ஆதிதிராவிடர், பழங்குடியினர் மாணவர்களுக்கான போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை திட்டச் செயலாக்கம் குறித்து தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு விளக்கம் அளித்துள்ளார்.
ஆதிதிராவிடர், பழங்குடியினர் மாணவர்களுக்கான போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை திட்டச் செயலாக்கம் குறித்து ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரியான ஆர்.கிறிஸ்துதாஸ் காந்தி தலைமைச் செயலாளருக்குக் கடந்த செப்.14-ம் தேதி மனு ஒன்றை அளித்திருந்தார்.
இது தொடர்பாகத் தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு அளித்துள்ள விளக்கக் கடிதம்:
''தங்களின் மனு மீது ஆதிதிராவிடர் நல ஆணையரிடம் அறிக்கை பெறப்பட்டுள்ளது. அதன்படி, 2020-2021ஆம் ஆண்டுக்கான போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகைக்கு இணையவழியில் 7 லட்சத்து 13 ஆயிரத்து 241 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அதில், கல்வித்துறைத் தலைவர்களால் பரிந்துரை செய்யப்பட்ட, தகுதியுள்ள 6 லட்சத்து 98 ஆயிரத்து 294 மாணவர்களுக்கு ரூ.1,161.55 கோடி அளவில் உதவித்தொகை வழங்கப்பட்டது.
கல்வியியல் கல்லூரி மாணவர்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகை (ரூ.22,500 முதல் ரூ.29,500 வரை) 2020- 21ஆம் கல்வியாண்டுக்கு நிர்ணயக் குழுவால் கடந்த பிப்ரவரி மாதம் திருத்தி அமைக்கப்பட்டது.
ஆனால், அதற்கு முன்பாகவே உதவித்தொகைக்கான விண்ணப்பம் பெறப்பட்டதால், மாணவர்களுக்குப் பழைய உதவித்தொகையே வழங்க முடிந்தது. திருத்தியமைக்கப்பட்ட கல்விக் கட்டணத்தில் ரூ.30 ஆயிரத்தில் உள்ள வித்தியாசத் தொகையை மாணவர்களுக்கு வழங்கும் அனுமதி ஆணை, அரசின் பரிசீலனையில் உள்ளது.
அதேபோல, துறைத் தலைவர்களின் பரிந்துரை பெறப்படாததால் நிலுவையிலுள்ள 702 விண்ணப்பங்களுக்கு மட்டுமே உதவித்தொகை வழங்கப்படாமல் உள்ளது.
மேலும், 2021- 22ஆம் கல்வியாண்டில் உதவித்தொகை வழங்குவதற்காகப் பல்வேறு மாற்றம் செய்த வரைவு வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு 2020-ம் ஆண்டு ஜனவரி மாதம் வெளியிட்டது. ஆனால், கல்வியாண்டின் இறுதியில் வரைவு பெறப்பட்டதால், மாற்றம் எதுவுமில்லாமல் 2020- 21ஆம் கல்வியாண்டில் உதவித்தொகை இணையவழியில் செயலாக்கம் செய்யப்பட்டது.
மத்திய அரசு வலியுறுத்திய மாற்றங்களை 2021- 2022ஆம் கல்வியாண்டில் நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது''.
இவ்வாறு இறையன்பு தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment