தமிழகத்தில் பி.ஆர்க் படிப்புக்கு நாட்டா அல்லது ஜெ.இ.இ. நுழைவுத்தேர்வில் தகுதி பெற்ற மாணவர்கள் சேர்க்கப்பட்டு வந்தனர். இந்த நடைமுறை கடந்த ஆண்டு (2020-21) வரை பின்பற்றப்பட்டு வந்த நிலையில், 2021-22ம் கல்வியாண்டில் பி.ஆர்க் படிப்புக்கான கொள்கை விளக்க குறிப்பில் நாட்டா நுழைவுத்தேர்வில் தகுதி பெற்றவர்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம் என்று அரசு அறிவித்துள்ளது. இதை எதிர்த்து அகடமிக் சொசைட்டி ஆப் ஆர்க்கிடெக்ட் என்ற அமைப்பும், மெய்யம்மை என்ற மாணவியும் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். மனுவில், பிற மாநிலங்களில் ஜெ.இ.இ. தேர்வு எழுதியவர்களும் பி.ஆர்க் விண்ணப்பிக்க தகுதி பெற்றுள்ளதாக அறிவித்துள்ள நிலையில் தமிழகத்தில் நாட்டா தேர்வில் தகுதி பெற்றவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்று கூற முடியாது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், இந்த மனுவுக்கு விரிவாக விளக்கமளிக்கும்படி, ஒன்றிய அரசுக்கும், தமிழக அரசுக்கும், அண்ணா பல்கலைக்கழகத்துக்கும் உத்தரவிட்டார். அதேசமயம், பி.ஆர்க் படிப்புகளுக்கான கலந்தாய்வு தொடங்க உள்ளதால், நாட்டா மற்றும் ஜெ.இ.இ. தேர்வில் தகுதி பெற்றவர்களை கலந்தாய்வில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும். எனினும் வழக்கு இறுதித்தீர்ப்புக்கு கட்டுப்பட்டது. ஜெ.இ.இ. தேர்வில் தகுதி பெற்றவர்களால் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க இயலாததால், ஆவணங்களை நேரடியாக சமர்ப்பிக்க அனுமதித்து கலந்தாய்வில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டு வழக்கு விசாரணையை வரும் 9ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
No comments:
Post a Comment