாநில அரசுகளால் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. தமிழகத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளாக சத்துணவுத் திட்டத்தில் பணியாற்ற ஆட்கள் தேர்வு செய்யப்படவில்லை. அமைப்பாளர், சமையலர், உதவியாளர்கள் பணி நியமனத்துக்கான அறிவிப்பு 2017, 2020-ஆம் ஆண்டுகளில் வெளியிடப்பட்டு நேர்காணல் நடத்தி முடிக்கப்பட்ட நிலையில் ஒத்திவைக்கப்பட்டது. இதனால் காலியிடங்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கத் தொடங்கியது. தற்போதைய நிலையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தபட்சம் 300 முதல் 800 வரை பணியிடங்கள் காலியாக உள்ளன. ஒரு சத்துணவு அமைப்பாளர் நான்கு மையங்களிலும், சமையலர் மூன்று பள்ளிகளிலும் பணியாற்றும் நிலை உள்ளது. கரோனா தொற்றுப் பரவலால் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பள்ளிகள் செயல்படவில்லை. இதனால் தற்போது பணியில் உள்ளோரைக் கொண்டு சத்துணவுத் திட்டத்தைச் செயல்படுத்தி வந்தனர். நவம்பர் 1-ஆம் தேதி முதல் மீண்டும் தொடக்க, நடுநிலைப் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. அப்போது மாணவ, மாணவிகளுக்கு சத்துணவு வழங்க வேண்டிய நிலை உள்ளது. ஆனால் போதிய பணியாளர்கள் இல்லாதது, உணவுப் பொருள்கள் மையங்களுக்கு விநியோகிக்கப்படாதது போன்றவற்றால் சத்துணவுத் திட்டத்தின் நிலை கேள்விக்குறியாகி உள்ளது. காலிப் பணியிடங்களை தற்காலிகமாக நிரப்பும் பொருட்டு, ஓய்வுபெற்ற சமையலர்களையோ அல்லது தினக்கூலி அடிப்படையில் ஊழியர்களையோ நியமிக்கலாம் என்று தமிழக அரசு திட்டமிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து சத்துணவுப் பிரிவு அதிகாரி ஒருவர் கூறியதாவது: சத்துணவுப் பணியாளர் காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சராசரியாக ஒரு மாவட்டத்தில் 400 பணியிடங்களாவது காலியாக இருக்கும். உதாரணமாக நாமக்கல் மாவட்டத்தில் 984 மையங்கள் உள்ள நிலையில் பாதி இடங்கள் காலியாகவே உள்ளன. மாநிலம் முழுவதும் சுமார் 25,000 இடங்கள் காலியாக உள்ளதாக தகவல் உள்ளது. விரைவில் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று அரசு உறுதி அளித்துள்ளது. அந்த நம்பிக்கையில்தான் சமாளித்து வருகிறோம் என்றார்.
01/11/2021
New
25,000 காலிப் பணியிடங்களால் தடுமாறும் சத்துணவுத் துறை
About ASIRIYARMALAR
Templatesyard is a blogger resources site is a provider of high quality blogger template with premium looking layout and robust design. The main mission of templatesyard is to provide the best quality blogger templates.
News
Labels:
News
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment